Saturday, October 3, 2015

சோதோம் மற்றும் கொமேரா - இரண்டு நகரங்களின் நிலவு..

*
ஆசீர்வதிக்கப்பட்ட புன்னகையை அணிகிறது
நிலவொளியில் மிதக்கும் மரங்களின் நிழல்

சமீபமாய் இருளால் அழுத்தப்பட்டு
அணைந்த மெழுகுவர்த்தி சாளரத்தினூடே  புகும்
நிலவொளியில் மிளிர்கிறது

அபத்தங்களின் மேல் அமர்ந்திருக்கும்
சாய்வு நாற்காலியின் இடைவிடாத புன்னகை
இவ்விரவு அறிந்திருக்கவேண்டிய அம்சம்

சோதோமும் கொமேராவும் தரையில்
பரவலாய் உடைந்து கிடக்கின்றன

குளிரால் வியர்த்த போதையின் கோப்பை
நிலவை அண்ணாந்து பார்த்தபடி மயங்குகிறது

மிதக்கும் நிழலின் மரத்தடிகளில்
அமரும் ஒவ்வொரு பறவையும்
தனது கூட்டினுள்ளிருக்கும் விசித்திரத்தை
இரகசியமாய் வைத்திருக்கின்றன

வடக்கிலிருத்து எழும் ஒரு புது நகரத்தின் உதயத்தை
சோதோம் மற்றும் கொமேராவுடன்
ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதில்லை

இப்போதெல்லாம்
மரங்களின் அண்மையில்
அவைகளின் நிழல்கள் மிதப்பதேயில்லை

*

கலாசுரன்

Wednesday, September 30, 2015

என்னை அறிபவன்

*
எனது மனக்கலக்கத்தை
அவன் நன்கு அறிவான்
ஒரு புத்தனின் நாளில் அவன் என்னை
முதல் முதலில்
அந்த போர்க்களத்தில் சந்தித்தான்

எனது எதிரிகளுடன் அவன் புதுவொருவனாக
நின்றுகொண்டிருந்தான்

எனது புன்னகை பொருந்திய போர்முறையை
பாராட்டிக்கொண்டு எனக்குத் தெரியாத
போர்முறைகளை நிகழ்த்தினான்

ஒரு வெற்றியையோ ஒரு தோல்வியையோ
அந்த யுத்தம் இருவருக்கும் தரவில்லை

முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக
யுத்தம் தொடர்கிறது

நான் அதே புன்னகையுடன் ஒருபுறம்
புதுப் போர்முறைகளுடன் என் வாழ்க்கை மறுமுனையில்

எனது மனமகிழ்வை
நிச்சயம் அவன் நன்கு அறிவான்

சக போர் வீரர்கள்:
என்னுடன் அவன் பேசுவதேயில்லை

எனது வெற்றிக்கொடியை பிடித்திருக்கும்
புத்தன் போர்க்களத்தை முத்தமிடுகிறான்

*

கலாசுரன்

Sunday, September 27, 2015

அழுத தினங்களின் சிலுவை

*

அழுத தினங்களின் சிலுவைகளை சேர்த்து
ஆகச் சிறந்த கனவறைக்குள் வைத்திருந்தேன்
ஒரு கிரீடத்தை அனுபவித்திராத
எனது தலைக்கு வலியின் அமானுஷ்யம் பற்றித்
தெரியுமென நான் நம்பவில்லை

கை கால்களைத் துளையிடும் அளவிற்கு
கூர் தீட்டப்பட்ட ஆத்மாக்களின் ஆணிகள்
என்னிடம் மிகுதியாகவே இருக்கின்றன

ஓர் இறுதி இரவுணவை ஏற்பாடு செய்திருக்கிறேன்

என்னுடன் சிலுவைகளில் அறையப்பட வேண்டியவர்கள்
தயாராக இருக்கின்றனர்

எனக்கான முள்முடியைக் கொண்டுவரவேண்டிய ஒருவரை
வெகு நேரமாய் எதிர் பார்க்கிறேன்

வெள்ளிக்காசுகளை வாங்கி
என்னைக் காட்டிக்கொடுத்தவன் நானேதான்

எனது ஆட்சியின் செங்கோல்
துயரத்தில் நடுங்கும்போது
என் கோப்பை நிரப்பப்பட்டுவிட்டது

காட்டிக்கொடுக்கும்போது கொடுக்க மறந்த முத்தத்தை
எனது கண்ணாடி பிம்பத்திற்கு கொடுக்க நினைக்கிறேன்
அல்லது என் மரச்சிலுவைக்கு

அழுத நாட்களை நினைத்து
ஒரு நெடிய பெருமூச்சும்
மிகச் சாதாரண புன்னகையும்
என்னை எட்டிப் பார்க்கின்றன

என்னை நன்கு அறிந்த ஒருவன்
இவ்விரவே என்னை பலமுறை மறுதலிப்பான்

எனது பாவங்களில் அவனுக்கு பங்கில்லை

*

கலாசுரன்

Saturday, September 26, 2015

எஞ்சியிருக்கும் எனது சமுத்திரம்


*

நான் எஞ்சியிருக்கிறேன் உள்வயமாய்

அலைகளற்ற சமுத்திரமாய் இவ்வானத்தை
எடுத்துச்சொன்னது நான் செய்த பெரும் செயல்

நான் பித்து பிடித்தவனாக இருக்க வாய்ப்பில்லை
உள்வயமாய் எஞ்சியிருப்பது
ஒரு பெரும் தவறாக நான் எண்ணவே இல்லை

வானம் அலை எழுப்பும் காலத்தில்
அதுவொரு சமுத்திரமென்று நீங்கள் ஒப்புக் கொள்ளலாம்

உண்மையிலும் உணமையாக உங்களுக்குச் சொல்கிறேன்
அலைகள் மட்டும் ஒரு சமுத்திரத்தின்
சிறந்த அடையாளமல்ல

தயவு செய்து
எஞ்சியிருக்கும் என்னை
எனது வானத்திலேயே புதைத்து விடுங்கள்

*

கலாசுரன்

அயலானின் அஞ்சல்ப் பெட்டி


*

எனது முந்தைய அயலானின் அஞ்சல்ப்  பெட்டியில்
எனக்கான கடிதங்கள் இருந்தன

அண்மையில் அவனிடமிருந்து புறப்பட்டிருந்தேன்

இப்போதைய அயலானின் கடிதங்கள்
எனது அஞ்சல்ப் பெட்டியில் விழுகின்றன

தொடரும் இந்த துரோகத்தை நாங்கள் மூவரும்
சமமாகப் பிரித்துக்கொண்டோம்

ஆனால் நான் இரகசியங்கள் நிறைந்தவன்
அவர்களுக்கு வெளிப்படையான வாழ்கை உண்டு

எனது இரகசியங்களை சுவாசித்து வாழ்கிறேன்

எனக்கு மூச்சடைக்கும் முன்
கடிதங்களை எனக்கு அனுப்புவதை
தயவு செய்து நிறுத்துங்கள்

என் இரகசியங்கள் அண்டங்களை நிறுவும் வலிமை கொண்டவை

அயலான் என்னை அறிந்துகொள்வதால்
எனக்கு நான் கடிதமெழுதும் சுதந்திரத்தை
இழந்து விடுகிறேன்

அவர்களது கையெழுத்தை
நான் அறவதுபோல
அவர்களும் அறிவார்கள்

கடிதங்களுக்காகவே அவர்களுக்குத் தெரியாத
இன்னொரு மொழியை
கற்றுக்கொண்டாகவேண்டும்
என்று நினைக்கிறேன்

எனது வருங்கால அயலானின்
அஞ்சல்ப் பெட்டியில் எனக்கான
வேற்றுமொழிக் கடிதமொன்று இருக்கிறது

*
கலாசுரன்

நதி: சேவை மய்யம்


*

ஒரு நதியை அறிந்துகொள்ள
உங்களை அன்புடன் வரவற்கிறோம்

ஓர் ஒழுக்கத்தின் நதி
தன்னை மறந்து செயல்படுவதை
உறுதி படுத்த
எண் ஒனபதை அழுத்தவும்

ஓர் ஒழுங்கற்ற நதி
தன்னுணர்வோடு செயலிழப்பதை
உறுதிபடுத்த
எண் இரண்டை அழுத்தவும்

ஒரு நதி தனது சேவையை
முற்றிலும் நிறுத்திவிட
எண் எட்டை அழுத்தவும்

பசிகொண்ட நதியொன்றை
அறிந்துகொள்ள
எண் ஏழை அழுத்தவும்

அது உங்களை அதன் ஆழத்திற்கு எடுத்துச்செல்ல
எண் மூன்றை அழுத்தவும்

நீரை மறந்த நதியைப் பெறுவதற்கு
எண் ஆறை அழுத்தவும்

நிம்மதியான நதிகள்
இந்த சேவையில் உட்படுத்தப்படவில்லை

முந்தைய மெனுவிற்கு
எதுவும் அழுத்த வேண்டாம்

வணக்கம்

*

கலாசுரன்

Tuesday, September 22, 2015

அர்த்தமிக்க சந்திப்பொன்று

உயர்ந்த
இலக்கணங்களை
அறியவில்லை

எழுத்துப்பிழைகளை
சொந்தமாக்கிக்கொள்கிறது
எனது கவிதைகள்

ஆரம்பங்களை
விட்டுவிடுங்கள்

இறுதி
ஓர்
அர்த்தமிக்க
சந்திப்பை
நம்மிடயே
அவை
வட்டுச்செல்கின்றன

*
கலாசுரன்

உயிரற்ற எழுதல்


*

நீ
இரவுகளில்
பெரும் அழுத்தத்திற்கு
உள்ளாவாய்

இருள்
உன்னை
நடுங்கச்செய்யும்

எண்ணற்ற
கைகளால்
உனது கழுத்து
நெரிக்கப்படும்

திடுக்கிட்டு
எழும்போது

அனைத்தும்
கனவெனத்தெரியும்போது
நீ அழாமலிரு

ஏனெனில்
எனக்கும்
அப்படித்தான்

ஆனால்
நான் எழுவதேயில்லை

ஏனென்றால்

நான் என்பது
உயிரற்ற
ஒரு வார்த்தை மட்டுமே
*

கலாசுரன்

அனைத்திலிருந்தும்


*

ஆமாம்
இறுதியாக
ஒருவர் தன்னைத்தான் புகுத்திக் கொண்டாக வேண்டும்.
நம்மை மிகத் துல்லியமாக
அழித்தொழிக்கும்
தன்னுணர்வுக்குள்.

ஆகவே
உருவாகின்றன
மதுபானக்கோப்பையொன்றில்
மிதக்கும் பகுத்தறிவற்ற
உருவக எழுத்துக்கள்.

வேதனையின் எழுத்தாளன்
தன் அறையை
அதன் மூலையில்
பெருக்கிக் கூட்டுகிறான்.
அப்படியே அமர்ந்திருக்கும்
காத்திருப்பையும் சேர்த்து.

கருநீலச் சிதறல்கள்
அழுத்தப்பட்டு உருவான
சமுத்திரத்தைப் போன்று
துல்லியமான அத்தருணத்தை
தன்னுணர்வற்று
ஒருவர்
பலமுறை தன்னுள்ளிருந்து
விடுவித்தாக வேண்டும்.

ஆமாம்
அங்கு நிரம்பியிருக்கும்
அனைத்திலிருந்தும்.

*
கலாசுரன்

உயிரின் ரகசியம்.


*
பௌதிகப் பிரபஞ்சப்
பொதுமைகளைப்
பிளந்து

புனைகதைகள்
படைக்கத் தொடங்கியதொரு
விலங்கு

யுகங்களாய்ப்
பரிணமித்துவரும்
அதன் பிரக்ஞையை

எழுத்துக்களில்
நெருடித் திணிக்கிறது
மொழியியலின் நிர்பந்தம்

உருவகங்களென
அந்தரத்தில்
தொங்கவிடப்படுகிறது

பெயரறியா
விலங்கொன்றின்
இனம்புரியா
உயிரின் ரகசியம்...
*
***
கலாசுரன்