Monday, September 21, 2015

அண்டை வீட்டான்


*

அந்த அந்தி அனைத்துமாக இருப்பதை
ஒரு பகலவன் ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை
அதுவொரு நகைச்சுவையின் அந்தி
சுவாரசியம் மிகுந்த பகலிரவுகளை அது மிஞ்சுகிறது
இரவின் எண்ணற்ற நிலவுகள் அதை அறிந்திருக்கக்கூடும்
பார்வை எனது அண்டை வீட்டான்
மிகுந்த சந்தர்ப்பவாதி மற்றும் சமகாலத்துக் கவிஞன்

அந்த அந்தியின் உத்வேகத்தை அவன் மற்றும் நான்
அறிந்திருப்பது இருவேறு கோணங்களைக் குறிக்கின்றன
அயலானின் ஆன்மீகம் நன்கு அறிவேன்
ஒரு மரம் உதிராத தனது வேர்களை அறிவது போல
சபதங்களில் மிகுந்த கவனம் தேவை
இப்பொழுது மற்றும் எப்பொழுதாவது அதே சபதங்கள்
ஓர் அந்தியின் சாபங்களாக மட்டுமே மாற்றப்படலாம்

பகலவர்களின் மரணகாலத்தை மட்டுமே
ஓர் நகைச்சுவையின் அந்தி குறிப்பிடுகிறது

எண்ணற்ற மாலைகளை ஏமாற்றிய சூது அனலாய்ப்
பறந்தபோதும் வேடிக்கையின் அந்திகளை
இரவுகளுக்கோ பகல்களுக்கோ புரியாமல் போய்விட்டது

அண்டை வீட்டான் எதுமறியாமல்
நகைப்பின் அந்தியொன்றை உற்றுப்பார்ப்பதில்
ஆச்சரியப்படவேண்டியதில்லை

நானறிந்த சூழ்ச்சி மிகுந்த அந்தியொன்றின்
நகைப்பிலும் உமிழ்நீரிலும் நஞ்சு நிறைந்திருப்பதை
நான் அண்டைவீட்டானின் அயலானிடம் கூறப்போவதில்லை

இரகசியங்களுக்கு அப்படியொரு வலிமையுண்டு
அது இருதலை வாள் போன்றது இருபுறமும் வெட்டும்
உளறுவதுபோல் குழப்புகின்ற யுக்தி வேறு எதுவும் இல்லை

அந்திகள் அப்படித்தான்
பார்வையின் கையிலிருக்கும் புல்லாங்குழலை
அவை உரிமையுடன் இசைக்கின்றன
ஆனால் அண்டைவீட்டானின் தோகை பொருத்திய
கிரீடத்தை அணிந்து கொள்வதேயில்லை
*
கலாசுரன்

No comments:

Post a Comment