Monday, September 21, 2015

அண்மையின் எழுபதாவது கிலோமீட்டர்

..
*

ஓர் அண்மை என் மீது இறக்கப்படுகிறது
நேரம் பத்து மணி இருபத்தி ஏழு நிமிடங்கள்

இதற்கு முன்பும் பலமுறை அதை
என்னிலிருந்து விடுவித்திருக்கிறேன்

தரை ஓடுகளை அந்தரத்தில் நின்றபடி
தாங்கிக்கொள்கிறது ஒற்றைப் பம்பரம்
அண்மையில் யாரோ ஒருவன்
அதன் சுழற்சியை நிலையாகச் சொன்னான்

வெதுவெதுப்பான அண்மையொன்றில்
நான் நனைகிறேன்
ஏறத்தாழ பத்து மணி பதினாறு நிமிடங்கள்

பின்வருவது தூக்கத்தின் நான்காவது கியர்
மணிக்கு நூற்றிப்பத்து கிலோமீட்டர்

உருக்கமான அண்மையின் கனவுகள் எதுவும் இல்லை
வான தூதர்களற்ற தேவாலயத்தின் மணியோசை
கச்சிதமாக பத்து மணி

மூன்றாவது கியர் மாற்றப்படுகிறது
மணிக்கு எழுபது கிலோமீட்டர்

அண்மைக் கடவுளின் இறக்கைகள் இரவைப் பொதிகின்றன
காலகட்டத்தின் பம்பரம் மனதின் கிளைகளைக் குழப்புகின்றன

நான் நன்கு வியர்த்து விட்டேன்
ஒன்பது மணி முப்பத்தி மூன்று நிமிடங்கள்

ஏதேன் தோட்டத்தின் ஆதிகாலம்
விலக்கப்பட்ட கனியை ஓணான் புசிக்கின்றான்
எலிகள் ஆடை உடுத்திக் கொள்கின்றன
கியர் இரண்டு
மணிக்கு முப்பத்தியாறு கிலோமீட்டர்

பாவமற்ற மனிதர்கள்
ஒன்பது மணி இருபது நிமிடங்கள்

அண்மை கியர் மாற்றுகிறது
கியர் ஒன்று மணிக்கு பதினான்கு கிலோமீட்டர்

எட்டு மணி ஐம்பது நிமிடங்கள்
தூக்கத்திற்கான படுக்கை என் முன் விரிகிறது

அண்மை எனது தலையணையை
கவ்விக்கொள்கிறது

நியூட்ரல்

*

கலாசுரன்

No comments:

Post a Comment