Wednesday, September 30, 2015

என்னை அறிபவன்

*
எனது மனக்கலக்கத்தை
அவன் நன்கு அறிவான்
ஒரு புத்தனின் நாளில் அவன் என்னை
முதல் முதலில்
அந்த போர்க்களத்தில் சந்தித்தான்

எனது எதிரிகளுடன் அவன் புதுவொருவனாக
நின்றுகொண்டிருந்தான்

எனது புன்னகை பொருந்திய போர்முறையை
பாராட்டிக்கொண்டு எனக்குத் தெரியாத
போர்முறைகளை நிகழ்த்தினான்

ஒரு வெற்றியையோ ஒரு தோல்வியையோ
அந்த யுத்தம் இருவருக்கும் தரவில்லை

முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக
யுத்தம் தொடர்கிறது

நான் அதே புன்னகையுடன் ஒருபுறம்
புதுப் போர்முறைகளுடன் என் வாழ்க்கை மறுமுனையில்

எனது மனமகிழ்வை
நிச்சயம் அவன் நன்கு அறிவான்

சக போர் வீரர்கள்:
என்னுடன் அவன் பேசுவதேயில்லை

எனது வெற்றிக்கொடியை பிடித்திருக்கும்
புத்தன் போர்க்களத்தை முத்தமிடுகிறான்

*

கலாசுரன்

Sunday, September 27, 2015

அழுத தினங்களின் சிலுவை

*

அழுத தினங்களின் சிலுவைகளை சேர்த்து
ஆகச் சிறந்த கனவறைக்குள் வைத்திருந்தேன்
ஒரு கிரீடத்தை அனுபவித்திராத
எனது தலைக்கு வலியின் அமானுஷ்யம் பற்றித்
தெரியுமென நான் நம்பவில்லை

கை கால்களைத் துளையிடும் அளவிற்கு
கூர் தீட்டப்பட்ட ஆத்மாக்களின் ஆணிகள்
என்னிடம் மிகுதியாகவே இருக்கின்றன

ஓர் இறுதி இரவுணவை ஏற்பாடு செய்திருக்கிறேன்

என்னுடன் சிலுவைகளில் அறையப்பட வேண்டியவர்கள்
தயாராக இருக்கின்றனர்

எனக்கான முள்முடியைக் கொண்டுவரவேண்டிய ஒருவரை
வெகு நேரமாய் எதிர் பார்க்கிறேன்

வெள்ளிக்காசுகளை வாங்கி
என்னைக் காட்டிக்கொடுத்தவன் நானேதான்

எனது ஆட்சியின் செங்கோல்
துயரத்தில் நடுங்கும்போது
என் கோப்பை நிரப்பப்பட்டுவிட்டது

காட்டிக்கொடுக்கும்போது கொடுக்க மறந்த முத்தத்தை
எனது கண்ணாடி பிம்பத்திற்கு கொடுக்க நினைக்கிறேன்
அல்லது என் மரச்சிலுவைக்கு

அழுத நாட்களை நினைத்து
ஒரு நெடிய பெருமூச்சும்
மிகச் சாதாரண புன்னகையும்
என்னை எட்டிப் பார்க்கின்றன

என்னை நன்கு அறிந்த ஒருவன்
இவ்விரவே என்னை பலமுறை மறுதலிப்பான்

எனது பாவங்களில் அவனுக்கு பங்கில்லை

*

கலாசுரன்

Saturday, September 26, 2015

எஞ்சியிருக்கும் எனது சமுத்திரம்


*

நான் எஞ்சியிருக்கிறேன் உள்வயமாய்

அலைகளற்ற சமுத்திரமாய் இவ்வானத்தை
எடுத்துச்சொன்னது நான் செய்த பெரும் செயல்

நான் பித்து பிடித்தவனாக இருக்க வாய்ப்பில்லை
உள்வயமாய் எஞ்சியிருப்பது
ஒரு பெரும் தவறாக நான் எண்ணவே இல்லை

வானம் அலை எழுப்பும் காலத்தில்
அதுவொரு சமுத்திரமென்று நீங்கள் ஒப்புக் கொள்ளலாம்

உண்மையிலும் உணமையாக உங்களுக்குச் சொல்கிறேன்
அலைகள் மட்டும் ஒரு சமுத்திரத்தின்
சிறந்த அடையாளமல்ல

தயவு செய்து
எஞ்சியிருக்கும் என்னை
எனது வானத்திலேயே புதைத்து விடுங்கள்

*

கலாசுரன்

அயலானின் அஞ்சல்ப் பெட்டி


*

எனது முந்தைய அயலானின் அஞ்சல்ப்  பெட்டியில்
எனக்கான கடிதங்கள் இருந்தன

அண்மையில் அவனிடமிருந்து புறப்பட்டிருந்தேன்

இப்போதைய அயலானின் கடிதங்கள்
எனது அஞ்சல்ப் பெட்டியில் விழுகின்றன

தொடரும் இந்த துரோகத்தை நாங்கள் மூவரும்
சமமாகப் பிரித்துக்கொண்டோம்

ஆனால் நான் இரகசியங்கள் நிறைந்தவன்
அவர்களுக்கு வெளிப்படையான வாழ்கை உண்டு

எனது இரகசியங்களை சுவாசித்து வாழ்கிறேன்

எனக்கு மூச்சடைக்கும் முன்
கடிதங்களை எனக்கு அனுப்புவதை
தயவு செய்து நிறுத்துங்கள்

என் இரகசியங்கள் அண்டங்களை நிறுவும் வலிமை கொண்டவை

அயலான் என்னை அறிந்துகொள்வதால்
எனக்கு நான் கடிதமெழுதும் சுதந்திரத்தை
இழந்து விடுகிறேன்

அவர்களது கையெழுத்தை
நான் அறவதுபோல
அவர்களும் அறிவார்கள்

கடிதங்களுக்காகவே அவர்களுக்குத் தெரியாத
இன்னொரு மொழியை
கற்றுக்கொண்டாகவேண்டும்
என்று நினைக்கிறேன்

எனது வருங்கால அயலானின்
அஞ்சல்ப் பெட்டியில் எனக்கான
வேற்றுமொழிக் கடிதமொன்று இருக்கிறது

*
கலாசுரன்

நதி: சேவை மய்யம்


*

ஒரு நதியை அறிந்துகொள்ள
உங்களை அன்புடன் வரவற்கிறோம்

ஓர் ஒழுக்கத்தின் நதி
தன்னை மறந்து செயல்படுவதை
உறுதி படுத்த
எண் ஒனபதை அழுத்தவும்

ஓர் ஒழுங்கற்ற நதி
தன்னுணர்வோடு செயலிழப்பதை
உறுதிபடுத்த
எண் இரண்டை அழுத்தவும்

ஒரு நதி தனது சேவையை
முற்றிலும் நிறுத்திவிட
எண் எட்டை அழுத்தவும்

பசிகொண்ட நதியொன்றை
அறிந்துகொள்ள
எண் ஏழை அழுத்தவும்

அது உங்களை அதன் ஆழத்திற்கு எடுத்துச்செல்ல
எண் மூன்றை அழுத்தவும்

நீரை மறந்த நதியைப் பெறுவதற்கு
எண் ஆறை அழுத்தவும்

நிம்மதியான நதிகள்
இந்த சேவையில் உட்படுத்தப்படவில்லை

முந்தைய மெனுவிற்கு
எதுவும் அழுத்த வேண்டாம்

வணக்கம்

*

கலாசுரன்

Tuesday, September 22, 2015

அர்த்தமிக்க சந்திப்பொன்று

உயர்ந்த
இலக்கணங்களை
அறியவில்லை

எழுத்துப்பிழைகளை
சொந்தமாக்கிக்கொள்கிறது
எனது கவிதைகள்

ஆரம்பங்களை
விட்டுவிடுங்கள்

இறுதி
ஓர்
அர்த்தமிக்க
சந்திப்பை
நம்மிடயே
அவை
வட்டுச்செல்கின்றன

*
கலாசுரன்

உயிரற்ற எழுதல்


*

நீ
இரவுகளில்
பெரும் அழுத்தத்திற்கு
உள்ளாவாய்

இருள்
உன்னை
நடுங்கச்செய்யும்

எண்ணற்ற
கைகளால்
உனது கழுத்து
நெரிக்கப்படும்

திடுக்கிட்டு
எழும்போது

அனைத்தும்
கனவெனத்தெரியும்போது
நீ அழாமலிரு

ஏனெனில்
எனக்கும்
அப்படித்தான்

ஆனால்
நான் எழுவதேயில்லை

ஏனென்றால்

நான் என்பது
உயிரற்ற
ஒரு வார்த்தை மட்டுமே
*

கலாசுரன்

அனைத்திலிருந்தும்


*

ஆமாம்
இறுதியாக
ஒருவர் தன்னைத்தான் புகுத்திக் கொண்டாக வேண்டும்.
நம்மை மிகத் துல்லியமாக
அழித்தொழிக்கும்
தன்னுணர்வுக்குள்.

ஆகவே
உருவாகின்றன
மதுபானக்கோப்பையொன்றில்
மிதக்கும் பகுத்தறிவற்ற
உருவக எழுத்துக்கள்.

வேதனையின் எழுத்தாளன்
தன் அறையை
அதன் மூலையில்
பெருக்கிக் கூட்டுகிறான்.
அப்படியே அமர்ந்திருக்கும்
காத்திருப்பையும் சேர்த்து.

கருநீலச் சிதறல்கள்
அழுத்தப்பட்டு உருவான
சமுத்திரத்தைப் போன்று
துல்லியமான அத்தருணத்தை
தன்னுணர்வற்று
ஒருவர்
பலமுறை தன்னுள்ளிருந்து
விடுவித்தாக வேண்டும்.

ஆமாம்
அங்கு நிரம்பியிருக்கும்
அனைத்திலிருந்தும்.

*
கலாசுரன்

உயிரின் ரகசியம்.


*
பௌதிகப் பிரபஞ்சப்
பொதுமைகளைப்
பிளந்து

புனைகதைகள்
படைக்கத் தொடங்கியதொரு
விலங்கு

யுகங்களாய்ப்
பரிணமித்துவரும்
அதன் பிரக்ஞையை

எழுத்துக்களில்
நெருடித் திணிக்கிறது
மொழியியலின் நிர்பந்தம்

உருவகங்களென
அந்தரத்தில்
தொங்கவிடப்படுகிறது

பெயரறியா
விலங்கொன்றின்
இனம்புரியா
உயிரின் ரகசியம்...
*
***
கலாசுரன்

உயிர், மரணம் மற்றும் இறக்கைகள்


*

கூட்டுச் சொற்கள்
ஒருபுறம் உயிர்
மறுமுனையில் மரணம்

நன்றாக ஊதவேண்டும்
எண்ணற்ற
ஆத்மாக்களின் மீது

இறந்துபோன
மௌனத்தில்
புதைந்திருக்கும் ஜீவன்

சுற்றி நிற்கும்
சப்தங்கள்
அதிர்வுகளின் கூட்டுத் தொகை

உயிர்
ஓங்கி அறைகிறது மரணத்தை

மரணத்தை
என்றென்றும்
அணைத்துக்கொள்ளும்
ஏகாந்த மௌனம்

மரணத்தின் கூட்டுச்சொற்கள்
உயிர் கொள்கின்றன

இறக்கைகள் அறுபட்டு
விழுகின்ற ஆத்மாக்கள்

ஆலைகளில்
பழுக்கக் காய்ச்சி அடித்து
உருவாக்கப்படுகிறது
புதுக் கூட்டுச்சொற்கள்

பலமாக ஊதவேண்டும்
அறுபட்ட அந்த
இறக்கைகளின் மீது
*

கலாசுரன்

என்ன


------------
*

தேடுங்கள்
நான் அமர்ந்திருந்ததில்லையா
உங்கள்
பயணங்களின் ஓரமெங்கும்

ஏன்
ஒரு ஆச்சரியக்குறியால்
என்னை
தலைகீழாகத்
தொங்க விடுகிறீர்கள்

அவ்வளவு வளைந்த
கேள்விக்குறிகளில்
நான் உங்களைத்தேடி
வந்ததில்லையா

நிச்சயமற்ற மேகமொன்றில்ப்
புதைந்த
நிலவைப்போல
ஏதோ ஒன்று இருக்கிறது

எதற்கும்
எல்லாவற்றிலும்
ஒரு புள்ளியை
வையுங்கள்

அதுவொரு
முற்றுப்புள்ளியாகவேண்டும்
என்ற கட்டாயம்
எனக்கில்லை
*
கலாசுரன்

ஆகாய பறவை


'''''''''':''''':'''''''':''''
நான் நிதானப் படுகிறேன்
ஒரு பறவையின்
சரணாலயத்தைத் தேடி
பயணப்படும்போது.

நான்
நன்கு நிதானப்படுகிறேன்
என்னை
ஒரு பறவையில்
கண்டறியும்போது.

நான்
மிகவும் பரவசப்படுகிறேன்
பறவைகள்
நிதானப்படும்போது.

தென்றலொன்று
புயலென மாறுவதைப்போன்று.

அனைத்து
பறவைகளின் இறகுகளையும் சிதைத்து.
*
கலாசுரன்

அதே காலகட்டம்


*

இன்று
ஒரு பூ மலர்ந்தது

முன்பொரு காலத்தில்
இதே பூ
உதிர்ந்ததை
உங்களுக்கு
நினைவூட்டுகிறேன்

ஆம்
நாம் சந்தித்த
அதே காலகட்டம்

பின்பு
அந்தப் பூவைப் பற்றி
நாம்
பேசிக்கொண்டதே இல்லை
*
கலாசுரன்

சமவெளிகள்


*

சரணாலயங்கள்

அவை
ஏற்கனவே
சிலுவைகளில்
அறையப்பட்டு விட்டன

மௌனத்தை
எப்போது எப்படி
உபயோகிப்பது
என்பதெல்லாம்
தீர்மானித்து செயல்படுத்தவேண்டும்

கதிர்களைக்
கண்டிராத
நீதி தேவதையின் கண்கள்
ஒரு புலப்படாத புதிர்

வியூகம்
அமைக்கப்படுகிறது

அனைத்து
சரணாலயங்களின் மீதும்
அவர்கள்
நிச்சயமாகப் போர் தொடுப்பார்கள்

அடிப்படையான
அத்தனை இயல்பின்மைகளையும்
ஏவிவிடுவார்கள்

சமவெளிகள்
எதிர்ப்பார்ப்பு
ஒரு மகா யுத்தத்தின் பிறகான
களைப்பு

புனிதமற்ற சிலுவைகளிலிருந்து
இறங்கி வரும்
அபத்தங்களின் மீது

மீண்டும்
ஆலயங்கள் தோன்றும்

அங்கு
தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
குழுவாக அமர்ந்து
அதீத மௌனமொன்றின்
உபயோகத்தைப் பற்றி
இழிவாகப் பேசிக்கொண்டிருபார்கள்

சென்று திரும்பும்
சரணாலயங்கள்
சிலுவைகளின் அழுகுரலை
கவனிக்கமாட்டார்கள்

பதிலாக
வேண்டுமென்றே
கவிதைகள் செய்வார்கள்.

*
கலாசுரன்

மானுடச் சிக்கல்


*

அவ்வளவு
ஆவலுடன்
ஒரு மானுடச் சிக்கலைப்பற்றி
நிதானமாகப் பேச நினைக்கிறேன்

எண்ணங்களில்
ஊசலாடுகிறது
நிதானத்திற்குரிய
அத்தனை சிக்கல்களும்.
*
கலாசுரன்

கை எழுத்து


*
சாரல் என்பது
உரத்த குரலில் மௌனிக்கும்
இரவுகளின்
கவிதை.

அதற்கு கீழ்
யாரேனும்
நிச்சயம்
கையெழுத்தொன்றை
பதிவிட்டாகவேண்டும்.
*
கலாசுரன்

திரும்பிப் பார்க்கவேண்டும் என்னும்போது


*

ஓங்கிப் பெய்யவேண்டும்
எனப்படும் ஞானத்தின்
முதல் மழையொன்றை
அனாதியாய்க்
கைவிட்டுச்செல்கிறது
நிர்ப்பந்தமாக்கப்படும்
வாழ்க்கைபயணம்

தவிர்க்க வேண்டிய கட்டாயத்தை
நிச்சயம் நீங்கள் தவிர்ப்பீர்கள்

காரணங்கள்
சாதகபாதங்கள்
மற்றும்
உறுதியான மனதின் இயல்பு நிலை
உங்களிடம்
தாராளமாகவே இருக்கிறது

ஞானத்தின் கதவுகள்
உங்கள் சுதந்திரத்தின் வேட்கையை
ஒருபோதும்
கட்டுப்படுத்த விரும்புவதே இல்லை

அது எப்போதும்
திறந்திருக்கும் என்பதே
புது வேட்கைகளை உங்களுக்கு
திறந்து வைக்கும்
குழப்பத்தின் சாவியாக
உங்களிடமே எப்போதும்
உடனிருக்கிறது.

*
கலாசுரன்

நான் நிற்கின்ற இடம்


*

பார்வைக்கு உட்பட்ட
நான் நிற்கின்ற இடம்

அது பொதுவானது

சூழ்ச்சிகளின்
நிரந்தர அக்கினியில்
தகிக்கின்ற சுபாவம் அதற்குண்டு

பார்வைக்கு உட்படாத
அதே நான் நிற்கின்ற இடம்

அது போதுமானது

சூட்சுமங்களால்
குளிரூட்டப்பட்டு உறைந்து போன
மனச்சாட்சியாக
அது இருந்து வருகிறது

முன்பொரு நாள்
கேள்விப்பட்ட
நான் நிற்கின்ற இடத்திற்கு
இன்னும்
என்னால்
சென்றடைய முடியவில்லை
*
கலாசுரன்

இன்றைய வானம்


*

இன்றைய வானம்
எவ்வளவு யதார்த்தமாய் விட்டது

திரும்ப
பார்க்க வேண்டுமென்று
தோன்றவே இல்லை

*
கலாசுரன்

Monday, September 21, 2015

சூப்


*

நாளும்
சூப் எடுத்துக் கொள்வது
நல்லது

இத்தகையது
என்று எதுவும் இல்லை

சூப்
ஆரோக்கியத்துக்கு நல்லது
என்பதை விட
நான் செய்யும் சூப்
எனக்கு
மிகவும் பிடிக்கி்றது

முல்லை இதழ்கள்
முருங்கை இலைகள்
மேலும் அதன் சிறு தண்டுகள்
கறி வேப்பிலை
முட்டைக் கோஸ்
வெண் பூண்டு
மிளகு, உப்பு
கொத்தமல்லித் தழை
வெங்காயம்
சந்தன இலைகள்
மற்றும்
சிறிது மஞ்சள் தூள்

இப்படி
ஏதாவது ஒரு கலவை

சூப் ;

உருவகங்கள் மற்றும்
படிமங்கள் நிறைந்த
ஒரு கவிதை.
*
கலாசுரன்

அலட்சியத்தின் உவமைகள்


*
அனைத்து
எலும்புகளையும்
நசுக்குகிறது

ஏற்கனவே
மறக்கப்பட்ட
ஒரு
பரம்பரை வாக்கியத்தின்
பின்னரான
ஆச்சரியக்குறி

அனாதியான
ஆனந்தத்தை
ஓர் உன்னத தினத்தின்
வேர்களில் பத்திரப்படுத்துகிறது
சில வேனல்களின் மறுவருகை

காலத்தின் பட்டாம்பூச்சி
அரிதாய் ஒளிர்கிறது

எங்கோ கேட்கும்
மணியோசைகள்
புலம்புகின்றன

சாணையிடப்பட்ட
பேனா நுனியிலிருந்து
ஆச்சரியக்குறிகளைத்
துண்டாக்கும்
பரம்பரை வாக்கியங்கள்
புறப்படுமென்று

எவரோ சொன்னது
நினைவில் வருகிறது

ஓர்
அலட்சியத்தின்
உவமைக்கு ஒப்பானது
அனைத்து எலும்புக்கூடுகளும்

இப்போதைய தேவாலயங்கள்
மணிகளற்றிருக்கின்றன

இரவனைத்திலும்
ஒன்றையொன்று
உரசிப் பற்றிக்கொள்கிறது
நிதானமாய்ச் சொல்லப்பட்ட
அலட்சியத்தின் உவமைகள்
*
கலாசுரன்

புனிதம் அப்படியொன்று


*

ஒரு மிருகம்
தனது வாழ்காலத்தில்
மனிதனாகி விடுவதன்
அபத்தச்சுருள் அவிழ்கிறது

புனிதம்
அப்படியொன்று
இருக்கிறதா என்ற
கேள்விக்கான பதில்
அம்மிருகத்திற்கு நன்கு தெரியும்

வெகுவான நிதானத்துடன்
அந்த மிருகம்
மனித நிலையை அடைய முயல்கிறது

அத்தனை மனிதர்களும்
ஒன்றுகூடி
அதை இரசிக்கின்றனர்

ஒருநாள்
குறிப்பிட்ட மிருகம்
முழு மனிதனாக மாறியபோது

ஒன்று கூடியவர்கள்
புனிதமடைந்து
மிருகங்களாக மாறியிருந்தனர்
*
கலாசுரன்

Duty of those noons


*

How had I missed the last spring
Even it trust my whirlwind

There are some of fan tail reasons
There were some  duty for those noons
They were being me

Oh
no no
Perfectly I forgot to cook
Those evenings

About to spring my spices
Over all seasons in times
I was really seldom care

Hey wheel of times
Free my mind
From this summer stove

Until
My dreams would be vanished.
*

Kalaasuran Phoenix

மொழியின் சொற்கள்


*

மொழியின் கவிதைகள்
ஈடற்று நேசிக்கின்ற சொற்ப சொற்களை
அவர்கள் அறிவார்கள்

நாம்
கவனமாக இருக்கவேண்டும்

உரையாடலை அல்ல
யுத்தத்தை
ஏவி விடுவார்கள்

ஊடகங்கள்
ஒன்று சேர்ந்து
நம்மை ஒத்திகைப் பார்க்க
அழைக்கும்

அப்படி அவர்கள்
நமது வியூக அமைப்பை
எதிரிகளுக்கு
பகிரங்கப்படுத்துவார்கள்

நிச்சயம்
நாம்
கவனமாகக் காத்திருக்க வேண்டும்

யுத்தத்தின்
பேரழிவைப் பகடைத்தாயங்கள்
தள்ளிப்போடுவது பற்றி
தெளிவான அபிப்ராயம்
நமக்கு இருந்தாக வேண்டும்

முக்கியமாக
மொழியின் கவிதைகள்
பாரபட்சமின்றிப் புறக்கணிக்கின்ற
அத்தனைச் சொற்களையும்
நாம்
அறிந்திருக்க வேண்டும்
*
கலாசுரன்

நாம் கொண்டாடிக்கொண்டிருந்த உலகம்


*

என்ன நேர்ந்தது
நமது உலகத்திற்கு
ஏறத்தாழ
துருபிடித்ததொரு
உலகை நாம்
கொண்டாடிக்கொண்டிருந்தோம்

அப்படித்தான்

உலகங்கள் இருந்தாகவேண்டும் என்ற
மின்னும் பிடிவாதம்
நமது
சுபாவமாக
பொருத்தப்பட்டபின்

என்ன
நிகழ்ந்தது
நம் உலகிற்கு

ஏளனம்
நம்மிடையே
நகையாடிச்சென்றதை
முற்றிலும் மறந்து விட்டோம்

ஒரு
பூமத்திய இரேகையை
ஓர் உலகிற்கு
அளிப்பதை விட
அப்படி என்ன செய்து விட்டோம்

என்னவாயிற்று
நாம் சிதைக்க விரும்பிய உலகிற்கு

உலகில்
நட்சத்திரங்களைப் பதியவிட
எவரும்
நம்மை வற்புறுத்தவில்லையே

பிறகு
பூவொன்று மலர்வதை
நாம் அங்கீகரிக்கத் தயங்குவதன்
காரணம்தான் என்ன

என்ன
நிகழ்ந்தது
அந்தப் பூவின் உலகிற்கு
*
கலாசுரன்

சமகாலம்


*

ஏற்கனவே
நாம்
கலந்துரையாடியிருக்கிறோம்

காலம்
பெரும் வழியில் நிற்கும்
யாத்திரிகன் என்று

பிரபஞ்சத்தின் கோண்களை
காலத்தாலேயே
அளக்க முடியுமென்று

எண்ணங்களில்
மற்றும் கனவுகளில் மட்டும்
திரும்பி வருகின்ற எல்லையற்ற காலத்திற்கு காலடித் தடங்கள் உண்டென

நாம்
சாமர்த்தியமாக
ஒப்புக் கொண்டிருக்கிறோம்

காலம் சார்ந்த
அத்தனை இயல்பின்மைகளையும்

நிதர்சன உலகின்
நாகரீகம் சார்ந்த
அனைத்து உபாதைகளையும்

தற்காலிகம் என்பது
எந்தக் கால அளவில்
குறிப்பிட வேண்டும் என்பதை

நாம் கண்டிராத
காலத்தின் வேறு முகங்களை
இன்னொருவர்
கண்டதாகச் சொல்லும்போது

பிரிமுறுக்கம் கொள்கிறது
சுழிமுனை நாடியில்
ஏர்க்கனவே காத்திருக்கும்
ஈரமற்ற வேட்கை

நாம்
கலந்துரையாடுகிறோம்
சமகாலத்தைப்பற்றி

அது
எந்தக் காலத்திலும்
உடப்படாததென்று
*
கலாசுரன்

குறிப்பு


*

ஒரு தேக்கரண்டி கனவு
ஒன்றரைக் கரண்டி திட்டம்
இரண்டு கரண்டி உறுதிச்செயல்
ஒரேயொரு சூரியனின் வெப்பம்
நமச்சலற்ற மனமொன்று
தேவைக்கு
உப்பு கலந்த வியர்வையின் விதி

அவ்வளவு தான்

நிச்சயமற்ற கால அளவு
மற்றும்
ஏதாவது முக்கியமானதொன்றை
இழந்தாகவேண்டும்

பசி இருப்பவர்களுக்கு மட்டும்

அனைத்து
ஒவ்வாமைகளின் சாத்தியப்பாடுகளையும்
பசி மற்றும்
செயலின் கலைச் சொற்கள்
உறுதி செய்யும்

அடிக்கடி
கிளறவேண்டும்
*
கலாசுரன்

கசப்பின் அமுது


*

எண்ணற்ற விதங்களில்
வலிகளைப்பற்றிப்
பேசிவிட்டோம்

வலி
வேறு எதையும் விட
வலிமை மிகுந்ததென
உறுதியாகவே இருக்கிறோம்

மாற்றுச்சிந்தனை எதுவும்
அவ்வளவு பலமாய்
நம்முள்ப் புகுந்ததில்லை

ஏனெனில்
வலிகளை நாம்
ஈடற்று நேசிக்கிறோம்

அவை நம்முடனே
இருக்கின்றன

அதைப்பற்றியே
தியானித்துக்கொண்டு
அப்பட்டமான நெகிழ்வின்
உச்சகட்டத்தை அடைந்து
பெருமிதம் கொள்கிறோம்

இது தேவைதானா
என்ற கேள்வி
நம்மிடமிருந்து
ஒருபோதும் எழுவதே இல்லை

நமது சுகங்கள் நிறைந்த நிலை
மற்றொருவரிடம்
இருப்பதாகவே
ஆழமானதொரு
நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்

சபாஷ்

*
கலாசுரன்

இரவின் மலர்கள்

இவ்விரவில் பூக்க வேண்டும்
எண்ணற்ற மலர்கள்

மலர்கள் என்று சொல்லுவது
ரோஜாக்களை மட்டுமல்ல
அனைத்து மலர்களையும் தான்

மற்றும்
நிறபேதங்களைப் பற்றி
இங்கு
குறிப்பிடவே இல்லை

*
கலாசுரன்

வெப்பச்சிக்கல்


*

என்ன நேர்கிறது
மறந்துவிட்ட நமது
முன்காலத்து ஞாபகங்களுக்கு

பனிக்கட்டிகள் வெப்பமற்றிருக்கிறதென்று
யார் சொன்னது

ஏறத்தாழ
இருநூறு கெல்வின் டிகிரி
வெப்பத்திலிருக்கும் சிந்தனைகளை
கவிதையாக்குவதற்கு
ஒரு ஞாபகத்தின் மனவிலாசம்
போதுமானது

மற்றும்
அதீத வெப்பச்சிக்கலின் பனிக்கட்டியில்
இருந்துகொண்டு
எழுத்தாளனொருவனுக்கு
தனது பேனா நுனியை
மிகச்சாதாரணமாக
வைத்திருக்க முடிகிறது

ஒரே நேரத்தில்
ஜீரோ டிகிரி கெல்வின் வெப்பத்திலும்
அனைத்து நட்சத்திரங்களிலும்
*
கலாசுரன்

சாய்வு நாற்காலி


*

அரியாசனங்கள் காலியான மடியுடன்
காத்திருக்கின்றன

அமர்க வாழ்க

அது ஆபத்தானதல்ல

அதன் மேல்
ஊதுகின்ற மரணம்
தனது
இறுதி வாக்கியத்தை
உச்சரிக்கிறது

அரியாசனங்கள்
நிரம்பி நிமிர்கின்றன

நெரிசலில்
எரிச்சலடையுங்கள்

ஓர் அரசு
தனது அரியணையை
எரித்து விடுகிறது

ஜனநாயகம் வாழ்க

ஓர் அரசாங்கம்
தனது மக்களை
மறந்து விடுகிறது

எவருக்கும்
இளைப்பாறுதல் அளிக்காத
சாய்வு நாற்காலி
*
கலாசுரன்

ஒரு மரம் அறிவது


*

ஒருவரின் நயவஞ்சகம்
வெகுவாக மிளிர்கிறது

ஒரு வளர்பிறை இரவில்
ஒரு மரத்திற்கான
கதகதப்பு நிராகரிக்கப்படுகிறது

நஞ்சில் தோய்த்த போர்வையொன்று
வஞ்சத்திற்குள்ளாகும்
அனைத்தின் மேலும் போர்த்தப்படவேண்டும்

ஒரு நயவஞ்சகம்
தன்னை உருவாக்கிக் கொள்வதில்லை

உற்று நோக்கும் பகல்களில்
ஒருவன் தூங்குகிறான்
அவனது எதிரிகளின் பேரழிவு
அவனைத் தாலாட்டுகிறது

சூது தெரியாதவன் ஒருவனின்
பீதிகொண்ட இரவைப்போல
உருக்கமானது
மரமொன்றின் ஈடற்ற மௌனம்

நிச்சயம் ஒரு மரம் அறிந்துகொள்கிறது
வஞ்சகர்களின் இதயத்தில்
புதைந்திருக்கும் பேரபத்தத்தை

*
கலாசுரன்

விசாரணைக்கு உட்படாத குற்றங்கள்


*

என்றோ ஒரு நாள் நாம் சொல்லிக்கொண்டோம்
இதழ்களற்ற பூ

நம் எண்ணங்கள்
அளவற்ற உப்பின் தன்மைகளைக் கொண்டுள்ளன

விசாரணைக்கு உட்படாத
குற்றங்களைச் செய்தது
காலம் தான் என்று நினைத்தோம்

அனைத்து குற்றங்களையும்
மரங்களற்ற கிளையொன்று
ஏற்றுக்கொள்ளும்போது
சிரமமான உரையாடல்கள்
சற்று மௌனித்தன

வேறெங்கும் வேர்கள் பரப்பாத காற்றை
சுவாசிக்க மறுப்பது
ஒருவகைக் கடின சபலத்தின் உப்பற்றல்

அடுத்த காலை
பூக்களால் நிரம்புமென்று
முணுமுணுக்கும் புது நிலத்தை
என்ன செய்வது

நாம்
இன்றிரவே இதழ்களில் பரவும்
பிரிவின் உலர்தலை
எப்படியாவது
பனி படர்ந்த குற்றங்களின் கிளைக்கு
எடுத்துச் சொல்ல வேண்டும்

மன்னிப்பற்ற துல்லியமான பாவங்களை
இப்பனியிரவுகள் உறையச் செய்கின்றன

என்றோ ஒருநாள்
நாம் நிராகரித்துவிட்டோம்
வானதூதர்கள் அறிந்திராத புண்ணியச் செயல்களை
*
கலாசுரன்

நான் அமர்ந்த புல்வெளிகள் எங்கே


*

ஆச்சரியங்கள் நிறைந்த
எனதிந்த சமகாலத்தை என்ன செய்வது

பழுக்கக் காய்ச்சிய
உலோகக் கம்பியொன்றை
குளிர்ந்த என் மனதின் மேல்
வைத்தே ஆகவேண்டுமா

ஓர் உன்னத இருளில்
என்னை உற்று நோக்கும் கண்கள்
அதீதமாய் பிரகாசிக்கின்றன

பேசும் மொழி
தனது உரையாடல்களை சபிக்கின்றன
நலம் உண்டாவதாக என்று

நானமர்ந்த புல் வெளிகள் எங்கே

இரு தினங்களில்
இந்த சமகாலம் முடிந்துவிடும்

ஒரே நேரத்தில் குளிர்ந்த மனதின் மேல்
இருவேறு சமகாலங்கள் அமர்கின்றன

நெடிய அபத்தங்களுக்குப் பின்
உலோக மணிகள் ஓலமிட்டன

அசரீரி ஒலிக்கிறது
சென்று வாருங்கள்
திருப்பலி நிறைவேறிற்று
*
கலாசுரன்