Thursday, December 18, 2014

உன்னுடனான ஒவ்வொரு சூழலிலும்..

*
உனது எதிர்பார்ப்பின்
கனவுகளை உடைப்பதாக
இருக்கக்கூடும்
சில போழுதுகளிலான
அவள் பேச்சு

தொடக்கம் எதுவாகவும் இருக்க
அனுமதிக்கிறாள்

அவை
புலன்களுக்கான உணவு
மற்றும்
சில யதார்த்தங்கள்

அச்சூழல்களின் அழகை
சிறிதளவு சொல்வதில்கூட
புறக்கணிக்கப் படுவதுண்டு
உனக்கான சுதந்திரம்

யோசனைகளின்
எல்லையில்
ஒரு புள்ளியாய் நின்றபடி
மௌனமாய்ச் சொல்கிறாள்

உன்னுடனான
ஒவ்வொரு சூழலிலும்
கொடூரமான
ஒரு அபத்தம்
ஒளிந்திருப்பதை
அவள் காண்கிறாள் என்பதாக..
 *

கலாசுரன்

பெயரற்ற அந்தகாரம் ..

*
சாய்வு நார்க்காலிகளிலான
தொடக்கப் பெடுமூச்சுகளில்

முழங்கும் தேவாலையத்தின்
மனியோசைகளில்

ஒட்டுமொத்த விரக்தியின்
அங்கலாய்புகளில்

முரட்டுத்தனமான
உங்கள் பொறாமைகளில்

ஒருவரை
சாத்தானின் முத்திரை குத்தி
அந்தகாரத்திற்குள்
தள்ளியிருப்பீர்கள்

பிறகு..

அந்த அந்தகாரத்தினுள்ளிருந்து
அழுகையும்
பற்கடிப்பும் கேட்பதாக
இன்னொருவரிடம் சொல்லிவிட்டு

மிகவும் சப்தமாகச் 
சிரித்துக் கொள்கிறீர்கள் 
ஒரு கொடிய 
சாத்தானைப் போல..
*
***
கலாசுரன்

வாழ்கையின் அணையா தீ..

*
கண் முன் நின்ற 
கனவுகளை
வாழ்கையின் 
அணையாத் தீயிலிட்டு 
எரிக்கிறேன் 

உருகும் 
மெழுகென 
வழிகிறது
புது உருவகங்களின்
நிழல்கள்

எதுவும்
புரிந்துகொள்ள
முயலாத கண்களை
அணிந்து கொள்கிறேன்

நாகரீகங்களை
இப்படித்தான்
படைக்க வேண்டுமென்று
ஒரு உள்மனத்துடிப்பு
இருந்தபோதும்

கெக்கலிக்கும்
மனதின்
மரணப்படிமங்களை

மௌனம் பரவிய
உறக்கத்தின்
அந்தகாரத்தில் இருந்துகொண்டு

வாழ்க்கையின்
அணையாத் தீயிலிட்டு
எரித்துக்கொண்டிருக்கிறேன்

ஒரு
அகோர சூனியக்காரனின்
தோரணையோடு..

*
***


நிழல்வானம் ..

*
நிழல்களே
நீங்கள் 
உருவங்களின் பின்னால் 
ஒளிந்து கொள்ளாதீர்கள் 

அவர்களை விட்டு 
விலகிச் செல்லுங்கள்

வானம் நிரம்ப
சுதந்திரமாக..

பிரகாசமாக 
சிரித்துக்கொள்ளுங்கள் 
மிக சூட்சுமமாக ..
*
***
கலாசுரன்.

எழுத்து..!

*
நீரூற்றி வளர்க 

துளிர் விடு 

பூத்துக்குலுங்கு 

உதிர்ந்து விழு 

கனி ஏந்து

விதை போடு 

அதை நடு

கவிதை எழுது 

நீரூற்றாதிரு 

துளிர் ஒடி 

கவிதை எழுது..
*
***
கலாசுரன்..


விருப்பத்தின் சாத்தியப் பாடுகள்

*
விருப்பத்தோடு  
பார்க்கவரும் 
ஒவ்வொருவரின் பின்னாலும் 

நிழல் போல
அணிவகுத்து நிற்கிறது 
அவர்களது 
விருப்பங்கள் 

அவ்விருப்பங்கள்  
ஒவ்வொன்றிற்கும் இணங்க 
எண்ணற்ற வேண்டுதல்கள் 
விளையாட்டுப் பொருட்களென
கண்முன் 
அடுக்கப்படுகின்றன 

சுற்றும் 
பார்த்துக்கொண்டிருக்கும் 
சிந்தனையின் 
சுவர்களற்ற 
சாளரக் கதவுகள் 

மார்பில் 
கைவைத்து 
உருக்கமாகப் 
பிரார்த்தனை 
செய்யத் தொடங்கின..

அழகின் 
சாத்தியப் பாடுகளை 
சித்தரிக்கும் 
மனது 

அவ்விளையாட்டுப் பொருட்களை 
துன்புறுத்தும் 
ஒரு 
இயல்பற்ற 
குழந்தையைப் போல 
சிரித்துக்கொண்டிருக்கிறது.. 

*
***
கலாசுரன் 


பிற்பகல் திருட்டு

*
இச்சிறிய 
பிற்பகலை 
எங்கிருந்து 
திருடிவந்தாய் 

எனக்கும் 
தேவைப்படுகிறது 
உன்னிடமிருக்கும் 
வெயிலற்ற பிர்ப்பகல் போன்ற ஓன்று 

இப்பொழுது 
என்னிடமிருப்பது 
கனவுகளற்ற 
ஒரே ஒரு 
பின்னிரவு மட்டும் தான்

சுவரங்களின் படுக்கை 
நசுங்குகின்றது  
*
***
கலாசுரன்


அவனாக நின்ற அது ..

*
நாளடைவில் 
அது 
அவனுக்குத் 
தெரியவந்தது 

அனைவரும் 
அதை 
தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டனர்

அதைப் போன்று 
அவனும் 
எவருக்கும் 
புரியாத ஒன்றாக 
பரிணமித்தான்

எவருக்கும் 
தெரிந்துகொள்ள முடியாததாய் 
அனைவருக்கும் முன்

அவனாக நின்றது 
அது..
*
***
கலாசுரன் 

நினைவுகளில் நனைந்திருக்கும்..

*
நீ 
ஊட்டிய 
நிலாச்சோறும் 
முலைப்பாலும் 
வெண்மை நிறைந்ததாக 
இருந்தன 
உன் மனம்போல 

கண்ணே 
எனக்கொஞ்சும் 
உனக்கு 
கண்கள் நான்கெனக் 
குழந்தைகள் 

உயிர் தந்த 
தகப்பனின் 
தொடையில் 
தலை சாய்க்கும்போதேல்லாம் 
வீரம் தளும்பும் 
தர்ம்மத்தின் கதைகள் 
ஆயிரம் மலர்வதுண்டு..

அவைகளில் 
தூக்கத்தில் விழுந்து 
வால் வெட்டப்பட்ட 
மனிதக் கதைகள் 
ஏராளம் 

சோம்பலில் 
எதையோ நினைத்து 
இருவரும் 
நிரந்தரமாகத் 
தூங்கிவிட்டீர்களே.. 

இனி 
கனவுகள் எங்களுக்குப் 
பாலூட்டும் 
வாழ்க்கை தன்
கதைகள் சொல்லும்

காற்றைப் பருகியவாறு 
ஒரு உருளை 
நிலாச் சோறுக்காக 
வாய் திறந்து 
எங்களை நாங்களே 
ஏமாற்றிக்கொள்வோம்..

கதைகளின் 
வெட்டப்பட்ட 
வால் நுனிகளை 
தனிமையிலான 
சிந்தனைகளில் 
தேடிக்கொண்டிருப்போம் 

தருணங்கள் 
அனைத்தும் 
உங்கள் 
நினைவுகளில் 
நனைந்திருக்கும்..
*
**
கலாசுரன் 

நதியென ஒழுகும் குருதி ..

*
கைப்பிடி 
அலறி அழுதது 

மிளிரும் 
கூர் முனை நெடுக 
வியர்வை 

வேகமாய் வீசி 
கல்லாய்ப் போனது 
கோடரியின் தனிமை 

காலிலிருந்து 
நதியென 
ஒழுகும் 
மரக் குருதி ..
*
***
கலாசுரன் 

சுடலை ராத்திரியில்

*
பிணமெரியும் சுடுகாட்டின் 
தீயில் குளிர்காய்வது 
சிந்தனைகளுக்கும் 
சுடலை நெடுகக் காட்டுத்தனமாய் 
ஓடிக்கொண்டிருக்கும் 
வாலில் தீப்பிடித்த குட்டிப் பிசாசுக்களுடன் 
நிதானமாகப் பேசுவது 
மனதிற்கும் பிடிக்கிறது 
தேவைகளற்று இந்த ராத்திரியில் 
மந்திரங்கள் நச்சரித்துக்கொண்டிருக்கின்றன...
*
***
கலாசுரன் 

நிழலற்றதொரு சூரியன்..

*
கட்டிலின் ஓரங்களில் 
சிதறிக் கிடக்கிறது 
கனவுகளின் எச்சம் 
காலூன்ற மறுக்குமென்
விடியலை நான்காய் மடித்து 
சட்டைப் பையில் பத்திரப்படுத்துகிறேன் 

சாலையோரச் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறது 
நிழலற்றதொரு சூரியன்..
*
***
கலாசுரன் 

சவம்

*
பனியென உறைந்து கிடக்கும் என்னை 
ஒரு மரத்தை கொலைசெய்துருவாக்கிய 
பெட்டியினுள் வைத்ததுடன் புதைக்கவோ 
இல்லையேல் இன்னொரு மரத்தை
கொலைசெய்துன் முற்றத்திலடுக்கி 
அதன் மேல் படுக்கவைத்தென்னை
நெருப்புக்கு உணவாக்கவோ தீட்டப்ப்படுமுன்
திட்டங்களை அறிகிறேன் 
என்னுயிர் பேதலித்தலைந்துன் 
பாதையில் தடியெனக்  கிடக்கிறது,
சவம்
*
***
கலாசுரன் 

உலக மொழி

*
ஒரு தனி மரத்தடியில் 
வெகு நேரமாக விளையாடுகிறேன் 
சருகுகளைக் கோர்த்து 
புது வடிவங்களுக்கு உரு கொடுக்கிறேன்  
அம்மரத்தை கைகளால் அணைத்தபடி 
சுற்றி வருகிறேன் 

தரையில் படுத்தபடி 
கனவுக்குள் புகுந்து 
நிலவை ஒரு பந்தெனத் தட்டுகிறேன் 
அழுமந்த நிலவிடம் 
சத்தம் போடாதே என்ற வாறு 
கையால் உதட்டை மறைத்துக் காட்டுகிறேன் 

கண் கூச விடிந்த சூரியனிடம் 
பேசவே மாட்டேன் என்பது போல் 
திரும்பி நிற்கிறேன் 
முன் நிற்குமென் நிழலை 
ஆட்காட்டி விரலை அசைத்தபடி 
மௌனமாகக் கடிந்து கொள்கிறேன் 

சட்டென 
என் நிழலெழுந்து
என்னைச் சுற்றி
பறக்கிறது

இனி
கனவுகளைக் கொஞ்சுமென்
மௌனங்களனைத்தும் 
பல்லாயிரம் துகள்களாக
சிதறிவிட நேரலாம் ..

*
*** 
கலாசுரன்


*
உடலில் ஓடும் நதிகளை
ஒவ்வொன்றாக நசுக்கி 
மனக்கடலினடியில்
எறிந்துகொண்டிருக்கிறான்

தாயொருத்தி ஆறுதலுக்கு நீட்டிய 
பிச்சைப் பாத்திரத்தை 
உடைத்தெறிய புதுவிதமானதொரு 
முகபாவத்தை அணிந்தபடி 
விழியோங்கி நிற்கிறான் 

தாயவளுக்கு நிம்மதி 
படைப்பு மிகவும் 
விசித்திரமானதாக இருக்கிறது 

அவள் தன்னிலிருந்து 
தன் உடலைப் பிடுங்கி 
குவித்துப்போட்டு எரிக்கத் தொடங்கினாள்
*
***
கலாசுரன் 
*
மன்னித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது 
எனதிந்த மனதின் சிந்தனைகளை 
அவை தற்செயலானவை என்பதற்கேற்ப 
ஆதாரங்களை வரிசைப்படுத்துகிறேன் 

எனக்கு நானே அமைத்துக்கொள்ளும் 
சட்டதிட்டங்களைக் கூட 
என் மனத்தால் எளிதில் மீறமுடிகிறது

உள்ளுக்குள் பட்டறையிட்டிருக்குமொரு 
சாத்தானை அடிக்கடி பின்னிரவின் கனவுகள் 
எட்டிப்பார்ப்பதுண்டு 

அவன் முன்னால் வைத்திருக்கும் 
கனல் பிழம்பில் கட்டுண்டு கிடக்கும் 
என் நிழல் மீளப்போவதில்லை  

மன்னித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது 
எனதிந்த மனதின் சிந்தனைகளை 
*
***
கலாசுரன்