Friday, January 3, 2014

வார்த்தைகளின் அகோரம்

*
உன் பொருட்டு உன்னைக் காணுதல் போல 
கண்ணாடி பிம்பங்களை அணுகாதிருத்தல் போல 
இடைவிடாது நீ உன்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல 
உனதிந்த குரலை ஓயாமல் நீ கேட்டுக்கொண்டிருக்கிறது போல 
வெளிவிட்ட பெருமூச்சை திரும்பவும் சுவாசித்தல் போல 
திருப்தி அளிக்காததாயிருக்கிறது 
எனக்காக நீ வைத்திருக்குமிந்த வார்த்தைகளின் அகோரம் 
*
***
கலாசுரன் 

பூனைகளின் வால்

*
அவன் வரையும் பூனைகளுக்கு 
பொருத்தப்பட்டிருந்ததெல்லாம் 
யானை வால்கள் தான் 

அதன் காரணத்தை கேட்டபடி 
நின்றுகொண்டிருந்த பார்வைகளை 
அவன் பொருட்படுத்துவதே இல்லை 

வழக்கம் போலவே 
அவன் இன்னொரு பூனையை வரைந்தான் 
அதன் வாலும் பூனை வாலாக இருந்தது 

அதை எவருமே கவனிக்கவில்லை 
*
***

தகித்துக்கொண்டிருந்தது பகல்

மண்ணில் விழுந்து 
தகித்துக்கொண்டிருந்தது 
பகலின் கோரப்பார்வை 

எட்டி நடக்க எத்தனிக்கும் கால்கள் 
சுட்டெரிக்கும் 
கனல் மணல்ப் பரப்பில்  
கரை தேடி மடியட்டும் 

பிடிமானங்களை நசுக்கி 
நச்சரிக்கத் தொடங்கியது 
காலத்தின் கருவறையில் 
அமிலத்தை ஊற்றும்  
பொறுமையின் சிறிதான மரணம் 

நதியொன்றோ
நிழல் மரமொப்ன்றோ 
லட்சிய்யத்தின் எல்லையாகத் 
தொடர்கிறதிந்த
பாலைவனப் பரவசங்கள்..
***
கலாசுரன் 
*
ஞாபகங்களிலிருந்து நலிந்து 
மெல்லமாய் தேய்ந்து போகிறேன் 
இன்னொருவன் என்கிற நான்

அலைமோதுமொரு பனிச் சாரலை
வெண்பனி போர்த்திக்கிடக்குமிந்த
யாருமற்ற வெளியிலிருந்தபடி
கவனித்துக்கொண்டிருக்கிறேன்

தென்றலுடன் சேர்ந்தாடும் மனதை
தேநீர்க்குவளை ஒன்றில்
நேற்றிரவே ஊற்றி வைத்திருந்தேன்
அதன் வெபபமின்னும் ஆறாமலிருக்கிறது

சாம்பல் நிறமுடைய ஒரு அதிகாலையின்
விடைபெறுதலுக்கு முன்
யாரேனும் அதை பருக நேர்ந்தால் நன்று

விரல்கள் மெல்லமாய் உருவாக்கிவைத்ததிந்த
சிறு தடாகத்தில் சிரித்துக்கொண்டிருந்த  முழுநிலவு
மேகப்போர்வையை இழுத்து மூடிப் படுத்துக்கொள்கிறது

காட்சியின் பிரம்மிப்பிலுடைந்து கொண்டிருந்தது
இரவிற்கும் எனக்குமான இடைவெளி

சற்றும் காயப்படாமலிருக்கட்டுமிந்த இருள்...
***
கலாசுரன்

பொறுமையின் தொடுவானத்தை 
அனல் பறக்கும் வெயில் நாளொன்றின் முடிவை 
அர்த்தமற்றிருக்கும் சுதந்திரத்தின் மறுபரிசீலனையை 
ஆதிக்கசத்திகளின் வயோதிகத்தை 
வறுமையின் ஒட்டுமொத்த அழிவை 
ஒரு தனிமனிதனின் விடுதைலையை 
நெடிய காத்திருப்பொன்றின் எல்லையில்
எதிர்பார்த்திருக்குமொரு போராளியின் மனதை 
விடுகதைகளின் மரமெனச் சொல்லி 
வெட்டி சாய்த்தாய், 
விடைகள் உனக்கும் நன்கு தெரியும் 
பாகுபாடுகளில் இவ்வுலகம் வெடித்து சிதறட்டும் 
உனக்கென்ன வந்துவிடப்போகிறது ?

இராத்திரியின் சக்கரங்கள்

*
இன்று, இப்பொழுது, இங்கு
இயந்திரத்தின் மனசாட்சி ஒன்றை
ஒளியில் ஒட்டி
எனக்கு முன் வைத்தது
மின்னணுக்களின் அசுரப் பயணங்கள்

அதை
அழுது தீர்த்திராத இந்த இரவின் தனிமையிலிருந்தவாறு
என்னுடனே வந்து கொண்டிருக்கும்
இருளிற்கு பரிசளித்தபடி
யாத்திரைகள் நீடிக்கின்றன

வேகமாகச் சுழலும் இரு சக்கரங்களை
எனது கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறேன்

பாதுகாவலற்ற
மனதின் இன்பத்தையும்
இனம் புரியாததொரு பயத்தையும்
இந்த இரவிற்கு வரமெனக் கொடுத்தது யார்..?

பார்வையற்றிருக்குமிந்த
கொடூர இராத்திரியின் சக்கரங்கள்
ஓய்வற்று சுழல்கின்றன ...
***
கலாசுரன்

மதுபானக் கோப்பை

*
ஒவ்வொரு மதுபானக் கோப்பையும்
பருகும் முன்
திடமானதொரு தீர்மானத்தை
நெற்றி நடுவில் வைக்கிறேன்
"இது தான் இந்த வாழ்கையின்
கடைசி மதுபானக் கோப்பை"

இது எத்தனை தீர்மானத்திற்குப்
பிறகானதென்று தெரியவில்லை

சரி
அதுவெல்லாம் இருக்கட்டும்
இது தான் உண்மையிலேயே
இந்த வாழ்கையின்
கடைசி மதுபானக் கோப்பை

இடது கையின்
இரு விரல்களுக்கிடையே
சிக்கியிருந்த சுருட்டு
வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கியது...

புகை உருவில்
ஆத்துமங்கள் பல
கண்முன் நெளிகின்றன
***

கலாசுரன் 
*
பகல் முழுதும்
பலரது வாழ்க்கைகள்
ஏங்கி நின்றன

வந்தார்கள்
வாசிக்க மேலெழும் பார்வை
கைவிட்டுசெல்ல கீழ் நோக்கும்
அரைப்பார்வை

கைவிட்டபின்
கை நனைத்துச் செல்கிறார்கள்

இந்த உண்டியல்
இரவு வரும் சில தெரு நாய்க்களின்
பசியையாவது போக்கும்

"எச்சில் இல்லை
இங்கே போடவும்"

இனி வாசிக்க வேண்டாம்..
***

கலாசுரன்*
அலையெனத் திரண்டேறும் 
கனல் கோபுரமொன்று 
உயர்ந்திடக் கண்டேனுனது 
விழிகளின்னோரமாய் 

மனதோரமாய் நட்டிருந்த 
எனதுயிரின்று சிவந்திட்டதொரு 
இலையுதிர் காலத்தின் 
தொடக்கமென்பதைப்போல்

வீண் முயற்சிதான் இதுவெனத் 
தெரிந்துமிப்போதும் 
சுமூகமானதொரு சந்திப்பை மெல்ல 
உன் முனனால் நகர்த்துகிறேன் 

துரோகம் தானுனது
கோபத்தின் காரணமெனத் 
தெரியுமென்பதாலுனக்களிக்க
காரணங்களேதுமென்னிடமில்லை

தவறவிட்ட சந்தர்ப்பங்களை 
திரும்பிப் பார்க்கும்போதுன் எதிர்பார்ப்பின்
கனவு மேடைகளை சிதைத்த 
தருனங்களென்னை கூர்ந்து பார்கின்றன 

நகைப்பேதும் சிதறாதிருக்குமிந்த
நொடிப்பொழுதுகளென்னை 
சப்தமற்றிருக்கச் செய்யுமொரு 
வாய்ப்பூட்டு மந்திரம் 

மழை நேராக் காலமொன்றில் 
புகுந்திருக்கும்போதெனக்கு
நிரந்தரமானது 
நிரந்தரமின்மை மட்டுமே  

நிகழுமெனில் 
உனது மனதோரமாய் 
எனதுயிரை பெயர்த்து நடு

மழை பெய்யட்டும் ..
***
கலாசுரன் 

விரல்கள்

*
எனது வலது தோள் பட்டையில்
கட்டைவிரலொன்று
முளைத்தது

முதலில் அது ஒரு
விரலெனபதை ஒத்துக்கொள்ள
மிகவும் சிரமப்பட்டேன்

பிறகு
அதிலிருக்கும் நகத்தை வைத்து
அது ஒரு விரல் தானென்று
நிர்ணயித்தேன்

பின்
அதன் தைவீகம்
என்னவென்று
தேட ஆரம்பித்தேன்

அது ஒரு சாதாரண விரலென்று
நினைத்து பார்க்க கூட
என்னால் முடியவில்லை

அசைவற்றிடுக்கும் அதை
அசைக்க பலமுறை முயற்சித்தேன்
அது அசைவற்றே இருந்தது

எனது சட்டையை
அது ஒரு புறமாய் இழுத்துக்கொண்டிருந்ததால்
அதை வெட்டி எறிய யோசனைகள் வளர்ந்தது

அது என்னுடையது என்பதால்
அந்த யோசனைகள்
கருகத் தொடங்கின

அது அப்படியே இருக்கட்டுமென்று
விட்டுவிட்டேன்
நாளடைவில் அதை நான் மறந்தேன்

இப்பொழுது எனது
இடது தொளில் ஆட்காட்டி விரலொன்று
முளைக்க ஆரம்பித்திருக்கிறது...
***
கலாசுரன்

மிக்க மகிழ்ச்சி ஜெயசீலன்... உங்கள் கூர்ந்த அவதானிப்புக்கு... :)

அதை அதன் பிம்பங்கள் அறியாமல்

*
அது வரும்போது
அதை ஆரவாரத்துடன்
நாம் வரவேற்கிறோம்.

அது நம்
மூளைக்குள் சென்று எல்லாவற்றையும்
சீரழிக்கிறது.

அது
எந்த விதத்திலும்
அர்த்தமற்றிருந்தபோதும்
அதை நாம் அதீதமாய்
அரவணைத்துக் கொள்கிறோம்.

அதன் பற்கள்
நுனி கூர்ந்து வளைந்து
கொடூரமாக காட்சியளித்தபோதும்

முகத்தின் தசைகள் இழுபட
அதை
சாதாரணமான ஒன்றாக
நாம் அணிந்து கொள்கிறோம்.


அதன்
பிரதிபலிப்பை
மானுடத்தின் முக்கிய முத்திரையாக்குகிறோம்.
வேறொன்றிற்கும் அம்முத்திரை இல்லை என்கிறோம்.

இரவுபகல் பாராமல்
அதை நினைத்து அல்லது
சொல்லிக்கொண்டு
ஆனந்த பெருமிதம் கொள்கிறோம்..

அதன் சாட்டை நுனிகளால்
உயிரற்றதும் உயிர்கொண்டதும்
கிழிக்கப்படுவதை தடுக்க முற்படாதிருக்கிறோம்...

அதை
மிகச் சாதாரணமாக
நகைச்சுவை என்றழைக்கிறோம்...

*

கலாசுரன்...


ஒன்றும் சொல்வதற்கில்லை

*


இக்கடந்த காலத்திற்கும்
மிதந்து வந்த அனுபவங்களுக்கும்
பதுங்கியிருந்த கனவுகளுக்கும்
இன்னும் எழுதப்படாத கவிதைகளுக்கும்
மிச்சம் வைத்துச் சென்ற ஆசைகளுக்கும்
பரிசீலனை செய்யப்படாத வாக்குவாதங்களுக்கும்


ஒன்றும் சொல்வதற்கில்லை


அதிர்ந்து கொண்டிருக்கும் மௌனங்களுக்கும்
மரணித்துப்போன ஞாபகங்களுக்கும்
இதுவரை பிறந்திராத சிந்தனைகளுக்கும்
பசுமையிழந்த ரசனைகளுக்கும்
பாரபட்ச மற்ற மரணங்களுக்கும்

எதுவும் சொல்வதற்கில்லை

கனவுக்குள் சுழலும் விழிகளுக்கும்
தகர்ந்து போன மனக் கோட்டைகளுக்கும்
நாளை விடிவதால் உதிக்கவிருக்கும் கதிரவனுக்கும்
பகல் நேரத்து நிலவிற்கும்

எதுவும் சொல்வதற்கில்லை

காரணங்களுக்கும்
காரணிகளுக்கும்
காத்திருப்புகளுக்கும்
ஆறிடாத காயங்களுக்கும்

ஒன்றும் சொல்வதற்கில்லை

விதிவிலக்கற்ற எதோ ஒன்றான எனக்கு
சொல்லவந்ததனைத்தும் புதைத்து வைக்க 
அதிர்வுகளற்றதொரு மௌனம் தேவைப்படுகிறது

இனி
ஒன்றும் சொல்வதற்கில்லை
***

கலாசுரன்


*
உலாவும் உயிரொன்று 
என்னருகில் வந்தது

அதன் இரு கைகளும் 
துண்டிக்கப் பட்டிருந்ததால் 
கண்களால் வணக்கமொன்றை 
எனக்களித்து நகைத்தது 

அதன் வருகையின் காரணங்களோ
அதன் துண்டிக்கப்பட்ட கைகளின் கதைகளோ 
எனக்கேதும் புரியவில்லை

இருந்துமெனது நகைப்பால் 
வரவேற்றமரச் செய்தேன் 

இருவரின் குரல்களும் நொறுங்க ஆரம்பித்தன

அதன் கடைக் கண்களில் மகாப் பிரளயமொன்று 
சலனமற்று பதுங்கியிருந்ததபோதும் 
எனது வினாக்களுக்கான பதிலலைகள் 
செவ்வனே மோதத்தொடங்கின

சூக்குமங்களாயிரம் தெரிந்ததோர்
ஞானியைப் போலிருந்ததந்த
உயிரின் நடவடிக்கைகள்

இடைப்பொழுதில் ஓய்வெனப்
பேச்சற்று நின்றதொரு
தருணத்தின் கதவை
ஓங்கியறைந்ததிந்த காலகட்டம்

எனது கைகள்
விரல் நுனிகளிலிருந்து
உதிரத்தொடங்கின ...
***
கலாசுரன் 


இரகசியம்

*
அன்றெனது மௌனத்தில்
பதுக்கிவைத்ததிந்த இரகசியம்

அதைப் பற்றி சொல்லும்போதே
அதன் பாதுகாப்பு உடைந்து உதிர்கிறது

அதென்னவென்று உங்களைப்போன்று
பலர் விசாரித்துக்கொண்டிருக்கின்ற்றனர்

அவ்விசாரனைகள் அதை
தொடர்ந்து ஒரு இரகசியமாக காப்பாற்றி வருகின்றன

ஒரு இரகசியத்தை காப்பாற்றுவது எப்படியென்று
அந்த இரகசியத்திற்கே தெரியாதபோது

அதற்க்கான சாட்சியங்களும்
அதை ஏளனம் செய்யக்கூடும்

சிலநேரம் உன்னைப் போன்று தான் நானுமென்று
அதென்னை அதட்டுவதுண்டு

அத்தருணங்களில்
விழாமல் நொறுங்குகிறது இரகசிய சாட்சியமொன்று

ஓசைகளற்ற உங்களது விழிகளின்
கேள்விகளுக்கான பதில்களுக்காக விழிமூடுகிறேன்

மூழ்கடிக்கப்பட்ட காகிதக் கப்பலைப் போன்று
ஈரம்பெற்றிருக்கிறதந்த இரகசியம்

ஓசைகளாலோ எழுத்துக்களாலோ
வெளிப்பெடுத்த முடிவதில்லை இவ்வகை இரகசியங்களை

எனது இரகசியத்தின் பட்டறையில்
அமர்திருக்கும் உங்களுக்கு

நான் சொல்ல நினைப்பதெல்லாம்
ஒரு இரகசியத்தை காப்பாற்றுவது எப்படி என்பதே
***
கலாசுரன்

  


எனது மனது


*
என் மனம்
என்னை 'நீ' என்றே அழைக்கிறது.

அது இன்னொரு நபராக என் முன் நிற்கிறது
அது சொல்வதை எனது நாவும் உச்சரிக்கிறது
அதன் கட்டளைகளுக்கு இணங்க
என் உடல் நடந்து கொள்கிறது .

சாக்கடையில் விழுந்தெழும்பிய
ஒரு வேதாளம் போல் என்னை அது 
முழுதும் அழுக்காக்குகிறது.

அதற்கு 'நான் யார்?' எனத் தெரியுமா என்பதைவிட
நான் யாரென எனக்கிப்போது நிச்சயமற்றிருக்கிறது.

அதை கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும்
அதனிடமே கேட்கவேண்டியிருக்கிறது.

அவ்வேதாளத்தை அரசாட்சி செய்யும் விதத்தில்
இன்னொரு வேதாளம் என்னிடம் இருந்திருக்க வேண்டும்.

அது எந்த சட்டங்களுக்கும் உட்படாமல் இருக்கிறது
எனவே
விதிகளுக்கும் அது கட்டுப்படுவதேயில்லை.

அது-
என்னை குழப்பமடையச் செய்கிறது
பயமுறுத்துகிறது
மயக்கத்திலாழ்த்துகிறது
கற்பித்து முட்டாளாக்குகிறது.

இன்னும்
எண்ணற்ற கோணங்களில்
அது-
தன்னைக்கொண்டு நிரப்புகிறது.

பின்-
அதண்ணை கருணையின்றி
'நீ' என்றழைக்கிறது.
 ***
கலாசுரன்

புனிதமான தூக்குமேடைகள்

*
இடது கண்ணிலிருந்து 
கனவொன்றைக் 
கிள்ளி எறிந்தேன் 

கன்னம் வழி 
கீழ் நோக்கி 
ஊர்கிறது 
இரண்டு சோகங்கள் 

தற்கொலை தான் 
முடிவென 

ஒன்றுசேரும் 
தாடையின் மத்தியில் 
தொங்குகிறது 
தூக்குமேடையோன்று 

அது 
எவ்வளவு 
புனிதமானதாக இருக்கிறது 

*
***
கலாசுரன்