Thursday, January 17, 2013

கவனம்..சப்தம் .

*
கொடிய அழுத்தம் நிறைந்த 
பகல்களால்
நசுக்கப்பட்ட இரவு இது

நீங்களும் நானும் 
மௌனத்தை தரையில் விரித்தபடி 
அதன் மேல் உட்கார்திருக்கிறோம் 

இங்கு எங்காவது 
சப்தமொன்று பதுங்கியிருக்கக் கூடும்  ..
கவனம்..

ஒலியின் அதிர்வலைகளில் 
மோதிப் பிளவுறக்கூடுமிந்த 
இரவின் கவசம் 

வெடித்துச் சிதற காத்திருக்கும்
அடர்த்தி மிகுந்த இந்த இருள் 
சிதறுமாயின்

பல பகல்கள்
சோக வெப்பத்தில்
சிதறிவிடக்கூடும்

உங்கள் கழுத்தில் பொதிந்து வைத்திருக்கும் 
ஓசையின் யாழினை 
உங்கள் மூச்சுக் காற்றால் கூட 
தீண்டாதிருங்கள் 

ஒரு முறை கூட எச்சரிக்கிறேன் 
கொடிய அழுத்தம் நிறைந்த 
பகல்களால் 
நசுக்கப்பட்ட இரவு இது..
***

கலாசுரன்

தலைகீழ் தாகம்

*
கண்ணீர் நனைந்த
உனதிந்த  கால் தடங்களை 
பலமுறை
கடந்து சென்றிருக்கிறேன்  ..

ஒரு வேழாம்பலைப் போல் 
எனது தாகத்தை
மழைக்காலத்திற்காய்
சேமித்து வைக்கிறேன்..

என்
தலைமேலான 
கூரையிலிருந்து ஒய்வில்லாது
உனது  
புன்னகைகள்
உடைந்து
என் முன்னால்
விழுந்துகொண்டிருக்கின்றன

கவனமாயிரு
இனிவரும் மழை
மேல் நோக்கி
பெய்யக்கூடும்  
*
***
கலாசுரன்

 

Thursday, January 10, 2013

ஏதேனும் ஓன்று

 *
கண்ணீரோடு விதைப்பவர்கள்
பேரானந்தத்தோடு அறுவடை செய்கிறார்கள்


மௌனத்தோடு தனது 
கண்ணீரை விதைத்துக்கொண்டிருக்கிறான் ஒருவன் ...

அவர்களைப் போன்றோ
அவனைப் போன்றோ அல்லாது
நானிருக்கிறேன் என்றபோதும்
எனது சாளரங்கள் மூடியிருந்தபோதும்

திறந்த வாசலைத் தவிர்த்து
ஏமாற்றங்கள் எனது வீட்டின்
சுவருடைத்து வருகின்றன

நான்
விதைப்பதா?
அறுப்பதா?
இந்த
ஏமாற்றங்களுடன் சேர்ந்து
இவ்வீட்டை இடிப்பதா?

சொல்லுங்கள்..
***

கலாசுரன்Tuesday, January 8, 2013

நிழல் படைக்காததொரு நெருப்பு

*
நேற்றெனது புத்தகங்களில் 
பதுக்கிவைத்த 
நிழல் படைக்காததொரு நெருப்பை 
உற்றுப்பார்க்கிறேன் 

அது சாரமற்றுப் போயிருககுமிந்த 
நிமிடங்களின் கடைவிழிகளில் 
மிளிர ஆரம்பித்திருக்கிறது

இனிவரும் நகைச்சுவை நிறைந்த 
நாளொன்றின் இறுதியில்  
அதுவொரு மின்னலாகவோ

அல்லது எனது புத்தகங்களில் 
விரக்தியுடன் உட்கார்ந்திருக்கும் 
எழுத்துக்களின் இருள் நிழலில் 
ஒரு மின்மினியைப் போலவோ 
வேகமாக கடந்து செல்லக்கூடும்

கட்டமைப்புகளில் சிக்குண்டு 
உடைத்தெறியப் படுமொரு 
ஞாபகத்தை 
உங்களுக்கு 
பரிசளிப்பதில் சற்றும் 
குறை வைப்பதில்லை
ஒரு தனியறை பதுக்கி வைத்திருக்கும் 
கறை புரண்டதொரு நெருப்பும் 
எரிக்கப்பட்ட அப்புத்தகங்களின் சாம்பலும் ...
...
***
கலாசுரன்Sunday, January 6, 2013

அறிமுகத்தின் முகம்

*
ஒவ்வொரு முறையும்
எனக்கே என்னை
அறிமுகப்படுத்தும்
அவர்களை
எனக்கு
நானே அறிமுகப்படுத்தப் போகிறேன்.

என்னை நானே
பைத்தியம் என்றழைக்க
கட்டாயப்படுத்தாதீர்கள்.

அது உங்களிக்கு
இழுக்கான ஒன்றாக இருக்கக்கூடும்.

காரணம்
உண்மையிலேயே
எனக்கு பைத்தியம் பிடித்தபோது
அவர்கள் மட்டுமே
என்னுடன் இருந்தார்கள்.

அவர்கள் ஒருபோதும்
உங்களை எனக்கு
அறிமுகப்படுத்தியதே இல்லை..
**

கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6144

மீண்டும் அழு

*
சாக்கடையின் 
அலைச் செதுக்கல்களில் 
அறுபட்டு 
மடிகிறது 
பூந்தென்றல் ஓன்று 

காலம் தனது சோம்பல் முறிப்பதுபோல் 
மலர்கள் 
வாடி 
இதழ்கள் உதிர்கின்றன 

மென்மை  தனக்குரிய 
திடப்பொருளை விழிநீராய்
சொட்டச் சொட்ட

அந்த 
அலைச் செதுக்கல்களின் மேல்
வாடாத நினைவுகள்
ஊசலாடுகின்றன. 
*
***
கலாசுரன் 
Friday, January 4, 2013

கைப்பிடி அளவு மனது

*
என்னிடமிருந்த  
கைப் பிடி அளவு 
மனதை 
உலகத்தின் மீது 
தூவுகிறாள் 

விழும் 
இடமெல்லாம் 
அழகு 

சிகரங்களிலிருந்து 
குப்புர

பள்ளங்களில் 
நிரம்ப

கடல் மேல் 
காதலின் கைரேகைகள் 

என்றும் போல் 
அவள்.. 

ஆணி வேரோடு 
பிடுங்கப்பட்ட நான் 
தரையில் முகம் சாய்த்து 
அழுகிறேன்..
*
***
கலாசுரன் .

கவிதைகளின் உரிமம்

*
அப்புத்தகத்தில் 
வெற்றுத் தாள்களென 
மூடிவைத்த பக்கங்களில் 
உருவமற்று ஒளிந்திருக்கும் 
கவிதைகள் எனதென... 

எழுதப்பட்ட பக்கங்கள் 
எனதல்லாதற்று விழுகிறதந்த
வாசகனின் கண்களில் 

புரளி பேசிப் பயணிக்கும் 
உனதிந்த ஆட்காட்டி விரலின் 
அசைவுகளில்  பதிந்து 
அழிந்து விடுகிறதெனது
கவிதைகளின் உரிமம்..
*
***
கலாசுரன்