Thursday, December 27, 2012

கொக்கு..

*
ஓய்வற்றுத் தூங்கும் ஞானத்தை 
தட்டி எழுப்ப, பின் வாசலின் 
சட்டத்தைப் பிடுங்கி எடுத்து 
வருகிறேன்.. 
இனி ஒரே அடி 
எழும்பும் அல்லது 
நிரந்தரமாகத் தூங்கிவிடும்.
இருளில் குளித்து கறுத்துப்போன 
கொக்கிற்கு தான் ஒரு 
காகம் என்ற நினைப்பு..
*
***
கலாசுரன் 

நல்லது ..

*
நல்லது
அப்படியே செய்துவிடலாம் 

இல்லைஎன்றாலும் 
பரவாயில்லை 

நல்லபடி 
இருக்கட்டும் 

நல்லது 
இப்படி
முடித்துவிடலாம் 

நல்லது 
நல்லது 
*
***
கலாசுரன் 
சனி இரவுகள்

 *
நகர்ந்து செல்லும்
தனித்த மரங்களைப் போல
எங்கும் மனிதர்கள்.

சில மரங்களில்
வாதை கூடியது போல
சிகைக்கு
திமிர் வாதம் பிடித்திருக்கிறது.

இரவுகளில் அவை
கொம்புகளென
சீவப்படுகிறது.

இதுவரை ஊதாப்படாத
குழல்களில் அவர்கள்
மலர்கள் அணிவிக்கிறார்கள்.

தனித்த மரங்கள்
இந்த இரவில் ஓன்று சேர்ந்து
கபால அறைக்குள்
பேய் பிடித்தாடுகின்றன...
*

கலாசுரன்

அபாயங்கள் ஏராளம் உண்டுபோலும்
அதோ என்னவள் எத்தனை வளைவுகள் ..

ஒற்றைச் சாவி

*
அழகற்றதொரு குவியலிலிருந்து 
எனது மனச் சீவல்களை 
ஒன்றின்மேல் ஒன்றாக
சீரமைத்துக் கொள்கிறாய் 
என் வீட்டு அலமாரிப் புத்தகங்களை 
அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்

அப்புத்தகங்களை குலைத்து நீ 
குவித்துப் போடுகிறாய்.. 
மனதை ஒரு முறைகூடத் திறந்து பார்க்க 
ஆசைப்படுகிறது கதவிழந்ததொரு அலமாரியின் 
ஒற்றைச் சாவி 
*
***

கலாசுரன் 

சலனமின்மை


*
இணை பிரியாதிருந்தபடி
மழையென அழுது முடிந்ததிந்த இரவும் நானும்

இடைவிட்டுப் பார்த்திரா மௌனமது
இதழோரமாய் கசிந்துகொண்டிருந்தபோது
நானுமொரு இரவு மழையைப் போல்
முகம் துடைத்து
எழுகிறேன் இந்த காலை வேளையில்

வானச் சுவர்களுடைத்துப் பாயுமிந்த
சிந்தனைகளை கட்டுண்டு நில்லெனச் சொல்வதில்லை
எனதென பெருமைபாராட்டுமிந்த மனம்

வெற்றிடத்தில் சிதறி நிற்கும் காட்சிகளை
ஒன்றிணைக்க எத்தனிக்காதிருக்குமிந்த
கருவிழிகளின் சலனமின்மை
மகா நரகத்தின மந்திர வாயிலென்கிறேன்

விழிகளிலிருந்து கீழ்நோக்கி
சோகம் பாய்ந்து சென்றிருக்குமந்த
வடுக்களில் ஊர்ந்துகொண்டிருக்கிறது
சில மௌனித்த ஞாபகங்கள்

ஒருபோதும் நானந்த மயானங்களில்
செல்வதில்லை என்றபோதும்
மயானங்கள் என்னை நோக்கி வருகின்றன

எனது மரணம் மட்டும்
சற்று தள்ளி நின்று
விசித்திரமாய் நகைத்துக் கொண்டிருக்கிறாள்
***

கலாசுரன்Sunday, December 23, 2012

நிழல்

*
நீயும் நானும்
நம்மைப் போன்று சிதைந்துபோன
மனித உருவங்களும்
இனிமேலும் எனது கனவுகளில் கூட
வராமலிருக்கட்டும் என்கிறேன்

இந்த இதமான
பிரிவை மட்டும் நிச்சயம்
பத்திரப்படுத்தவேண்டும் என்கிறாய்

மரணம் பரவி நிற்கும் உனதென்ற மௌன வெளியில்
அலைந்து கொண்டிருக்கிறது
தலையற்ற நிழலொன்று
****
கலாசுரன்

Tuesday, November 27, 2012

ரோமன் கத்தோலிக்கத் தெரு

 *
இதுவொரு
பங்குனி மாதத்தின் மத்திய இரவு
மொட்டை மாடியிலிருந்து பார்க்கும்போது
மௌனத்தின் பாரமேறி கிடந்திருந்தது
ரோமன் கத்தோலிக்கத் தெரு.
கண்ணிமைக்காமல் இருந்தது நிலவொளி.

மென்மையானதொரு மௌனத்தை
வருடத் தொடங்கின தென்னை மர ஓலைகள்.
கனம் மிகுந்த ஒரு  காகிதத்திலிருந்தபடி
புன்னகைக்கும் ரவிவர்மனைப் போன்றிருந்தது 
நிச்சயமாகச் சொல்லப்படவேண்டிய இந்த இரவு காலம்.
சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம்
உத்தரவாதமற்ற உரையாடலொன்றை
உற்றுப்பார்த்தபடி விழித்திருந்தது.
இனி வரவிருக்கும் மேகங்கள்
பகல் புரட்சிகளின் காய்ந்துபோன ரத்தத் துளிகளை
உவமைப்படுத்தும்படியிருக்கும்.
இக்கடந்த பகலில்
பாரபட்சமின்றி வீசப்பட்ட வசைச் சொற்களின் உராய்வால்
பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது
ரோமன் கத்தோலிக்கத் தெரு.
பாரசீகம் சார்ந்ததொரு மணல் பரப்பில்
ஒட்டகமொன்றின் மேலேறிப் பயணிக்கும்
கழுதையைப் போன்றிருக்கிறது
எனதிந்த நிழல்.
தெருவோரம் வாதை கூடியிருக்கும் அந்த
நீர்மருது மரத்தின் கிளையில்
வானதூதனொருவன் அமர்ந்திருக்கிறான்.
உடலைப் பறிகொடுத்த பெண்ணொருத்தி
அதை தனது குடிசைக்குப் பின்னாலிருக்கும்
கிணற்றுக்குள் தேடுகிறாள்.
ரோமன் கத்தோலிக்கத் தெரு சாம்பலாகிவிட்டது.
தெரு நாய்கள், ராத்திரியின் குழந்தைகள்
நெடிய பாடலொன்றை பாடுகின்றன.
ரோமன் கத்தோலிக்கத் தெருவின்
எறிந்த எலும்புகளை வானதூதன்
எடுத்துச் செல்கிறான்.
எனது நிழல் களைப்புற்று
மண் சுவரொன்றில் சாய்ந்து உட்கார்ந்தது.
மேகம் விழுங்கிய நிலவு
விழிகளை மூடிக்கொண்டது.
ரோமன் கத்தோலிக்கத் தெரு
ஒன்றுமில்லாததாக ஒரு வெற்றிடமாக்கப்பட்டது.
அதை அங்குள்ளவர்கள்
அடுத்த நாள் தேடட்டும்.
எனது பாதத்தடியில் அதன் சாம்பல் ஒட்டியிருக்கிறது.
ஒருபோதும் அழிக்கமுடியாத
கரியதொரு மச்சத்தைப் போல.
*
கலாசுரன்.


Wednesday, November 14, 2012

சிலுவைகளின் மரணம்.

*

எனக்கு மட்டுமல்ல
இன்னும் பலருக்குத் தெரியும்
அதை நீங்கள் ரகசியமாய்
என்ன செய்தீர்கள் என்று.

முதலில் அதற்கு
புண்ணியவான்களின்
மேல் சட்டையை அணிவித்தீர்கள்
பிறகு கந்தலாடை ஒன்றை.

அது எதற்கும்
மறுப்பு தெரிவிக்கவேயில்லை
பிறகு கோபத்தின் கூர்முனைகொண்ட
இரும்பாணிகளால் அதை
ஒரு சிலுவையில் அறைந்தீர்கள்.

அது இறந்துவிட்டது 

ஒரு பொறாமையின் ஈட்டியால்
அதன் விலாப்பகுதிகளை
சிதைத்தீர்கள்

அனைத்தும் அதன் ரத்தத்தால்
ஈரம் பெற்றிருக்கிறது
எல்லாம் நிறைவேறியிற்று
என்கிறீர்கள்


இறந்து போன அதற்கு
உங்களில் ஒருவனின்
சாயல் இருப்பதை
எவரிடமும் சொல்லாமல்
மறைக்கிறீர்கள்


அது
அறையப்பட்ட சிலுவையின்
மர இதயத்திலிருந்து
கண்ணீரும் ரத்தமும்
வழிந்துகொண்டிருக்கிறது

அச்சிலுவையின் உயிர்
இலகுவாகப் பிரிகிறது.

சிலுவையில் அறையப்பட்ட அது 

இப்போது உயிர் பெற்றுவிட்டது.

வாசனைப் பொருட்களால்
கவசம் செய்து அச்சிலுவையை 

எவரும் பயன்படுத்தாத கல்லறை ஒன்றில்
அடக்கம் செய்யுங்கள்.

மூன்றாம் நாளில்
சாதாரணமல்லாதது எதுவும்
நிகழப்போவதில்லை

இதையமற்ற சிலுவை ஓன்று
இரும்பு ஆணிகளால் அறையப்பட்டு
கொல்லப்பட்டதென்று
ரத்தத் துளிகள்
சாட்சி சொல்லப்போவதுமில்லை.

முகங்களற்ற
மரச்சிலுவைகளின் மரணத்தை
மிக சாதாரணமாக
கடந்து செல்கிறீர்கள்.

 *

கலாசுரன் 

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6057