Monday, March 28, 2011

அது ஒரு மூங்கில் காடு

*
அது ஒரு
அடர்ந்த 
மூங்கில் காடு

பனி சூழ்ந்த 
காலமொன்றை 
மெல்லமாய் முத்தமிடுகிறது 
காற்று 

இலைகளின் 
வியர்வைத் துளிகள் 
வார்த்தைகளென 
ஒவ்வொரு கீற்றிலும் வழுக்கி

நிலம் சேர்வதற்குள் 
எழுதும் 
கவிதைகள் பல 

சிக்கிக்கொண்டபின் 
மீட்சியின் வழிதெரியாது 
திணறித் தவிக்கிறது 
கவிஞன் எனப்
பெயர்கொண்ட 
நிழலொன்று

பாதைகள்
நிலைகுலைந்து 
விழுந்தன..
*
***
கலாசுரன்.

நன்றி உயிர்மை, உயிரோசை 

சாளரங்கள்

*
ஒரு 
மேசையின்
மேல்ப்பகுதியை 
முன்வைத்தபடி 
அமர்ந்திருக்கிறேன் 

அதன் முகத்தில்
ஒன்றின் மேல் ஒன்றாக 
பல சாளரங்களை 
இரு விரலசைவுகளில் 
திறந்து வைக்கிறேன் 

புனைவுகள் 
சித்திரங்கள் 
வரலாறுகள் 
சிந்தனைகள் 
தகவல்களென 

ஒவ்வொரு சாளரமும் 
தங்களை 
அறிமுகப் படுத்திக்கொண்டன 

எதிலும் 
திருப்தி வராத மனமுமாய் 
திறந்தவை 
ஒவ்வொன்றாய் 
மூடிவிட்டு 

மேசை முகத்தையும் 
கீழிழுத்து 
மூடினேன் 

சலிப்புடன் 
திரும்பிப் பார்க்கிறேன் 

திறந்திருக்கும்
என் வீட்டுச் சாளரம் வழியாக
எட்டிப்பார்த்த 
நட்சத்திரங்கள் 
குதூகலமாகக் 
கண் சிமிட்டின..
*
***
கலாசுரன்
நன்றி திண்ணை 


Sunday, March 20, 2011

உயிரின் ரகசியம்.

*
பௌதிகப் பிரபஞ்சப் 
பொதுமைகளைப்
பிளந்து 

புனைகதைகள்
படைக்கத் தொடங்கியதொரு 
விலங்கு

யுகங்களாய்ப் 
பரிணமித்துவரும் 
அதன் பிரக்ஞையை 

எழுத்துக்களில் 
நெருடித் திணிக்கிறது 
மொழியியலின் நிர்பந்தம் 

உருவகங்களென
அந்தரத்தில் 
தொங்கவிடப்படுகிறது 

பெயரறியா 
விலங்கொன்றின் 
இனம்புரியா 
உயிரின் ரகசியம்...
*
***

கொடிய பின்னிரவு

*
பகல்களில் 
தேன் வழிய 
மலர்ந்த கனவுகள் 

எண்ணற்ற சிந்தனைகளில் 
மடிந்து பிறக்கும் 
தென்றலின் கோபுரங்கள்

எண்ணித்துணிந்த
முடிவொன்றில் 
சிதறும் 
ஞாபகங்கள் 

இசையின்றித் 
தாளம்போடும் 
உணர்வற்ற பாதங்களின் 
விரல்கள் 

தேய்ந்துபோனது 
ஆயிரம் 
நினைவோட்டங்களின் 
மனதோர வடுக்கள் 

பின்னிரவில் 
இவையனைத்தும் 
ரத்தம் சொட்டச் 
சிவந்திருந்தன..
*
***
கலாசுரன் ..

Monday, March 14, 2011

.என்னை ...நீ ... உன்னால் முடிந்தவரை..

*
உன்னை
குரூரமான
ஆரவாரத்தோடு
சூழ்ந்து கொண்ட
இந்த இரவு மழையை

எவருக்கும் தெரியாமல்
இரு கைகளிலும்
ஏந்திக்கொள்கிறேன்

முன்வரும்
மின்னலின் ஒளியில்
அது
மிளிர்கிறது

பின்வரும்
இடியோசையில்
அது
அதிர்கிறது

அதில்
எவ்வித நிழலும்
விழாதபடி
மறைத்து வைத்திருக்கிறேன்

உனது பிரக்ஞை 
காகிதமெனக் கிழித்து
என்னிடம்
தூதனுப்புகிறாய்

மழையற்ற
இரவொன்று உன்னிடம்
பத்திரப்பட்டிருப்பதாக..

அந்த
இரவின் மின்னல்கள்
ஒளியற்றும்
இடியோசைகள்
சப்தமற்றும்
இருப்பதாக..

அந்த இரவின்
கோப்பைக்குள்
வெகுளித்தனமான
நிழல்களை
ஊற்றி வைத்திருப்பதாக..

மற்றும்
அந்தக் கோப்பையை
மீதமின்றி
சுவைத்துப் பருகுவது
உனக்கு
மிகவும் பிடித்திருப்பதாக...
*
***
கலாசுரன்.
நன்றி கீற்று 

கருணையின் பொட்டலம்

*
சற்று முன்
உங்கள் முன்னால்
வைத்துச் சென்ற 
கருணையின் பொட்டலத்தை 
திறவாதிருங்கள்

அதனுள் 
சதாகாலமும் 
இளித்துக்கொண்டிருக்கும்
விலங்கொன்றை 
பதுக்கி வைத்திருக்கிறேன் 

அது 
உங்களை 
எதுவும் செய்து விடலாம் 

அப்படி 
உங்கள் முன்னிருக்கும் 
கண்ணாடி பிம்பத்தில் 
அது 
நிரம்பி நிற்கக்கூடும் 

பிறகு 
அதை 
அடிக்கடிப் 
பார்க்கவேண்டுமென்ற ஆசை
உங்களை
துரத்திக்கொண்டே
இருக்கும்..

கவனம் ..!
*
***
கலாசுரன்
நன்றி உயிர்மை உயிரோசை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4103

Sunday, March 6, 2011

சொல்லவந்த மௌன்னங்கள்


*
சொல்லவந்த 
மௌனங்களுக்கு 
தங்களைப் பற்றி 
சொல்வதற்கு 
ஏராளம் இருந்தது 

இருந்தும்  
அவைகள் 
தங்களின் 
மௌனத்தன்மையை 
விட்டுக்கொடுக்காதிருக்க 

அவை 
மௌனங்களாகவே இருந்தன 

அவைகளை 
மொழிபெயர்க்கும் 
கனவுகளிலும் 
ஓயாமல்
ஒலித்துக்கொண்டிருந்தது  
நச்சரிக்கும் சிந்தனைகள் 

இதயத்தை 
நெடுகப் பிளந்தது.. 
மலர்ந்துகொண்டிருக்கும் 
ஒரு பூவின் 
வெடிப்புச் சப்தம் 

மௌனங்கள் 
மௌனங்களாகவே 
இருக்கட்டும் 
என்பதை 


எவரிடமும் சொல்லாமல்
மௌனம் 
நிலவுகிறது 
*
***
கலாசுரன்