Monday, February 28, 2011

நயவஞ்சகத்தின் வலி ..

*
இதழோரப் புன்னகையிலிருந்து
பிய்த்தெடுத்த 
கனவொன்றை 
விழியம்பால் 
சிதைக்க 
விருப்பமின்றி 
மூடிக்கொள்ளும் கண்கள்

உச்சாடனம் செய்ய முடியா
வார்த்தைகளின் விம்மல் 
ஒளி நடுவிலான 
புள்ளி இருளாய்  
பிரகஞ்ஞையின் தாள்மேல் 
பத்திரப்பட்டிருக்கிறது 

தொலைவற்று 
கண்ணெதிரில் விரியும் 
சலனமற்ற வானில் 
வழிநீர் படைத்த 
தீத் துளிகள் 
ஓய்வில்லாது
ஓடுகின்றன  

இரத்த நாடிகளை 
முறுக்கேற்றி 
வேகமாய்ப் 
பயணிக்கும் குருதி 
நயவஞ்சகத்தின் 
வலியை
பக்கவாட்டில் 
சிதறச் செய்கிறது..

அணுவணுவாய் 
சிதைந்து 
உதிரும் 
சிந்தனைகளைப் 
பெருக்கி 
மதியற்ற மனம் 
தன்னையே 
வலிக்கச் செய்கிறது 

இன்னுமொரு 
நயவஞ்சகத்தின் 
வலி 
குற்றுயிராம் 
இம்மனத்தை 
முற்றிலும் 
கொன்றுவிடும் 

பிறகு 
பைத்தியமென 
இவ்வுலகம் சிரிக்கும் 
கூடவே 
கொலை செய்யப்பட 
இந்த மனமும்..
*
***
கலாசுரன் 

Sunday, February 27, 2011

பக்கங்கள்..

*
உனது 
ஒவ்வொரு 
பக்கங்களிலும் 
ஒருவரை 
நீ பதிவிட்டுக்கொள்ளும்போது

எனது 
பக்கங்களிலிருது
ஒருவரை 
அழித்துவிடுகிறேன் 

உனது 
பக்கங்களில் 
என்னைத் தேடி 
புரட்டிப் பார்க்கையில் 

எனது 
பக்கங்களை 
ஒவ்வொன்றாய்த் 
தொலைத்து விடுகிறேன்..

நீ
கானல்களின் மத்தியில் 
நீர் தேடும் 
மான் ஒன்றை 
இறுதிப்பக்கத்தில் 
எனக்காக 
பதிவிட்டிருக்கிறாய்

விலை 
ஐந்து ரூபாய் ..!
*
***
கலாசுரன்.. 

பாதையோர பிரபஞ்சங்கள்..

*
பாதையோரமாய் 
கசங்கிக் கிடக்கிறது 
யாரோ ஒருவர் 
தவறவிட்டுச் சென்ற 
பிரபஞ்சமொன்று 

அதனுள் நிரம்பி நிற்கும் 
அழச் செய்த 
ஆதங்கங்களை 
சமுத்திரத்தின் 
பேரலைகளோடு
ஒப்பிடலாம் ..

நிஜ உலகின் 
பூவொன்று 
மலரும் அதிர்வில் 
துகள்களாகச் 
சிதறிப்போனது  
அண்ட சராசரத்தின் 
பெரும் பகுதி ஓன்று..

***
கலாசுரன் 

Sunday, February 6, 2011

இரு பிரம்மப் படிமங்கள்

*
அவர்களுக்கான
வானத்தின் ஓரங்களில்
நட்சத்திரங்களையும்
கோள்களையும்
தொங்கவிட்டான்

உள்ளிருந்து ஒளிரும்
விளக்குகளை ஏற்ற
அனைத்தும்
நிறைவேறிற்று

அவனது விருப்பப்படி
சில விண்மீன்களை
மாலையாகக் கோர்த்து
கண்சிமிட்டிக்கொண்டிரு.. என்றான்

அதுவும்
அப்படியே ஆயிற்று

சலனமற்று
பார்த்துக்கொடிருந்தாள்
சிறுமி ஒருத்தி

ஊழிகள் கடந்து
மிதந்தது
அவள் சிந்தனைகள்

படைத்தவை அனைத்தும்
உள்வாங்கி நிற்கும்
இரு பிரம்மப் படிமங்களாக
அவள் கருவிழிகள்
அசைவுராதிருக்க

அதற்குள்
அவனும்
சிறு புள்ளியாகவே 
அவனுக்குத் தெரிந்தது..

****
     --கலாசுரன்
நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102067&format=html

Friday, February 4, 2011

சாத்தான்கள்

*
நலமா ?
என்ற ஒரு கொம்பு
நலம்.
என்ற இன்னொரு கொம்பு
அதற்க்கு இணையாக
பொய்யான புன்னகை
மேல் நோக்கி வளையும்
வால்...

இவை
எப்போதும் உடன் கொண்டு செல்கிறார்கள்...
அவர்களுக்கு
தெரிந்தவர்களுடன்
மட்டும் முட்டிக்கொள்ள ...!

பிறகு
எங்காவது
வரைந்து வைக்கப்பட்ட
ஒரு சாத்தானின் படத்தை
ஏளனமாகப் பார்ப்பார்கள்.....!

அந்த சாத்தான்

அவர்களைப் பார்த்து
நலமா? என்று கேட்டுக்கொண்டோ
நலம். என்று பதிலளித்துக்கொண்டோ


வால் நுனியால் 
சிரித்துக்கொண்டே இருப்பான்....!!
*