Sunday, January 30, 2011

வானங்கள்

*
சுற்றும் முற்றும்
ஆதங்கத்தோடு 
பார்த்தான்...

அவன் வானம்
ஓயாமல்
ஏதேதோ புலம்பிக் கொண்டும்  
கண்ணீர் கண்ணீர் வடித்துக்கொண்டும்
இருந்தது..

தொலைவில் 
தூங்கிக்கொண்டிருந்த
இன்னொருவரின் இரவு
இருளைப் பொடித்து 
உதிர்ந்து போனது  .....
*
***
கலாசுரன்

நன்றி திண்ணை..
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101302&format=html

Saturday, January 29, 2011

சற்று விலகி நின்ற நட்பு..

*
நண்பர்கள் சூழ அரட்டை
மற்றும்
ஒரு குழலிசை
குரல்வளையைத் தழுவி
இதயத்தை ரீங்கரிக்கச் செய்தவாறு
மௌனத்தில் இசைத்துக்கொண்டிருந்தது

அதன் எதிரொலிகள்
மன்னிப்பு எனவும்
நன்றி எனவும்
மனதில் சுழன்றது

அங்கு
நட்பு சற்று
விலகி நிற்ப்பதை
நோக்கியபடி

மகிழாமல் நகைப்பதுபற்றி
தொடர்ந்த
சிந்தனைகள்
பொடிநடையாய்
எங்கோ செல்கிறது

முழுமைபெறாத
வினாக்களுமாய்
சில யோசனைகள்
அந்தக் கடற்க்கரை மணலை
அலட்சியமாய்
சிதைத்துக்கொண்டிருந்ததை
அங்கிருந்தவர்கள்
கவனித்திருக்க வாய்ப்பில்லை..
*
***
கலாசுரன்

நன்றி கீற்று.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12702:2011-01-29-06-20-01&catid=2:poems&Itemid=265

Tuesday, January 25, 2011

மன சதுப்பு

*
ஒரு
யோசனைக்கான
மனச் சதுப்பை 
அல்லது 
அந்த சதுப்பிலிருந்து 
மீளுவதற்கான 
யோசனையை 
தொடர்ந்து செல்கிறது 
ஒரு மௌனித்த 
சிந்தனை ...


அது 
நீடிக்கும் பட்சத்தில் 
கண்முனையில் நிகழ்பவை 
யாவும் 
அந்த சதுப்பில் 
விழுந்து மறைவதை 
அறிந்தும் 
அக்கண்கள் 
அந்த 
காட்சிகளுக்கு 
முன் ஒரு 
ஊமையாகத் 
திறந்து தான் இருக்கின்றன ....!
*
***


கலாசுரன் 
நன்றி வார்ப்பு
http://www.vaarppu.com/view/2326/

Monday, January 24, 2011

குறுகிய மௌனங்கள்..

*
அழகாலோ
அறிவாலோ
சாதிக்கமுடியாததை
ஒரு குறுகிய மௌனத்தில்
சாத்தியமாக்குகிறாய்

மௌனத்தின் கூர் முனைகளில்
மோதிப் பிளவுறும்
ஒரு
ஓசைக்கான
எதிர்பார்ப்புகளை
எங்கு சேமித்துவைப்பேன் ?

அதனால்
மௌனம் தொலைந்ததும்
நீ மறைத்துக்கொள்ளும்
வெட்கச் சிரிப்புகளில்
பிளவுற்றதனைத்தும்
தொலைத்துவிடுகிறேன்

அதனால்
வேறு எதனாலும்
சாதிக்க முடியாதவைகளை
இன்னும் சில
குறுகிய மௌனங்களால்
சாதித்துவிடு..
*
***
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை 

Sunday, January 23, 2011

ஒரு சோகம்.....!

*
அதோ.....
உலாவருகிறது
ஒரு சோகம்

மன்னிக்க முடிவதில்லை
நான் என்ற
யாருமற்ற ஒரு வெளியில்
சிதறிச் சென்ற வார்த்தைகளை

அதன் ஞாபகங்களை
அந்த நிலப்பரப்புகளில்
முளைக்கும்படி
புதைத்துவைக்கவும் தயங்குகிறேன்

இதோ ....
என்னை சூழ்ந்துகொள்கிறது
இன்னுமொரு சோகம் ....!

கவனமாக இருங்கள்
சற்று நேரத்தில்
இது
உங்களுக்கும் நிகழக்கூடும்....!

*
***
கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101239&format=html

Saturday, January 22, 2011

மூன்று கனவுகளின் சடலங்கள்

*
முடிவற்றதாகவோ
தொடக்கம் எதுவென்று
தெரியாததாகவோ
தொடரும் மௌனங்களுக்கு
அர்த்தங்கள் ஏராளம்
சொல்வதற்கு
சலமற்ற மொழிகளை
கையாளும் கண்கள்

நிதர்சனமாய்
கண் முன் தெரிபவையனைத்தும்
பதியும் விழித்திரையை
பொருட்படுத்தாது
சிந்தனைகளை சிதைத்து
பிரம்மையில் இளித்துக்கொண்டிருக்கும்
மரணமற்ற மனம்

பார்வை எட்டும்
தூரத்தின் எல்லையில்
நுண்ணிய ஒரு புள்ளியிலிருந்து
புறப்படும் கனவுகள்
வேகத்தின் உச்சம் கொண்டு
பிரம்மாண்டமான உருவம் பெற்று
கண்களில் மோதி
துகள்களாகச் சிதறிப்போகின்றன

அதன் அகோரங்களில்
இதழோரத்து சிறு புன்னகை ஒன்று
எவருக்கும் தெரியாமல்
இறந்து விடுவதுண்டு

அதற்காக
ஒதுக்கப்பட்ட மனப்பகுதியை
இரத்தம் வழிய
கடித்து தின்றுகொண்டிருக்கிறது
மூர்க்கமான ஒரு கற்பனையின்
சிரிப்பு சப்தம் ....

பள்ளமான உள்ளம் கையில்
தேக்கி வைத்த
நிம்மதியின் நீரை
கருணையின்றி பருகும்
ஒரு காரணமற்ற
வெறுப்பின் புழுக்கம்

மீண்டுமொரு
மௌனத்தின் எல்லையில்
தூக்கில் போடப்பட்ட
மூன்று கனவுகளின் சடலங்கள்
கண்முன்
தொங்கியபடி  நிற்கின்றன

அதில் ஒன்றாவது
வாழ்வைப் பார்த்தும்
இரண்டாவது
மௌனத்தைப் பார்த்தும்
மூன்றாவது
நிகழ்காலத்தைப் பார்த்தும்
சிரித்துக்கொண்டே இருக்கிறது
*
***
கலாசுரன்.

நன்றி கீற்று..
http://www.keetru.com/index.php?option=com_content&view=category&id=2:poems&Itemid=265

Wednesday, January 19, 2011

கண்ணாடி இரவு

*
தன்னை சூழ்ந்தபடி
குரூரமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும்
யாரோ ஒருவரின்
பிம்பங்களை

நகைத்தபடி
பார்த்துக்கொண்டிருக்கிறது
அந்நியமான ஒரு கனவு

அதன்
பிரதிபலிப்புகளில் இலகுவாய்
நிகழும் மரணம்
தன் பிம்பங்களைக்கூட
கெக்கலிக்க செய்கிறது..

மௌனத்தில்
சிதைந்து
உதிர்கிறது
இன்னுமொரு
கண்ணாடி இரவு..
*
***
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3871

Tuesday, January 18, 2011

மூன்றாம் நுரையீரல்...!

*
ஓலமிட்டுத் தொலைகிறது
கருப்பு பகலிலான
வெள்ளை நிழல்கள்

மனதை
கொக்கி போட்டு இழுக்கிறது
வந்துகொண்டிருக்கும் ஒருவனின்
ஈட்டிப் பார்வை

அவனது 
கூரான பார்வையில் 
மோதிப் பிளந்தது 
பிராண வாயு

மூன்றாம் நுரையீரல் 
மூச்சடைத்துத் திணறியது 

புலம்பும் மரங்கள் 
அழுவதை நிறுத்தப் போவதில்லை 

பட்டாசுகள்
காற்றைக் கிழித்து
வெடித்துச் சிரித்தன


உலாவும் தென்றலில்
மரணம் மணக்கிறது


புகை நிழல்கள்
விண்மீன்களை விழுங்கி
குரூரமாய் நகைத்தது

முடிவாக
"மரங்கள் நடுவோம்"
என்றார்கள்....!!!
*
***
கலாசுரன்

நன்றி கீற்று..
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12457:2011-01-15-11-46-52&catid=2:poems&Itemid=265

Monday, January 17, 2011

மௌனமாய் மரணிக்கும் கதைகள் ....*
 மனம் துவண்டுவிடாத
காலமொன்றின் நினைவுகள்
இறுக்கமாக மனதை
அணைத்துக் கொள்கின்றன

அந்த நினைவுகள்
இன்னும் இளமையாகவே
இருக்கின்றன

காலம்
எவ்வளவு வேகமாய்
உருண்டோடியிருக்கிறது
வீசிப்போன ஒரு தென்றலின்
ஸ்பரிசம் போன்றது அது.

அந்த
உயரமான பூவரசு மரத்தின்
வயது
என் இளமையின் இறுதியிலிருந்து
ஆரம்பித்த ஓன்று

இப்பொழுதும்
அதன் மேலான நினைவுகள்
அதன் கிளைகளில்
தாவி விளையாடுகின்றன

நடந்து சென்ற
அந்த ஒற்றையடிப் பாதையை
புற்கள் தின்ன
ஆரம்பித்திருக்கிறது

ஊன்றி நடப்பதற்கான
அந்த தடி
எப்போதும் என்னுடன்
பொடிநடை பழகவே
ஆசைப்படுகின்றது


சுவரோரமாய்க் கிடக்கும் 
அந்த சாய்வு நாற்காலி 
என்னையும் 
என் சிந்தனைகளையும் 
தாங்கிக்கொள்வதில் 
ஒருபோதும் 
மறுப்பு தெரிவித்ததில்லை 


இந்தவிதமான
கதைகளைக் கேட்க்க
இந்த காகிதங்கள் தவிர
எவரும் விரும்புவதில்லை

அவைகளை சொல்வதற்கு
இந்தப் பேனாவும்
எந்த தயக்கமும்
இதுவரையிலும் காட்டிக்கொண்டதே இல்லை

என் இதழ்கள் மட்டும்
வெகு காலமாகப்
பேசிக்கொள்வது
மௌனித்த கற்பனைகளுடன் மட்டும்தான்

இனி என் பேனாவும்
ஊமையாகிவிடும்
என்
காகிதங்களும்
செவிடாகிவிடும்

கைகள் நடுங்க
ஆரம்பித்திருக்கின்றன ..!
*
***

கலாசுரன்.

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101177&format=html

மற்றும்
எதிர்நீச்சல்

Tuesday, January 11, 2011

ஒற்றைக்கண்

*
தனக்கான
தனிப்பட்ட புத்தகங்களை
பதுக்கிவைப்பதை
ஒரு கண் மட்டுமுடைய
அந்த
மயிலிறகு
கூர்ந்து பார்ப்பதை
அவள் விறும்புவதே இல்லை

அந்த
மயிலிறகின்
குழந்தைகளைப் பெற்றெடுக்க
ஏதோ ஒரு புத்தகத்தின்
பக்கங்களை
கருவறையாக்கியிருந்தாள்
கலவியரியாத
அந்தச் சிறுமி .....!

பிறகெப்போதோ ஒரு நாள்
கருவிலிருக்கும்
அக்குழந்தைகளை
எரித்துக்கொண்டிருந்தான்
ஒருவன்

ஒற்றைக் கண்
அழுதுகொண்டிருந்தது
ரகசியமாய்

அவள்
இன்று
சிறுமியல்ல ..
*
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3857

Sunday, January 2, 2011

இன்னொருவன்

சோகத்தில் முளைத்த
புன்னகையை
வீசியபடியே
அவன் கேட்டான்
நலமா....??

நலம் எனப் பதிலளித்த
முகத்திலும் படிந்திருந்தது
நரை விழுந்த ஒரு சோகம்
அவனும் கேட்டுக்கொண்டான்
நலமா...?

இன்னொருவன்
நிகழ்பவை அறியாது
தன் சோகங்களை
தனக்கான ஒரு வெற்றிடத்தில்
கண்களால் கணக்க்கிட்டுக்கொண்டிருந்தான்....

கலாசுரன்....

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101025&format=html