Friday, November 25, 2011

பிணமெனக் கிடக்குமிந்த வளியில்..


*
நெஞ்சுக் குழியில்  
படுத்துக்கொள்ள புறப்பட்டதொரு பெருமூச்சு 
காலத்தின் பக்கங்களை 
புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமிந்த 
இமைப் பொழுதுகள் 
உனதல்லாதுடைபடுகிறது... 
பிணமெனக் கிடக்குமிந்த வளியில்
அடக்கம் செய்யப்பட்டது 
கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருக்கும் 
சப்தமற்றதொரு 
பெருமூச்சின் சடலம்..
*
***
கலாசுரன் 
*
இக்கடந்த காலமெல்லாம் 
அதென்னை 
து ரத்திக்கொண்டே இருந்தது 

ஒரு கோழிக் குஞ்சென 
சிந்தனைச் சிறகுகளினுள்ளே 
ஒளிந்து கொண்டிருந்தேன்.

இனி நேருக்கு நேர் பார்த்துவிடலாம் 
என்றுணர்த்தும் ஒரு தைரியம் 

காலின் கட்டைவிரல் நுனி 
நாணலென அசைந்துகொண்டிருக்கிறது 
*
***

சூரியனின் நிழல்..

*
இவ்வேனல் எவ்வளவோ இளமையாயிருக்கிறது 
பறவைகளின் நிழல்கள் கூட 
தரையில் விழுந்து அலைகளெனச் சிதறுவதில்லை 

உனதிந்த நிழலை மட்டும் 
அனைத்தும் ஏற்றுக் கொள்வதேன்?

*
***
கலாசுரன் 
*
சோம்பலை ஆலங்குச்சிஎன ஒடித்து 
எழுமித காலை வேளையில் 
வெளியேற நினைக்கும் முன் 
வெளியேறி 
பல் துலக்கி 
வாய் கொப்பளித்து 
குளியல் முடித்து 
படுக்கை நிரம்ப என்னுடன் 
படுத்துக் கொள்கிறதென் கோபம்..
*
***
கலாசுரன் உடையாக் கனவுகளின் சிதைந்த படிமங்கள்..

*
ஒவ்வொரு சிதைந்த கனவுகளிலும் 
உனதெனத் தேக்கிவைக்கின்ற 
விழிநீர் துளிகளில் 
அபிமானத்தின் உப்புத்மை 
மிகுதியாக இருக்கிறது 

அதனால் பரவும் 
மகிழ்ச்சியின் கனலில் 
மெழுகென உருகி வழிகிறது 
உடையாக் கனவுகளின் 
சிதைந்த படிமங்கள்..
*
*** 

அறிந்துகொள்ளவேண்டிய அவசியம்

*
என் புன்னகைகளை 
நீ அணிந்து கொள்வது போல 

அதை நான் திரும்ப 
கடனாய்க் கேட்பது 
எத்தகையதென்று 
உனக்கும் 

உன் புன்னகைகளை 
நான் அணிந்து கொள்ளாததன் காரணம் 
எனக்கும் 

இத்தகைய காரணங்கள் 
நாம் சந்தித்திராத 
இன்னொருவருக்கும் 

நிச்சயம் அறிந்துகொள்ளவேண்டிய 
அவசியம் 
உன்ங்கள் அனைவருக்கும் 
இருப்பது போலவே ..
*
***
கலாசுரன் 

Sunday, August 7, 2011

இரும்புக் காகத்தின் கதை புத்தகம் வெளியானது....Monday, May 30, 2011

பாதைகளை விழுங்கும் குழி

*
ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் 
ஒளியென் கனவுகளைப் பிளக்கும்

தெளிவற்ற பாதையின் குழியொன்று 
நகைப்புடன் எனதிந்த 
பாதையை விழுங்கி விடக்கூடும் 

பாதங்களின் தீண்டல் 
பயணிக்கவேண்டிய பாதைகளை 
நிர்ணயித்துக் கொண்டிருக்க

இந்த இருளென்னை
மிகவும் அழுத்துகிறது 
*
***

கலாசுரன்

நன்றி திண்ணை
http://puthu.thinnai.com/?p=703

Sunday, May 22, 2011

முகபாவம்

*
முன்னோர்களின் மண்டையோட்டுக்களை 
மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு  
முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் 
அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர் 

அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு 
அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று 
அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால் 
கொடிய நகைப்புடன் ஒளிந்திருப்பதை அறியாமல் 

குருதிச் சுழியிலென் மண்டையோடுகள் 
ஓய்வற்றுச் சுழல்கின்றன  
*
***
கலாசுரன் 

Monday, May 16, 2011

மூன்றாம் பகல்


*
எவருக்கும் தெரியாமல்
நடந்து செல்கிறேன்... 
ஒளி சற்றும் கசிவதில்லை 
எவர் கண்ணிலும் நான் படுவதில்லை.. 

கசப்பு நிறைந்த 
விழி மூடிய 
மௌனம் பரவிய 
தொடர்ந்த இரு இரவுகளை 
தாண்டி வந்திருக்கிறேன் 

இனி 
மூன்றாம் பகல்... 
பழக்கதோஷம் என்பதுபோல 
வழக்கங்களையே 
வழக்கமாக்கிக்கொள்கிறேன்..

இப்பொழுதும் 
இங்கே எவரும் இல்லை... 
ஆனாலிந்த 
பகல்களின் கண்கள் 
எப்பொழுதும் திறந்தே 
இருக்கின்றன ..
*
***
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை

இனிவரும் வசந்தத்தின் பெயர்


*
வெளிறிய கோடை இலைகளே.. 
வறண்டு போன 
நடை பாதைகளே.. 
நீருடை பூணும் 
கானல்களே..
ரத்தமற்று சுருங்கிப் போன 
நதி தமநிகளே..
கருகி விழுந்த 
பூவிதழ்களே..

எனதிந்த 
வெற்றுக் காகிதங்களிடம் 
இனிவரும்  
வசந்தத்தின் பெயரை மட்டும் 
சொல்லுங்கள்..
*
***
கலாசுரன் 
நன்றி திண்ணை 

Monday, April 18, 2011

வவ்வால் உலகம்

*
பக்கத்து இருக்கைகள் வழக்கம்போலவே 
என்னைக் கண்டு சிரித்துக்கொள்கின்றன
வாத்தியார்களின் பிரம்படியிலிருந்து
ஒருபோதும் தப்பித்துக்கொள்வதில்லை
எனது காகிதங்களில் பதிந்த கோழிக்கால்கள்.. 

செந்நிறக் கோடுகள் பதிந்த எனதிந்த கைகளை 
உங்கள் முன் நீட்டுகிறேன்
என் குருதியின் நிறம் இதுதானென 

பதில்களை எதிர்பார்ப்பதில்லை
எனது கேள்விகள் என்பதால்
முள்ளுமுருக்கு மரத்தில் வேதாளமென
என்னைத் தொங்கவிடுகிறீர்கள்

ஏதோ ஒரு கதையிலுள்ள தாய்ச் சொல்
கேளாதொரு வவ்வாலும் நானும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
இவ்வுலகம் தலைகீழாக தொங்கிக் கிடக்கிறது
*
***

கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை 

Sunday, April 17, 2011

நானென்னை தொலைத்துவிடும்படி

*
ஒய்யார நடைகொண்ட 
சொல்லொன்றை அடிக்கடி 
உச்சாடனம் செய்கிறாய்
நானென்னை தொலைத்துவிடும்படி

என்னை நானே சுதந்தரித்துக்கொள்ள 
காதுகளை அறுத்து 
லட்சியமற்றதொரு தொலைவில் 
ஓங்கி எறிந்துவிட்டு 
புறப்பட்டுச் செல்கிறேன்

பார்வையில் படும் அனைவரும் 
உதடுகளை மட்டும் 
அசைத்துக் கொண்டிருக்கிறார்கள் 
கண்கள் கூசுகின்றன..
*
***
கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104178&format=html

Tuesday, April 5, 2011

கார்க்கோடகனின் மந்திரக்கோல்

*
என் மனதில் சுற்றியிருந்து 
கூத்தடித்துக்கொண்டிருந்த  
புனிதக் கனவுகளை சாத்தானின் பெயரால் 
வெளியே அனுப்புகிறேன் 
தடம் புரண்டோடும் அவர்கள் 
என் நிழலின் பாதியை 
பிய்த்தென் உருவைக் கெடுத்து 
நெருப்பேற்றி கடந்து போயினர் 
வாய் நிறைய கனல் நிரப்பிக்கொண்டொரு 
கொள்ளிவாய்ப் பிசாசு 
அகோரமாய்ச் சிரித்துக்கொள்ளட்டும் .. 
கார்க்கோடகனின் மந்திரக்கோல் 
இப்போது என்னிடமிருக்கிறது.. 
*
***
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை 

Saturday, April 2, 2011

சமைததெடுத்த மெல்லிய இரவுகள்

*
சப்தமற்ற 
வெப்பச் சிரிப்புகள் மட்டும்
உதிர்க்கும் இந்தப் 
பகலை 
மொழிபெயர்க்க 

இலை ஒன்றின் 
நிழலில் 
மூதாட்டி ஒருத்தி
உடனிருந்து 

மெல்லிய 
இரவுகளை 
சமைத்துக்கொண்டிருக்கிறாள் 

இம்முறை 
வரவிருக்கும் 
ஒரு காகத்திற்கு 
அந்த இரவுகள் 
போதுமானது 

மொழி பெயர்த்தெடுத்த 
பகலை 
என்ன செய்வதென்று 

அவள் 
கேட்டுக்கொண்டிருக்கிறாள் 

சப்தமற்று 
பனி பொழியச் 
சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
*
***
கலாசுரன் 

Monday, March 28, 2011

அது ஒரு மூங்கில் காடு

*
அது ஒரு
அடர்ந்த 
மூங்கில் காடு

பனி சூழ்ந்த 
காலமொன்றை 
மெல்லமாய் முத்தமிடுகிறது 
காற்று 

இலைகளின் 
வியர்வைத் துளிகள் 
வார்த்தைகளென 
ஒவ்வொரு கீற்றிலும் வழுக்கி

நிலம் சேர்வதற்குள் 
எழுதும் 
கவிதைகள் பல 

சிக்கிக்கொண்டபின் 
மீட்சியின் வழிதெரியாது 
திணறித் தவிக்கிறது 
கவிஞன் எனப்
பெயர்கொண்ட 
நிழலொன்று

பாதைகள்
நிலைகுலைந்து 
விழுந்தன..
*
***
கலாசுரன்.

நன்றி உயிர்மை, உயிரோசை 

சாளரங்கள்

*
ஒரு 
மேசையின்
மேல்ப்பகுதியை 
முன்வைத்தபடி 
அமர்ந்திருக்கிறேன் 

அதன் முகத்தில்
ஒன்றின் மேல் ஒன்றாக 
பல சாளரங்களை 
இரு விரலசைவுகளில் 
திறந்து வைக்கிறேன் 

புனைவுகள் 
சித்திரங்கள் 
வரலாறுகள் 
சிந்தனைகள் 
தகவல்களென 

ஒவ்வொரு சாளரமும் 
தங்களை 
அறிமுகப் படுத்திக்கொண்டன 

எதிலும் 
திருப்தி வராத மனமுமாய் 
திறந்தவை 
ஒவ்வொன்றாய் 
மூடிவிட்டு 

மேசை முகத்தையும் 
கீழிழுத்து 
மூடினேன் 

சலிப்புடன் 
திரும்பிப் பார்க்கிறேன் 

திறந்திருக்கும்
என் வீட்டுச் சாளரம் வழியாக
எட்டிப்பார்த்த 
நட்சத்திரங்கள் 
குதூகலமாகக் 
கண் சிமிட்டின..
*
***
கலாசுரன்
நன்றி திண்ணை 


Sunday, March 20, 2011

உயிரின் ரகசியம்.

*
பௌதிகப் பிரபஞ்சப் 
பொதுமைகளைப்
பிளந்து 

புனைகதைகள்
படைக்கத் தொடங்கியதொரு 
விலங்கு

யுகங்களாய்ப் 
பரிணமித்துவரும் 
அதன் பிரக்ஞையை 

எழுத்துக்களில் 
நெருடித் திணிக்கிறது 
மொழியியலின் நிர்பந்தம் 

உருவகங்களென
அந்தரத்தில் 
தொங்கவிடப்படுகிறது 

பெயரறியா 
விலங்கொன்றின் 
இனம்புரியா 
உயிரின் ரகசியம்...
*
***

கொடிய பின்னிரவு

*
பகல்களில் 
தேன் வழிய 
மலர்ந்த கனவுகள் 

எண்ணற்ற சிந்தனைகளில் 
மடிந்து பிறக்கும் 
தென்றலின் கோபுரங்கள்

எண்ணித்துணிந்த
முடிவொன்றில் 
சிதறும் 
ஞாபகங்கள் 

இசையின்றித் 
தாளம்போடும் 
உணர்வற்ற பாதங்களின் 
விரல்கள் 

தேய்ந்துபோனது 
ஆயிரம் 
நினைவோட்டங்களின் 
மனதோர வடுக்கள் 

பின்னிரவில் 
இவையனைத்தும் 
ரத்தம் சொட்டச் 
சிவந்திருந்தன..
*
***
கலாசுரன் ..

Monday, March 14, 2011

.என்னை ...நீ ... உன்னால் முடிந்தவரை..

*
உன்னை
குரூரமான
ஆரவாரத்தோடு
சூழ்ந்து கொண்ட
இந்த இரவு மழையை

எவருக்கும் தெரியாமல்
இரு கைகளிலும்
ஏந்திக்கொள்கிறேன்

முன்வரும்
மின்னலின் ஒளியில்
அது
மிளிர்கிறது

பின்வரும்
இடியோசையில்
அது
அதிர்கிறது

அதில்
எவ்வித நிழலும்
விழாதபடி
மறைத்து வைத்திருக்கிறேன்

உனது பிரக்ஞை 
காகிதமெனக் கிழித்து
என்னிடம்
தூதனுப்புகிறாய்

மழையற்ற
இரவொன்று உன்னிடம்
பத்திரப்பட்டிருப்பதாக..

அந்த
இரவின் மின்னல்கள்
ஒளியற்றும்
இடியோசைகள்
சப்தமற்றும்
இருப்பதாக..

அந்த இரவின்
கோப்பைக்குள்
வெகுளித்தனமான
நிழல்களை
ஊற்றி வைத்திருப்பதாக..

மற்றும்
அந்தக் கோப்பையை
மீதமின்றி
சுவைத்துப் பருகுவது
உனக்கு
மிகவும் பிடித்திருப்பதாக...
*
***
கலாசுரன்.
நன்றி கீற்று 

கருணையின் பொட்டலம்

*
சற்று முன்
உங்கள் முன்னால்
வைத்துச் சென்ற 
கருணையின் பொட்டலத்தை 
திறவாதிருங்கள்

அதனுள் 
சதாகாலமும் 
இளித்துக்கொண்டிருக்கும்
விலங்கொன்றை 
பதுக்கி வைத்திருக்கிறேன் 

அது 
உங்களை 
எதுவும் செய்து விடலாம் 

அப்படி 
உங்கள் முன்னிருக்கும் 
கண்ணாடி பிம்பத்தில் 
அது 
நிரம்பி நிற்கக்கூடும் 

பிறகு 
அதை 
அடிக்கடிப் 
பார்க்கவேண்டுமென்ற ஆசை
உங்களை
துரத்திக்கொண்டே
இருக்கும்..

கவனம் ..!
*
***
கலாசுரன்
நன்றி உயிர்மை உயிரோசை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4103

Sunday, March 6, 2011

சொல்லவந்த மௌன்னங்கள்


*
சொல்லவந்த 
மௌனங்களுக்கு 
தங்களைப் பற்றி 
சொல்வதற்கு 
ஏராளம் இருந்தது 

இருந்தும்  
அவைகள் 
தங்களின் 
மௌனத்தன்மையை 
விட்டுக்கொடுக்காதிருக்க 

அவை 
மௌனங்களாகவே இருந்தன 

அவைகளை 
மொழிபெயர்க்கும் 
கனவுகளிலும் 
ஓயாமல்
ஒலித்துக்கொண்டிருந்தது  
நச்சரிக்கும் சிந்தனைகள் 

இதயத்தை 
நெடுகப் பிளந்தது.. 
மலர்ந்துகொண்டிருக்கும் 
ஒரு பூவின் 
வெடிப்புச் சப்தம் 

மௌனங்கள் 
மௌனங்களாகவே 
இருக்கட்டும் 
என்பதை 


எவரிடமும் சொல்லாமல்
மௌனம் 
நிலவுகிறது 
*
***
கலாசுரன் 

Monday, February 28, 2011

நயவஞ்சகத்தின் வலி ..

*
இதழோரப் புன்னகையிலிருந்து
பிய்த்தெடுத்த 
கனவொன்றை 
விழியம்பால் 
சிதைக்க 
விருப்பமின்றி 
மூடிக்கொள்ளும் கண்கள்

உச்சாடனம் செய்ய முடியா
வார்த்தைகளின் விம்மல் 
ஒளி நடுவிலான 
புள்ளி இருளாய்  
பிரகஞ்ஞையின் தாள்மேல் 
பத்திரப்பட்டிருக்கிறது 

தொலைவற்று 
கண்ணெதிரில் விரியும் 
சலனமற்ற வானில் 
வழிநீர் படைத்த 
தீத் துளிகள் 
ஓய்வில்லாது
ஓடுகின்றன  

இரத்த நாடிகளை 
முறுக்கேற்றி 
வேகமாய்ப் 
பயணிக்கும் குருதி 
நயவஞ்சகத்தின் 
வலியை
பக்கவாட்டில் 
சிதறச் செய்கிறது..

அணுவணுவாய் 
சிதைந்து 
உதிரும் 
சிந்தனைகளைப் 
பெருக்கி 
மதியற்ற மனம் 
தன்னையே 
வலிக்கச் செய்கிறது 

இன்னுமொரு 
நயவஞ்சகத்தின் 
வலி 
குற்றுயிராம் 
இம்மனத்தை 
முற்றிலும் 
கொன்றுவிடும் 

பிறகு 
பைத்தியமென 
இவ்வுலகம் சிரிக்கும் 
கூடவே 
கொலை செய்யப்பட 
இந்த மனமும்..
*
***
கலாசுரன் 

Sunday, February 27, 2011

பக்கங்கள்..

*
உனது 
ஒவ்வொரு 
பக்கங்களிலும் 
ஒருவரை 
நீ பதிவிட்டுக்கொள்ளும்போது

எனது 
பக்கங்களிலிருது
ஒருவரை 
அழித்துவிடுகிறேன் 

உனது 
பக்கங்களில் 
என்னைத் தேடி 
புரட்டிப் பார்க்கையில் 

எனது 
பக்கங்களை 
ஒவ்வொன்றாய்த் 
தொலைத்து விடுகிறேன்..

நீ
கானல்களின் மத்தியில் 
நீர் தேடும் 
மான் ஒன்றை 
இறுதிப்பக்கத்தில் 
எனக்காக 
பதிவிட்டிருக்கிறாய்

விலை 
ஐந்து ரூபாய் ..!
*
***
கலாசுரன்.. 

பாதையோர பிரபஞ்சங்கள்..

*
பாதையோரமாய் 
கசங்கிக் கிடக்கிறது 
யாரோ ஒருவர் 
தவறவிட்டுச் சென்ற 
பிரபஞ்சமொன்று 

அதனுள் நிரம்பி நிற்கும் 
அழச் செய்த 
ஆதங்கங்களை 
சமுத்திரத்தின் 
பேரலைகளோடு
ஒப்பிடலாம் ..

நிஜ உலகின் 
பூவொன்று 
மலரும் அதிர்வில் 
துகள்களாகச் 
சிதறிப்போனது  
அண்ட சராசரத்தின் 
பெரும் பகுதி ஓன்று..

***
கலாசுரன் 

Sunday, February 6, 2011

இரு பிரம்மப் படிமங்கள்

*
அவர்களுக்கான
வானத்தின் ஓரங்களில்
நட்சத்திரங்களையும்
கோள்களையும்
தொங்கவிட்டான்

உள்ளிருந்து ஒளிரும்
விளக்குகளை ஏற்ற
அனைத்தும்
நிறைவேறிற்று

அவனது விருப்பப்படி
சில விண்மீன்களை
மாலையாகக் கோர்த்து
கண்சிமிட்டிக்கொண்டிரு.. என்றான்

அதுவும்
அப்படியே ஆயிற்று

சலனமற்று
பார்த்துக்கொடிருந்தாள்
சிறுமி ஒருத்தி

ஊழிகள் கடந்து
மிதந்தது
அவள் சிந்தனைகள்

படைத்தவை அனைத்தும்
உள்வாங்கி நிற்கும்
இரு பிரம்மப் படிமங்களாக
அவள் கருவிழிகள்
அசைவுராதிருக்க

அதற்குள்
அவனும்
சிறு புள்ளியாகவே 
அவனுக்குத் தெரிந்தது..

****
     --கலாசுரன்
நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102067&format=html

Friday, February 4, 2011

சாத்தான்கள்

*
நலமா ?
என்ற ஒரு கொம்பு
நலம்.
என்ற இன்னொரு கொம்பு
அதற்க்கு இணையாக
பொய்யான புன்னகை
மேல் நோக்கி வளையும்
வால்...

இவை
எப்போதும் உடன் கொண்டு செல்கிறார்கள்...
அவர்களுக்கு
தெரிந்தவர்களுடன்
மட்டும் முட்டிக்கொள்ள ...!

பிறகு
எங்காவது
வரைந்து வைக்கப்பட்ட
ஒரு சாத்தானின் படத்தை
ஏளனமாகப் பார்ப்பார்கள்.....!

அந்த சாத்தான்

அவர்களைப் பார்த்து
நலமா? என்று கேட்டுக்கொண்டோ
நலம். என்று பதிலளித்துக்கொண்டோ


வால் நுனியால் 
சிரித்துக்கொண்டே இருப்பான்....!!
*

Sunday, January 30, 2011

வானங்கள்

*
சுற்றும் முற்றும்
ஆதங்கத்தோடு 
பார்த்தான்...

அவன் வானம்
ஓயாமல்
ஏதேதோ புலம்பிக் கொண்டும்  
கண்ணீர் கண்ணீர் வடித்துக்கொண்டும்
இருந்தது..

தொலைவில் 
தூங்கிக்கொண்டிருந்த
இன்னொருவரின் இரவு
இருளைப் பொடித்து 
உதிர்ந்து போனது  .....
*
***
கலாசுரன்

நன்றி திண்ணை..
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101302&format=html

Saturday, January 29, 2011

சற்று விலகி நின்ற நட்பு..

*
நண்பர்கள் சூழ அரட்டை
மற்றும்
ஒரு குழலிசை
குரல்வளையைத் தழுவி
இதயத்தை ரீங்கரிக்கச் செய்தவாறு
மௌனத்தில் இசைத்துக்கொண்டிருந்தது

அதன் எதிரொலிகள்
மன்னிப்பு எனவும்
நன்றி எனவும்
மனதில் சுழன்றது

அங்கு
நட்பு சற்று
விலகி நிற்ப்பதை
நோக்கியபடி

மகிழாமல் நகைப்பதுபற்றி
தொடர்ந்த
சிந்தனைகள்
பொடிநடையாய்
எங்கோ செல்கிறது

முழுமைபெறாத
வினாக்களுமாய்
சில யோசனைகள்
அந்தக் கடற்க்கரை மணலை
அலட்சியமாய்
சிதைத்துக்கொண்டிருந்ததை
அங்கிருந்தவர்கள்
கவனித்திருக்க வாய்ப்பில்லை..
*
***
கலாசுரன்

நன்றி கீற்று.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12702:2011-01-29-06-20-01&catid=2:poems&Itemid=265

Tuesday, January 25, 2011

மன சதுப்பு

*
ஒரு
யோசனைக்கான
மனச் சதுப்பை 
அல்லது 
அந்த சதுப்பிலிருந்து 
மீளுவதற்கான 
யோசனையை 
தொடர்ந்து செல்கிறது 
ஒரு மௌனித்த 
சிந்தனை ...


அது 
நீடிக்கும் பட்சத்தில் 
கண்முனையில் நிகழ்பவை 
யாவும் 
அந்த சதுப்பில் 
விழுந்து மறைவதை 
அறிந்தும் 
அக்கண்கள் 
அந்த 
காட்சிகளுக்கு 
முன் ஒரு 
ஊமையாகத் 
திறந்து தான் இருக்கின்றன ....!
*
***


கலாசுரன் 
நன்றி வார்ப்பு
http://www.vaarppu.com/view/2326/

Monday, January 24, 2011

குறுகிய மௌனங்கள்..

*
அழகாலோ
அறிவாலோ
சாதிக்கமுடியாததை
ஒரு குறுகிய மௌனத்தில்
சாத்தியமாக்குகிறாய்

மௌனத்தின் கூர் முனைகளில்
மோதிப் பிளவுறும்
ஒரு
ஓசைக்கான
எதிர்பார்ப்புகளை
எங்கு சேமித்துவைப்பேன் ?

அதனால்
மௌனம் தொலைந்ததும்
நீ மறைத்துக்கொள்ளும்
வெட்கச் சிரிப்புகளில்
பிளவுற்றதனைத்தும்
தொலைத்துவிடுகிறேன்

அதனால்
வேறு எதனாலும்
சாதிக்க முடியாதவைகளை
இன்னும் சில
குறுகிய மௌனங்களால்
சாதித்துவிடு..
*
***
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை 

Sunday, January 23, 2011

ஒரு சோகம்.....!

*
அதோ.....
உலாவருகிறது
ஒரு சோகம்

மன்னிக்க முடிவதில்லை
நான் என்ற
யாருமற்ற ஒரு வெளியில்
சிதறிச் சென்ற வார்த்தைகளை

அதன் ஞாபகங்களை
அந்த நிலப்பரப்புகளில்
முளைக்கும்படி
புதைத்துவைக்கவும் தயங்குகிறேன்

இதோ ....
என்னை சூழ்ந்துகொள்கிறது
இன்னுமொரு சோகம் ....!

கவனமாக இருங்கள்
சற்று நேரத்தில்
இது
உங்களுக்கும் நிகழக்கூடும்....!

*
***
கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101239&format=html

Saturday, January 22, 2011

மூன்று கனவுகளின் சடலங்கள்

*
முடிவற்றதாகவோ
தொடக்கம் எதுவென்று
தெரியாததாகவோ
தொடரும் மௌனங்களுக்கு
அர்த்தங்கள் ஏராளம்
சொல்வதற்கு
சலமற்ற மொழிகளை
கையாளும் கண்கள்

நிதர்சனமாய்
கண் முன் தெரிபவையனைத்தும்
பதியும் விழித்திரையை
பொருட்படுத்தாது
சிந்தனைகளை சிதைத்து
பிரம்மையில் இளித்துக்கொண்டிருக்கும்
மரணமற்ற மனம்

பார்வை எட்டும்
தூரத்தின் எல்லையில்
நுண்ணிய ஒரு புள்ளியிலிருந்து
புறப்படும் கனவுகள்
வேகத்தின் உச்சம் கொண்டு
பிரம்மாண்டமான உருவம் பெற்று
கண்களில் மோதி
துகள்களாகச் சிதறிப்போகின்றன

அதன் அகோரங்களில்
இதழோரத்து சிறு புன்னகை ஒன்று
எவருக்கும் தெரியாமல்
இறந்து விடுவதுண்டு

அதற்காக
ஒதுக்கப்பட்ட மனப்பகுதியை
இரத்தம் வழிய
கடித்து தின்றுகொண்டிருக்கிறது
மூர்க்கமான ஒரு கற்பனையின்
சிரிப்பு சப்தம் ....

பள்ளமான உள்ளம் கையில்
தேக்கி வைத்த
நிம்மதியின் நீரை
கருணையின்றி பருகும்
ஒரு காரணமற்ற
வெறுப்பின் புழுக்கம்

மீண்டுமொரு
மௌனத்தின் எல்லையில்
தூக்கில் போடப்பட்ட
மூன்று கனவுகளின் சடலங்கள்
கண்முன்
தொங்கியபடி  நிற்கின்றன

அதில் ஒன்றாவது
வாழ்வைப் பார்த்தும்
இரண்டாவது
மௌனத்தைப் பார்த்தும்
மூன்றாவது
நிகழ்காலத்தைப் பார்த்தும்
சிரித்துக்கொண்டே இருக்கிறது
*
***
கலாசுரன்.

நன்றி கீற்று..
http://www.keetru.com/index.php?option=com_content&view=category&id=2:poems&Itemid=265

Wednesday, January 19, 2011

கண்ணாடி இரவு

*
தன்னை சூழ்ந்தபடி
குரூரமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும்
யாரோ ஒருவரின்
பிம்பங்களை

நகைத்தபடி
பார்த்துக்கொண்டிருக்கிறது
அந்நியமான ஒரு கனவு

அதன்
பிரதிபலிப்புகளில் இலகுவாய்
நிகழும் மரணம்
தன் பிம்பங்களைக்கூட
கெக்கலிக்க செய்கிறது..

மௌனத்தில்
சிதைந்து
உதிர்கிறது
இன்னுமொரு
கண்ணாடி இரவு..
*
***
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3871

Tuesday, January 18, 2011

மூன்றாம் நுரையீரல்...!

*
ஓலமிட்டுத் தொலைகிறது
கருப்பு பகலிலான
வெள்ளை நிழல்கள்

மனதை
கொக்கி போட்டு இழுக்கிறது
வந்துகொண்டிருக்கும் ஒருவனின்
ஈட்டிப் பார்வை

அவனது 
கூரான பார்வையில் 
மோதிப் பிளந்தது 
பிராண வாயு

மூன்றாம் நுரையீரல் 
மூச்சடைத்துத் திணறியது 

புலம்பும் மரங்கள் 
அழுவதை நிறுத்தப் போவதில்லை 

பட்டாசுகள்
காற்றைக் கிழித்து
வெடித்துச் சிரித்தன


உலாவும் தென்றலில்
மரணம் மணக்கிறது


புகை நிழல்கள்
விண்மீன்களை விழுங்கி
குரூரமாய் நகைத்தது

முடிவாக
"மரங்கள் நடுவோம்"
என்றார்கள்....!!!
*
***
கலாசுரன்

நன்றி கீற்று..
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12457:2011-01-15-11-46-52&catid=2:poems&Itemid=265

Monday, January 17, 2011

மௌனமாய் மரணிக்கும் கதைகள் ....*
 மனம் துவண்டுவிடாத
காலமொன்றின் நினைவுகள்
இறுக்கமாக மனதை
அணைத்துக் கொள்கின்றன

அந்த நினைவுகள்
இன்னும் இளமையாகவே
இருக்கின்றன

காலம்
எவ்வளவு வேகமாய்
உருண்டோடியிருக்கிறது
வீசிப்போன ஒரு தென்றலின்
ஸ்பரிசம் போன்றது அது.

அந்த
உயரமான பூவரசு மரத்தின்
வயது
என் இளமையின் இறுதியிலிருந்து
ஆரம்பித்த ஓன்று

இப்பொழுதும்
அதன் மேலான நினைவுகள்
அதன் கிளைகளில்
தாவி விளையாடுகின்றன

நடந்து சென்ற
அந்த ஒற்றையடிப் பாதையை
புற்கள் தின்ன
ஆரம்பித்திருக்கிறது

ஊன்றி நடப்பதற்கான
அந்த தடி
எப்போதும் என்னுடன்
பொடிநடை பழகவே
ஆசைப்படுகின்றது


சுவரோரமாய்க் கிடக்கும் 
அந்த சாய்வு நாற்காலி 
என்னையும் 
என் சிந்தனைகளையும் 
தாங்கிக்கொள்வதில் 
ஒருபோதும் 
மறுப்பு தெரிவித்ததில்லை 


இந்தவிதமான
கதைகளைக் கேட்க்க
இந்த காகிதங்கள் தவிர
எவரும் விரும்புவதில்லை

அவைகளை சொல்வதற்கு
இந்தப் பேனாவும்
எந்த தயக்கமும்
இதுவரையிலும் காட்டிக்கொண்டதே இல்லை

என் இதழ்கள் மட்டும்
வெகு காலமாகப்
பேசிக்கொள்வது
மௌனித்த கற்பனைகளுடன் மட்டும்தான்

இனி என் பேனாவும்
ஊமையாகிவிடும்
என்
காகிதங்களும்
செவிடாகிவிடும்

கைகள் நடுங்க
ஆரம்பித்திருக்கின்றன ..!
*
***

கலாசுரன்.

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101177&format=html

மற்றும்
எதிர்நீச்சல்

Tuesday, January 11, 2011

ஒற்றைக்கண்

*
தனக்கான
தனிப்பட்ட புத்தகங்களை
பதுக்கிவைப்பதை
ஒரு கண் மட்டுமுடைய
அந்த
மயிலிறகு
கூர்ந்து பார்ப்பதை
அவள் விறும்புவதே இல்லை

அந்த
மயிலிறகின்
குழந்தைகளைப் பெற்றெடுக்க
ஏதோ ஒரு புத்தகத்தின்
பக்கங்களை
கருவறையாக்கியிருந்தாள்
கலவியரியாத
அந்தச் சிறுமி .....!

பிறகெப்போதோ ஒரு நாள்
கருவிலிருக்கும்
அக்குழந்தைகளை
எரித்துக்கொண்டிருந்தான்
ஒருவன்

ஒற்றைக் கண்
அழுதுகொண்டிருந்தது
ரகசியமாய்

அவள்
இன்று
சிறுமியல்ல ..
*
கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3857

Sunday, January 2, 2011

இன்னொருவன்

சோகத்தில் முளைத்த
புன்னகையை
வீசியபடியே
அவன் கேட்டான்
நலமா....??

நலம் எனப் பதிலளித்த
முகத்திலும் படிந்திருந்தது
நரை விழுந்த ஒரு சோகம்
அவனும் கேட்டுக்கொண்டான்
நலமா...?

இன்னொருவன்
நிகழ்பவை அறியாது
தன் சோகங்களை
தனக்கான ஒரு வெற்றிடத்தில்
கண்களால் கணக்க்கிட்டுக்கொண்டிருந்தான்....

கலாசுரன்....

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101025&format=html