Monday, December 27, 2010

கர்வமூச்சின் வெப்பம்

பேச்சு சூடேறியிருக்கிறது
நாவில் வெப்பதிற்கான
எரிபொருள் புரண்டபடி

அணையா கர்வத்தின் நெடி
அந்த நேரத்திற்கான
பெருமூச்சுகளில்
மாசாகக் கலந்துள்ளது

அசைவுறாத
கருவிழிகளில் தெரிகிறது
உடைக்கப்படாத
படிமப்பிழைகளின் உருவங்கள்

அக்கொடிய வெப்பம்
தணியும்படிக்கு
மௌனத்தின் அகோர ஆழங்களுக்கு
பயணிக்க வேண்டிக்கொள்கிறது மனம்

அங்கு
சென்றடையும் தருணத்தில்
கர்வமிழந்தவர்கள் சிலர்
அழுதுகொண்டிருப்பார்கள்..

கலாசுரன்....

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12076:2010-12-26-06-59-09&catid=2:poems&Itemid=265

Sunday, December 26, 2010

தேநீர் விரல்கள்

சலனமற்ற பார்வையின் முனையில்
தொங்கியபடி
உருமாறும் நிகழ்வுகள் ...

அவை
தன் ஒவ்வொரு உருவங்களிலும்
புது விதமான
மொழிகளைக் கையாளுகின்றது

பிரம்மிப்பான
வேடிக்கையோடு
பார்த்துக்கொண்டிருக்க

மேசையில் சிந்திய
தேநீரின் விரல் நீண்டு
என் கையை தொட்டழைத்ததும்
அந்த நிகழ்வுகள் துகள்களாகச் திதறின

அதன்
இன்னொரு விரலை
எறும்புகள்
மொய்த்துக்கொண்டிருக்கிறது

மூன்றாம் விரல்
மேசையின் விளிம்பைத்
தொட்டுப் போடிந்த நுனி
தரையில் மோதி நொறுங்கியது

அது மோதும்
தரையிலும் படர்கின்றன
கையற்ற புது விரல்கள்
ஒரு நிகழ்வின் பிம்பங்களோடு ...

அருகாமையில்
அந்தத் தேநீர்க்குவளை
என்னைப் பார்த்தபடி
வாய் பிளந்து
சிரித்துக்கொண்டிருந்தது ....

கலாசுரன்...

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310122715&format=html

Tuesday, December 14, 2010

தலையற்ற ஞாபகத்தின் சடலம்...

அறுக்கப்பட்ட
ஞாபகமொன்றின் தலை
உருட்டிவிடப்படுகிறது

அது
உருளும் தளங்களை
முத்தமிட்டுக்கொண்டே செல்கிறது

இரத்தம்
பீசசிப் பயணித்த
பாதைகள்
பல கதைகள் சொல்லலாம்

ஆனால்

வாழ்கையின்
உயிரிலிருந்து
அது பிரிக்கப்படுவதைக் குறித்து
அதற்க்கு சொல்லாததுவரை

செல்லும்
தளங்களிலுள்ள
வேறு ஞாபகங்களுக்கு
ஒரு விளையாட்டுப்பொருளாக
அது இருந்து விடக்கூடும்

அந்த ஞாபகத்தின்
தலையற்ற
அந்த சடலத்திற்கு
இந்த வகையிலான
சிந்தனைகள் எதுவும்
மீதமாகுவதில்லை

கலாசுரன்

நன்றி கீற்று...
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11903:2010-12-10-12-05-56&catid=2:poems&Itemid=265

Sunday, December 12, 2010

கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..

கடமையில் கட்டுண்டு
கசங்கிக் கிடந்திருந்தது
ஒரு காக்கிச் சட்டை

பார்வையில் பட்டதும்
சுற்றும் ஒளிந்திருந்த
வரலாற்றுக்கனவுகள்
சுற்றிச் சுற்றிப் பறந்தன

சிப்பாயிகள்
தோட்டா நிறைத்த
துப்பாக்கிகளுடன்
வரிசையாக அணிவகுக்க

ஒரு யுத்தத்தின் ஆரவாரம்
காட்சிகளின்றி  கேட்டது

சடலங்களை
முத்தமிட்டுக்கொண்டு
நாட்டுப் பெருமையை
பேசிக்கொண்டிருந்தது
காய்ந்துபோன இரத்தத் துளிகள்

உடலிலிருந்து
அகற்றப்பட்ட கைகள்
ஊர்ந்து ஒன்று சேர்ந்து
ஒரு கொடியை ஏற்றின

அதில்
சுதந்திரம்
என்று எழுதப்பட்டிருந்தது

பின்னர்
வந்த கனவுகள்
கண்முன் போட்டி போட்டு
மிதந்தன

கண் கசக்கி
கனவுகள் முற்றிலும்
கலைந்து போனது

இன்னொரு
போராட்டத்தின்
தொடக்கமென்பதுபோல்
சந்திர போசின் நிழல்
அடர்ந்த இருளில்
கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது ...


கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaysection&section_id=33&format=html

Wednesday, December 8, 2010

படைத்தலிலான உப்பின் சுவை....!

காலவரையற்ற
உரையாடலின் கசப்பை...
உதடுகளை நக்கியவாறு
சுவைத்துப்பார்க்கிறது
முன் காலத்திலான ஒரு மௌனம்..

மௌனங்களின் இனிப்பும்
வார்த்தைகளின்
தாங்க முடியாத கசப்பும்
விருந்தினர்களுக்கு
அளிப்பது குறித்த
யோசனைகள் சற்று காரத்துடன் தான்
கரைந்து போகிறது

மூக்கில் நுழையும்
நாற்றத்தை வைத்து
இதற்க்கு இதுதான் சுவையென்று
சொல்வதுபோல
அவ்வளவு எளிதல்ல
இவ்வகைச் சுவைகள்

கவிதைகளைப் பெற்றெடுக்கும் வரை
சில வார்த்தைகளின்
புளிப்புத் தன்மை
சுவை மிகுந்ததாகத் தான்
இருக்கிறது

பின்னர் அது
புளித்துவிடுகிறது

அதற்க்கு காரணம்
அவனல்லன்
அவனுக்கு முக்கியம்
அதுவன்று
படைத்தலிலான
உப்பின் சுவை

அது
ஒரு துளி
வியர்வையோ
அல்லது
ஒரு துளி
விழிநீரோ ஆகலாம்..

இனி
இதுவெல்லாம்
திகட்டும்படிக்கு

ஒரு
புதுச் சுவை
வந்து சேர்வதை
ஒரு படைப்பும்
புறக்கணிப்பதில்லை

ஒருவேளை
இது
அழித்தலுக்கும் பொருந்தும்.

கலாசுரன்

நன்றி கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11872:2010-12-08-10-54-42&catid=2:poems&Itemid=265

Monday, December 6, 2010

நீர்க்குமிழிச் சிரிப்புகள்

கொட்டித்தீர்ப்பதர்க்கான
ஒரு சந்தர்பம் தான் 
படைப்புகளின் கருவறை

சோகத்தைக் கொன்று மீண்டும் 
சோகத்திலேயே விழுவதாய் 

இத்தருணங்களில் 
என் எழுத்துக்களின் இதழ்களில் 
சில நீர்க்குமிழிச் சிரிப்புகள் 
மலர்வதுண்டு 

அதை நான் ஒருபோதும் 
புறக்கணிப்பதே இல்லை 

இப்பொழுது 
சோகமும் 
சிதைவும் 
எளிதில் 
கையாள முடிகிறது 
அதனால் அவை 
சற்று சுகமானதே ...

கலாசுரன் 

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3740

Saturday, December 4, 2010

சிவப்பு மின்மினிகள்

அந்த இரவின்
சூழ்ந்த இருளில்
சிவப்பு மின்மினி ஓன்று
மேலெழுவதும் கீழிரன்குவதுமாய் தொடர

அது
மேலெழுந்த உச்சங்களில்
சற்றுநேரம்
ஒளிமிகுந்த தோற்றமளித்து
கீழிறங்கி சற்று மங்கலாக

தொடரும்
உச்சங்களிலான ஒளியில்
இரு கண்களும் ஒரு மூக்கும்
தெரிந்து மறைவதுண்டு...

சில நிமிடங்களுக்குப் பிறகு
அந்த மின்மினி
தரையில் முகம் குப்புர விழுந்து
மெல்ல இறந்து விட்டது

சற்று தொலைவிலான இருளில்
இன்னொரு மின்மினி ....!

கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012058&format=html