Monday, November 29, 2010

ஒரு காட்சிப் படிமத்தின் வரைபடங்கள்

ஒரு நாள் முழுதுமாய்
பாதி மறையக்கூடும்
ஒரு காட்சிப் படிமத்தின்
வரைபடங்கள் ....

அதில்
பறக்கும்
ஒரு பறவையின்
ஒரு இறக்கையை மட்டும்
அழித்துவிடுவதில்
சில ஓவியங்கள்
முழுமையற்றதாக
காட்சிப்படுத்திவிட்டு

பாத்திரங்கள்
கதையறியாது
கூத்தாடுகையில்

இருபத்து ஒன்றாவது
விரலெழுந்து
சுட்டிக் காட்டும் குறிகளை
ஒருபோதும்
மறைக்க முயலுவதில்லை
ஒரு கதையின் கருப்பொருள்

அக்கதையில்
சிலநேரம்
இரவு வானில்
முட்களால் சூழப்பட்ட
அந்த நிலவின் மார்பில்
வைகறையின் மஞ்சள் பூசிப்
புறப்படும் ஒரு தென்றலுக்கு
சலனமற்ற ஓவியங்களில்
புகுந்து மடியும் வரையில்
தான் ஒரு தென்றலே அல்ல
என்பதுபோல்
நடித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கும் ...

ஒரு நாள் முழுதுமாய்
முற்றிலும் மறையக்கூடும்
அந்த கதையிலான 
ஏதேனும் ஒரு 
காட்சிப் படிமத்தின் 
வரைபடங்கள்

கலாசுரன்

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3722

Monday, November 22, 2010

புலன்களுக்கு அப்பாற்பட்ட ஓன்று

புலன்களுக்கு அப்பாற்பட்ட
ஏதோ ஒரு உணர்வுக்குள்
அவன் அவளைப் புதைத்த
நினைவுகள் நெளிகின்றன

இனி ஏதும் சொல்வதற்கில்லை
என்பதாய்
அந்நிகழ்வைப் பற்றி
சாட்சியம் சொல்லும்
அந்த இரவில் தான் அது நிகழ்ந்தது

இருளும்
அதை சார்ந்த தூக்கமுமாய்
தென்றல் ஒன்றை வருடியவாறு
கடற்க்கரை படுத்திருந்தது

ஒவ்வொரு மரணத்தின் பிறகான
வாழ்வை
தலைமேல் சுமந்து வந்து
அந்த கடற்கரையின்
மார்பில் கொட்டிக்கொண்டிருந்தது
அலைகள்

அவை
அள்ளி வீசிய ஈரத்தில்
பற்றிக் கொண்டது
கோபத்தின் தீப்பொறி ஓன்று.

அது
பிரபஞ்சத்தை
இரண்டாகக் கிழித்து
கடந்து போனது

முட்டாள்களின் கடல்
எந்தக் காரணமுமின்றி
ஒரு படையின் ஆரவாரத்தை
இப்பொழுதும்
தொடர்கிறது

புலன்களுக்கு அப்பாற்பட்ட
ஒரு உணர்வில்
கடற்கரையெங்கும்
சிதறிக் கிடக்கிறது
அவள் நினைவுகள்

கலாசுரன் 
Sunday, November 21, 2010

இதமானதொரு நகைப்பு ...!

அறை திறக்கப்பட்டது
உடன் வந்தவர்கள்
விடைபெற்றுச் சென்றார்கள்

அங்கு பத்திரமாக்கப்பட்டிருந்தது
ஒரு பேனாவும்
சில காகிதங்களும்
ஊன்றி நடப்பதற்கான ஒரு தடியும்

இறுதியில் இதமானதொரு நகைப்பு
அவன் இதழ்களில் மிச்சப்பட்டிருந்தது  ....
யாரும் அவனை தனியாக விட்டுச்
செல்லவில்லை என்பதாக...!!கலாசுரன்...


நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011218&format=html

Monday, November 15, 2010

சொல்லத் தயங்கிய ஒன்று...!

அவர்களுக்கான பொழுதுகள்
அவர்களை தீயவர்கள் என்றே
சொல்லவைத்தது

இன்னொருவனின்
சாதூர்யமான பொழுதொன்று
அவனை
நல்லவன் என்று அழைத்தது

முற்றிலும்
அவன் நல்லவனோ
அல்லது
அவர்கள் கெட்டவர்களோ அல்ல
என்றிருக்க

அவர்களது
தியாகத்தில் உருவான
அவனது நல்ல பெயருக்காக
அவர்களுக்கு அவன் கடன் பட்டிருப்பான்

இப்பொழுது
இது போன்ற
இன்னொரு சிந்தனை
தூரிகை நுனியிலிருந்து
மெல்ல.. எட்டிப் பார்க்கிறது...

கலாசுரன்..

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310111417&format=html

Monday, November 8, 2010

நொடியில் விழுந்து மடியும் காலம் ...!

கண்ணாடிச் சுவருள்
சிறையடைக்கப்பட்ட 
கால முள் ஒன்றின் சலனம் 
சொல்ல வந்ததை 
காட்சிப் படுத்தும் 
ஒரு இருள் இரவும் 
மனதின் ஒருமையற்ற 
தனிமையும் ..

அந்த முள் 
இடைப்பட்ட 
சலனமற்ற தருணத்தில்
சப்தங்களை
உடைத்து மௌனிக்க  

நீட்சியற்ற 
காலத்திற்கு மட்டும்  
மரணிப்பதும் 
மீண்டும் எழத் துடிப்பதுமாய் 
நொடிகள் விழுந்து 
மடிகின்றன


இப்பொழுது 
பகலில் பயணித்த 
அந்தப் பாதைகள் 
இருளில் குளித்துக்கொண்டிருக்கும் ...

அப்பாதையோரங்களில்   
சிலரின் வியர்வையோ 
கண்ணீரோ 
நட்சத்திரங்களாகும்
காட்சியை சிதைத்து 

இன்னொரு 
நசுக்கப்பட்ட எதிர்பார்ப்பின்  
முகம் 
நிலவெனவும் 
அங்கு  
பதிந்திருப்பதுண்டு

இவை அனைத்தும் 
பார்க்க ஆவலாய் 
ஓடிக்கொண்டிருக்கும் 
கற்பனைகளின்  
கால்களை 
ஒடித்துப்போடக்கூடும்
ஒரு விழித்தலுக்கான
அழைப்பின் 
ஓசை

அந்தக் கணத்தின்
ஒவ்வொரு
நொடியிலும் விழுந்து
காலமுட்களில்
மோதி உடையும்
நீர்க்குமிழி போன்றது
காலம் ....!

கலாசுரன் 

நன்றி உயிர்மை, உயிரோசை 

Sunday, November 7, 2010

சுவர் சாய்ந்த நிழல்கள் ...!


உன் கல்லறை
சுவர் சாய்ந்த நிழலும்
உடன் வர மறுத்தபின்.....!

ஒரு பனிச்சுடரில்
சுட்டெரித்த
ஞாபகங்களை
தீ மழையில் நனைத்து
ஆழ்கடலில் உலர்த்துகிறது ...!

மீண்டும் நாமிருவரும்
சந்திக்கக்கூடும்
என்றே எண்ணங்கள்
சந்திப்பிற்கான
வாசலில் காத்திருக்கின்றன ...!

கலை அணிந்த நீ
மனதில் கவிபடைத்துச்
சென்ற நாளன்று ...

கடலை உப்பாக்கிய
விழிநீர் முத்துக்கள்
கண்ணீர்க் கடலில் தான்
மீண்டும்
கரைந்து விடுகின்றன ...

அச்சுவரின் மேடுபள்ளங்களின்
வெளிப்பரப்பில்
வடிவங்களுக்கேர்ப்ப
வளைந்து நெளிந்த
நிழலாய்
சில ஞாபகங்கள்
பூசப்பட்டிருக்கின்றன


துன்பியலின்
ஓவியங்களாக...!


கலாசுரன்
நன்றி திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110714&format=html

Wednesday, November 3, 2010

மிச்சப்பட்ட வார்த்தைகளின் மரணம்

எப்போதும் 
மிச்சப்படுவதுண்டு 
மனதிற்குப் பிடிக்காதவர்களுக்காக 
ஒதுக்கப்பட்ட சில வார்த்தைகள் 


அவைகளை 
தனக்குத் தானே 
உச்சரிக்கும் 
நிமிடங்களின் கடினத்தன்மை 
புன்னகைகளை மீதமின்றி 
உடைத்தெறிகிறது 


அதன் மேலிருக்கும் 
வானில் 
இரண்டாகப் பிளந்து கிடக்கும் 
நிலவொன்றின் நெற்றியில் 
மேகத்து திருநீர் பூசி 


கடந்து செல்லும் 
தென்றலின் வலி 
வளைந்த கடலலைகளில் 
மரணத்தை வருடி 
சிதறுகையில் 


எவரிடமும் 
தெரிவிக்காமல் 
நீண்டுகொண்டே செல்கிறது 
அன்றைய இருளின் நிழல் 


அங்கு 
மனதிற்குப் பிடிக்காதவர்களுக்கான 
அந்த வார்த்தைகளின் 
அருகாமையில் 
அந்தப் பொழுதிற்கான மரணம் 

புன்னகை வீசியபடி 
நின்றுகொண்டிருக்க 


அதை சற்றும் கவனிக்காமல் 
மையின் ஈரமற்ற பேனாவோன்று 
மௌனித்த வெற்றிடத்தில்
கவிதைகள் 
கிறுக்கிக்கொண்டிருந்தது   ....கலாசுரன். 


நன்றி கீற்று ..