Sunday, October 31, 2010

மிகவும் அழகானவள் ....!

வாழ்க்கையின் நிறைவு ...
துன்பங்களின் முடிவு....
நிதர்சனமல்லாத எதோ ஒன்றின் தொடக்கம்
அல்லது
உயிரின் உருமாற்றமோ பரிமாற்றமோ என
வைத்துக்கொள்வோம் ....

இல்லை..... இவை அனைத்தும்
பொய்யாகக்கூட இருக்கலாம்....!

அல்லோலப்படும் இவ்வழ்க்கையின்
ஏதோ ஒரு முனையில்
இருந்து பார்க்கையில்

மரணம் மிகவும் அழகானவள்....!!!

கலாசுரன்   

Friday, October 29, 2010

மேகங்கள் ....!!

இன்றைய வானுக்கு
வராத மேகங்கள்
நாளைய வைகறைகாக
எங்கேயோ
பனித்துளி தேடி
அலைந்துகொண்டிருக்கிறது

நாளைய வானுக்கான
மேகங்கள்
நேற்று
மடிந்து விட்டது

இனி வரும்
அதிகாலையிலான
பனித்துளிகள் கூட
இதை நினைத்து
அழப்போவதில்லை....

கலாசுரன்...

உருமாற்றம் கொள்ளும் ஓசைகள்

பள்ளிக் கூடங்களிலிருந்து
குடிசைகளை இலக்காகக் கொண்டு
பயணிக்கின்ற சிறுவர்கள்

காற்றில் சிதறும்
ஓசைகளை
செதுக்கி
திரும்பத் தரும்
அந்த மலைப்பாதம் நெடுக  ....

அச்செதுக்கல்கள் ஓயாதபடிக்கு
சப்தங்களை
மலைநோக்கி
அவர்கள் வீசுகிறார்கள்

திரும்பக் கிடைத்த

பரிணாமத்தை
குவிந்த காதுகளில்
பெற்றுக்கொண்டபின் ..

அதன் இன்னொரு
படிமத்தை
வீசுதல் பழகி
இடம் நகர்ந்தவாறு
தொடர்ந்து

உருமாற்றம் கொள்ளும்
ஓசைகள்..
கூட்டத்தில் இருந்து
ஒவ்வொன்றாய் விடை பெற்று

அடுத்த மாலைக்கான
ஓசைகளை
மௌனத்தில்
எதிரொலிக்கச் செய்தவாறு....!

குடிசைகளில்
புகுந்துவிடுகின்றன ..
செதுக்கல்களின்
எல்லை சாரா முடிவென..!!கலாசுரன்

Tuesday, October 19, 2010

சிதறிப்போன ரோஜா இதழ்கள் ....!

நட்டதும் வளர்த்ததும்
நான்தான் என்றிருக்க
அதைப் பற்றி
அனைத்தும் அறிந்து
வைத்திருந்தேன்

அவ்வப்போது
வந்த அவர்கள்
சொல்லிக்கொண்டார்கள்
மணமுடைய பூக்களும்
முட்களும் கொண்ட
செம்பருத்திச் செடிதான் அதென்று

அப்பொழுதெல்லாம்
அந்த முட்களால் கிழிந்த நெஞ்சை
விழியோரமாய் கண்ணாடிக் கூடமைத்த
அந்தத் தூக்கணாங்குருவியின் அலகால்
தைத்தவாறு
சிரித்துக்கொண்டிருந்தேன்

இன்று
முற்றமெங்கும்
சிதறிக்கிடக்கிறது
நீ சிதறச் செய்த
என் நெஞ்சத்து
ரோஜா இதழ்கள்

அவர்கள்
இன்று சொல்கிறார்கள்
அது
அழகான ஒரு
ரோஜா இதழ்க் கோலமென்று

இனி
முட்கள் மட்டும்
ஏந்தி நிற்கும்
அந்த ரோஜாச் செடியில்
அவர்கள் பார்க்கும்படிக்கு
மணமுடைய ஒரு செம்பருத்திப் பூ கூட
மலரப்போவதில்லை...


கலாசுரன்.நன்றி உயிர்மை, உயிரோசை 
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3536

Sunday, October 17, 2010

பொய்யான பதில்கள்

என் சிந்தனைகளே
நீங்கள்
இதற்குமுன்
யாருடையதாக இருந்தீர்கள்...?

அவர்களை
அல்லது
அந்த நபரை
என்னிடம் அறிமுகப்படுத்தாததின்
காரணம் சொல்லுங்கள் ...

பொய்யான பதில்களை
உங்களிடமிருந்து
எதிர்பார்க்கிறேன் ...

ஏனனில்
உங்கள் தூண்டுதலில்
நான் சொன்ன பொய்களின்
சுவை
இன்னும் எனது நாக்கில்
புரண்டபடி இருக்கிறது ...

கலாசுரன்..

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310101711&format=html

Tuesday, October 12, 2010

எழுதத் தொடங்காத கவிதையின் முதல் வார்த்தை ...!

ஒரு கற்பனையின் 
ஒரு முனையிலிருந்து
குப்பரக் குதிக்க
எத்தனித்துக்கொண்டிருக்கிறது
எழுதத் தொடங்காத
கவிதை ஒன்றின்
முதல் வார்த்தை

மடிப்பு குலைந்த
நிதானத்தோடு
தாண்டிவந்த
ஒரு நாளின் வைகறையிலும்
இதேபோன்று
ஒரு கவிதையின்
வார்ததைகள் ஒவ்வொன்றாய்
இன்னொரு முனையிலிருந்து
குதித்து மடிவதை
கண்டதுண்டு

இன்றும்
அது நிகழலாம்
குதிக்க எத்தனிக்கும்
அவ்வார்த்தையின் பின்னால்
ஒரு கவிதைலான
வார்த்தைகளின் அணிவகுப்பு
அந்த ஆழங்களுக்குக்
குதிக்க
எத்தனித்துக்கொடிருக்கலாம்

அவைகளை
பக்குவமாய் ஏந்திக்கொள்ளும்படிக்கு
சிந்தனைகளில்
ஒரு வலைக் கூடை
பின்னிக்கொடிருக்கிறது
அந்த
பொழுதிற்கு
உயிர்கொடுக்கும்
ஒரு மயான அமைதி...

கலாசுரன்

நன்றி
நன்றி உயிர்மை  உயிரோசை...
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3508

Saturday, October 9, 2010

அண்ட சராசரத்தை துழாவும் கவிதையின் விரல்கள்...

அண்ட சராசரத்தின்
நட்சத்திரக் கூட்டங்கள்
கறுப்புத் துளைகள்
எரிகற்கள்
கோள்கள்
ஒளிப்பிழம்புகள்
வெற்றிட வெளி
என்று.... 
சிதறிச் சென்ற அனைத்திலும்
எதற்காகவோ துழாவுகிறது
கவிதையின் விரல்கள்
தொட்டுணர்ந்தவை
தேடுதலின் இலக்கு இல்லை எனினும்
அவைகளையும்
அழகாய் பதிவிட்டுக் கொண்டே
முடிவற்ற தேடலின்
துழாவுதல் தொடர்கின்றது....

கலாசுரன்...

என்னவெல்லாம் கொடுமைகள்...!!

அது எல்லோருக்கும்
சொல்லியிருப்பேன்
இது
இல்லாமல் இருந்திருந்தால்
இது இப்படி இருப்பதால்
அதை யாரிடமும்
நான்
சொல்லப்போவதில்லை

என்னவெல்லாம் கொடுமைகள்
காதலெனவும்
கவிதையெனவும்

கலாசுரன்

வெறுப்பு தொகுப்பு....

அவ்வப்போது கிடைத்த 
கிடைக்காமையின் வெறுப்புகளை 
சேமித்து மனம் நிரம்பியபின்...

கிடைத்தபோதும் 
தளும்புதல் என்பதாக 
கைகால் உதறியபடி 
கண்களில் பெருக்கெடுத்த  
விழிநீர் வழிந்தோடும்   
கபடமறியாத மழலையின் கன்னம்...!
அதன் ஓரங்களின் எங்கும்

அழுகையின் அர்த்தங்களை
தனக்குத் தானே தேடுகின்ற
விடைகளின் சிரிப்பு
சற்று நேரத்தில்
காரணமற்று பிறக்கக்கூடும் ....!

கலாசுரன்

காதல் நுண்ணியம் .

மடம் கொணர்ந்த உன் சிரிப்பால் ...
கருப்பு நிற மச்சம் ஓன்று ...
வெட்கப் பட்டு 
கன்னக்குழியில் மறைந்து விடுகிறது....! 

கலாசுரன்

வெகு கூர் படிம அழகு.....!

தனிமையின் வண்ணங்களை
 விழித்திரைக்குப் பின்னால் மறைத்து வைத்து ...
பின் அதன் நுண் பொருளென
வார்த்தைகளின் அடர்த்திக் கூர்மை....
 அது சென்றடையும் ஒவ்வொரு இலக்குகளிலும்
 உடைத்தல் பழகி மோதும் அனைத்தும்
 உருமாற்றத்தின் பரிணாமங்களைப் 
புதுவிதமாய் படைத்தழிக்கும்
 இலக்கியத்தின் வெகு கூர் படிம அழகு.....!

 கலாசுரன்..

Sunday, October 3, 2010

குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் ...!

மழை தாண்டி வந்ததும்
திண்ணையில் விரித்து
விரித்தது வைக்கப்பட்டது  குடை

தரை தொடும் அதன் ஒவ்வொரு
கம்பிகளும் தரையில்
விழிநீர்  வழிய எழுதிக்கொண்டிருந்தது
தன் கதைகளை .....
யாரும் வாசிப்பதற்க்காக இல்லை  எனினும் 


தன்னை சுருட்டி ஓரமாய் வைக்கையில்
சோகங்கள் மறந்து
தன் கனவின் மடிப்புகளுடன்
அடுத்த மழைவரைக்கும்
நிம்மதியாக தூங்கும்படிக்கு .....!


கலாசுரன்..

நன்றி திண்ணை...
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310100212&format=html

நன்றி வார்ப்பு..
http://www.vaarppu.com/view/2326/