Tuesday, September 28, 2010

இரும்பு காகத்தின் கதை.

தூரங்கள் தாண்டி வந்து 
என்னருகில் 
உட்கார்ந்து 
கதைகள் சொல்ல தொடங்கியது 
அந்த காகம் 


பயணங்களின் 
உப்புத் தன்மையால் 
அதன் தலை 
துருபிடிக்க ஆரம்பித்திருந்தது 


அதன் 
கதைகளின் குரலில் 
பிரளயத்தின் அலைகள் 
மோதிக்கொண்டிருந்தது 


கதைகள் 
நீடிக்கையில் 
என் பார்வையும் 
அதன் துருபிடித்த தலையும் 
பொடிந்து உதிர்ந்துகொண்டிருந்தபோதும் 


தன் கதையை மட்டும் 
சொல்ல மறுத்தோ 
மறந்தோ அந்த காகம் 
முற்றிலும் பொடிந்து விழுந்தது 


கிடைத்ததனைத்தும் 
சேர்த்து 
ஆலையில் தீமூட்டி 
துருபிடிக்காத ஒரு 
இரும்புக் காகத்திற்கு 
உயிர் கொடுத்தார்கள்  


மீண்டும் 
அந்த இரும்புக் காகத்தின் 
கதைகளுக்காக 
காதுகள் துருபிடித்து 
உதிர்வதை 
எவரும் புரிந்துகொள்ள முயற்ச்சிப்பதில்லை ...


கலாசுரன் 


நன்றி உயிர்மெய், உயிரோசை..
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3438

Sunday, September 26, 2010

மேடை ஏறாத கலைவண்ணம் ...!

இமைகளில் இருள் மை
இதழ்களில் வைகறையின் சாயம் 
கன்னங்களின் நட்சத்திரத் தூள் 
நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் ... 
கைவிரல்களில் வானவில் மருதாணி 
உடுத்த தாவணியின் முந்தாணை
வெயில் இழை ஜரிகையால் நெய்யப்பட்டிருந்தது...
மேடை அருகில் சிறுமியின் அழகான தோற்றம் .... 

தனக்கான மேடை நேரத்தை எதிர்பார்த்தபடி 
ஓய்வில்லாது தாளம் போடும் கால்களும் 
பொறுமையை நெருடி நிதானம் பழகத் துடிக்கும் 
கைவிரல்கல்களும் புதுவித 
நாட்டிய முத்திரை அரன்கேற்றியவாறு .... 
அடிக்கடி இதழை கவ்விக்கொள்ளும் 
மேல்வரிசைப் பற்கள் 
ஒரு கிரகணத்தை நினைவூட்டிச் செல்கிறது .... 

தனக்கான மணி ஒலித்ததும் 
இயல்பான தன்
கலை வண்ணங்களை கலைத்துவிட்டு 
மற்றவர்களின் கை தட்டலுக்கான
நிர்பந்தத்தின் இயல்பிழந்த
பாத தாளங்களும் முத்திரைகளும்
 முகபாவங்களும் நிகழ்த்திவிட்டு 
சரியாக செய்தேனா ?
என்ற கண்ணசைவு 
தன்
இயல்பான அடுத்த நாட்டியத்தின் தொடக்கமாக 
குருநாதருக்குப் பரிசளித்துவிட்டு 
திரைகளுக்குப் பின்னால் ஓடி மறைந்தாள் ...! 

கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009264&format=html

Sunday, September 12, 2010

தாணிமரத்துச் சாத்தான்.....!

அந்த வீட்டிற்கு கிழக்காலே
அந்த இரண்டு மரங்களும்
கால்வலிக்க நின்றுகொண்டிருந்தன..!

அங்கு யாரும் பொதுவாக
செல்வதில்லை
அந்த அரசமரத்தடியிலான
கோயில் பூசாரியை தவிர

பக்கத்தில் நிற்கும்
தாணி மரத்திலும்
ஒரு விளக்கு
எரிந்துகொண்டிருப்பதுண்டு

அரசமரத்துக் கடவுளும்
தாணி மரத்துச் சாத்தானும்
எங்களுக்கு விந்தையானதாக
இருந்தது

அந்த மரங்களில்
ஏதேனும் ஒன்றைப் பார்த்து கூட
சூண்டுதலோ
உமிழ்தலோ கூடாதென்றே
நம்பியிருந்தோம்

அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்
ஓன்று சாமிக்குற்றம்
அல்லது சாத்தான் குற்றம்
இரண்டும் பிரச்சினை தான்...

அங்கு எச்சம் போடும்
காக்கா, குருவி, நாய் என
ஒன்றிற்கும் இந்த குற்றங்கள்
பலிப்பதாக பார்த்ததில்லை....!

கடவுளுக்கும் சாத்தானுகுமான தூரம்
ஏழு அடி ஆறு அங்குலம் தான்
என்று நாங்கள் தெரிந்து வைத்திருந்தோம் ...

அடிக்கடி பெரியவர்கள்
அந்த மரங்களைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள்

பூசாரி
பக்தி பூசிய
விபூதியோ, பூக்களோ
வழிபாட்டிலான
அர்ச்சனை பொருட்களோ
கொண்டு வருவார்

காணிக்கை போட்டு
வாங்கிக்கொள்வார்கள்....
சுவையானவை
நாங்களும் எடுத்துக்கொள்வோம்

என்றும்போல்
அன்று மாலையிலும்
அர்ச்சனை பொருட்கள் சாப்பிட்டோம்...

அங்கு
விளையாடிக்கொண்டிருந்த
சிறுவன் ஒருவன் கவலையோடு சொன்னான்
அந்த அரசமரத்து சாமி
மிகவும் ஏழையாக இருக்கிறார் என்று ...

ஏன்...? என்றவனிடம்
சாமிக்கு உடுக்க
ஒரு சிவப்பு துணிதான் இருக்கிறது
அதும் மிகவும் சிறியது.....!

பூசாரயின் காதுகளிலும்
ஒலித்தது ... சிறுவனின் கவலை....!

அடுத்த திருவிழாவிலேயே
அரசமரத்து சாமிக்குக் கிடைத்தது
கிளைகளும் வேர்களும் மட்டும்
வெளியே திரியும்படியான
ஒரு சிவப்பு சட்டை ....!!

சிறுவன் ஆனந்தத்தில்
விழாமுடித்துத் திரும்புகையில்
கண்ட காட்சி
அவனை மீண்டும் கவலைப்படுத்தியது ..

அங்கு
தாணிமரத்துச் சாத்தான்
அம்மணமாக
நின்றுகொண்டிருந்தான்...!

கலாசுரன்

நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009129&format=html

Monday, September 6, 2010

இன்னொரு கடவுளின் யுத்தக்கனவு....!

காய்கள் நகர்த்துவதுபற்றி 
வெகு நேரமாக 
யோசனைகளை 
அந்தக் கட்டங்கள் 
நிர்ணயித்துக்கொண்டிருந்தது...!


அந்த 
யோசனைகளுக்குச் 
சொந்தமான 
காய்களில் 
ஒரு மதகுருவும் 
ஒரு குதிரையும் 
அரசனும் 
எதிரிகளால் சூழப்பட்டபின் 


ஆட்டத்திலான 
வாழ்வை நீடிக்கச் 
செய்வதற்கான 
கட்டாயப்பெடுத்தப்பட்ட 
இந்த யோசனைகளை 
மற்றும் அவைகளுக்கான 
காலங்களை 


எதிரிகளின் கடவுள்
தேநீர் அருந்தியபடி
ரசித்துக்கொண்டிருக்கிறான்..

தொற்றுப்போவதர்க்கான
பார்வைகளையும்
நகைப்பையும்
ஒரு காய் நகர்த்தலின்
கட்டங்களில் தெளியவிட்டு
அரசன் சாய்ந்து மடிவதை
ரசித்தபடி பார்த்துக்கொண்டே

இன்னொரு ஆட்டத்திற்க்கான
அணிவகுப்புகள்
தொடங்கும்
இன்னொரு கடவுளின்
யுத்தக்கனவு..

கலாசுரன்

நன்றி உயிர்மெய், உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3358Sunday, September 5, 2010

காலம் சிரித்துக்கொண்டே இருந்தது....

சிவப்பு வெயில் கசியும்
ஒரு மாலை வேளையில்
எவருக்கும் புரிந்துகொள்ளமுடியாமல்
சாலையோரமாய்
ஒரு மனிதனின்
சிந்தனைகள்
இறந்துகொண்டிருந்தது

அச்சிந்தனைகளுடன்
அவனும்
இறந்துகொண்டிருப்பதாக.....!
அவனது
மண்டையோட்டில்
அழுத்தமாய் எழுதிவைத்தபின்....

இருள் சூழ்ந்ததும்
அருகாமையில்
அவனுக்காக
ஆறடியிலான
குழி ஒன்றை
தோண்டி வைத்து

சூழ்ந்த இருளில்
ஆங்காங்கே சென்று நின்று
காலம் வயிறு குலுங்க
சிரித்துக்கொண்டே இருந்தது.


கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009057&format=html