Thursday, August 26, 2010

இருந்தும் அந்த பதில்.............!!

அந்த கேள்விக்கான பதில்
வருத்தமளிப்பதாகத்தான் இருக்கும்....
இருந்தும்
அந்தக் கேள்வி
பதிலுக்கான வாசலில்
வெகுநேரமாய்
க் காத்திருக்கிறது

அந்த பதிலுக்கு
இதயத்தில் இன்னும்

ஈரம் காய்ந்துபோய்விடவில்லை
என்பதனால்
வருத்தமான வலிகளைவிட
காத்திருப்பின் சோம்பலும்
நிதானமின்மையும்
அழகானவை
என்ற முடிவு

காக்கவைப்பத்தின் கடினம்
குறைவதாகத் தெரியும் பட்சத்தில்

அந்தப் பதில்
தன்னைத் தானே சபித்துக்கொண்டு
மௌனித்த வெற்றிடத்தின்
ஆழங்களுக்கு குதித்து
தற்கொலை செய்வதைவிட
அந்தக் கேள்விக்காக
வேறு எதுவும்
செய்யப் போவதில்லை....!
****
கலாசுரன்

நன்றி திண்ணை 


Wednesday, August 25, 2010

கவியரங்கம் (தொலைகாட்சி)

watch next video


watch the next video 

finished

Monday, August 23, 2010

இவர்கள் உழைக்கிறார்கள் ...!

மலைகளின் உயரம் குறைகின்றது
பளு ஏந்தி பயணிக்கின்ற
மலைவாழ் மக்களின்
பாதச்சுவடுகளில்....!

கடல் நீர்மட்டம்
அதிகரிக்கிறது....
கடலோர மக்களின்
வியர்வையிலும், கண்ணீரிலும் ...!

பனைமரங்களின்
பக்கவாட்டிலான செதுக்கல்கள்
தேய்ந்து காணப்படுகிறது
இவர்கள் மார்பிலும் கைகால்களிலும்...!

சாக்கடையிலும் கழிவுநீரிலும்
நாள்முழுதும் நாடு மணக்க
சுத்தம் செய்யும்  இவர்கள்
அசுத்தத்தின் துர்நாற்றம் மட்டுமே அறிகிறார்கள் ....!

பகல் முழுதும் வயல் காட்டில்
இவர்களின் கடின உழைப்பு
ஏற்கள் புதுப்பிக்கப்படுவதில்லை
அறுவடைக்கான இவர்கள் கனவுகளும்....!

இன்னும் ஏராளம் சொல்லலாம்
உழைப்பின் விதங்களும்
உழைப்பவர்களின்
அவலங்களும் .....!

இருந்தும் இளைப்பாறுகையில்
இவர்களில் சோகம் பெரும்பாலும் காண்பதில்லை
பதிலாக மகிழ்ச்சி நிறைந்த பகிர்தல்கள்
ஏனனில் இவர்கள் உழைக்கிறார்கள் ...!

கலாசுரன்

Sunday, August 22, 2010

வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்

எதிர்பார்ப்புகள் எதுவும்
மிச்சமாகாது
முகம் கவிழ்கிறது
ஒரு பார்வை
வந்த பாதைகளின் ஓரமாய்
அவர்கள் நின்றிருந்தார்கள்
இவ்வகைப் பயணங்கள்
அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றவாறு..
தொலை தூரத் தொடர்புகள்
இன்னும் தெளிவாக்கப்படவில்லை
நன்றாகத் தெரிவது
கண்ணெட்டும் தூரம் வரையிலும்
பாதைகளின் வலைப் பின்னல்கள்
அவர்கள் பயணிக்காததின்
காரணம் புரிகிறது...
அப்பயணங்கள் வழியோரமாய் நின்றுவிடுகிறது
வரும் இன்னொருவரிடம் அதற்க்கான
காரணத்தை சொல்லமறுத்தவாறு ....!
----------------------------------------------------------------

கலாசுரன்

நன்றி திண்ணை 

Thursday, August 19, 2010

அவைகள் புன்னகைகள் மட்டுமே....!அடுத்த நாளுக்கான
புன்னகைகளை
விட்டுவைத்தபின்

இன்று மலர்ந்த
புன்னகைகளை
அவைகளுக்குரிய முகங்களிலிருந்து கிள்ளி
கூடைகளில்
சேமித்து
விற்கப்படுகின்றன

அவைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை
சென்றடைவது தனக்குரிய
முகங்களிலோ  இடங்களிலோ
இல்லை என்று....

வலிகொண்ட நேரம்
அவைகளுக்கு உணர்ந்திக்கக்கூடும்
அவைகளுக்குரிய முகங்களிலிருந்து
கிள்ளப்படுகிறோம் என்று ....

அந்த பொழுதுகளில் வலியிருந்தும்
அவைகள் அழுவதே இல்லை
ஏனனில்
மடியும் வரையில் அவைகள்
புன்னகைகள் மட்டுமே....!

கலாசுரன் 

Sunday, August 15, 2010

சிரிக்கும் தருணங்கள் ....!

பலதும் மறைக்கப்படுகிறது
சிலது தெளிவில்லாது
தெரியக்கூடும்

இதற்கு இரவு என்று பெயர்
என்றதும் ஒவ்வாமையின்
சிரிப்பை அணிந்துகொள்கிறான்

பெரும்பாலானவை நன்றாக தெரிகிறது
சிலது முற்றிலும்
மறைக்கப்படலாம்

இதற்கு பகல் என்று பெயர்
சொன்னதும்.. அணிந்தவற்றை
தூக்கி வீசப்பட்டது

யாரும் எதிர்பார்ப்பதில்லை
ஒரு சிரிப்பின் பின்னால் ஒரு
பைத்தியம் ஒளிந்திருக்கிறதென்று....காரணமற்ற  சலனங்கள்
சிலசமயம் சொல்லக்கூடும்
இவனுக்கும் பைத்தியமென்று....அவன் எழுந்து சென்றதும்
பார்த்துக்கொண்டிப்பவர்களில்
சிலர்  சிரிப்பார்கள் ...

கலாசுரன்....
நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008158&format=html

Tuesday, August 10, 2010

வரப்போகும் ஒரு நாளில் ....

கொஞ்சமாவது
மிச்சப்பட்டிருக்கட்டும்
ஆகாயப்பறவைகள்
மீண்டும் வருவார்கள்

அன்னியப்பறவைகளுக்கும்
தெரிந்திருக்கிறது
உன் கூடு
வாசலற்றதென்று

பொரிப்பதற்கான
முட்டைகளை
உடைத்தெறியும் வலி
இப்போது மட்டும்தான்

மரபணுக்கள்கூட
உனக்கானது
உன்னிடமே இருக்கட்டும்
அல்லது

வரப்போகும் ஒரு நாளில்
உன் குஞ்சுகளை
அவர்கள் கவ்விச் செல்வார்கள்
நீ உன் கூட்டைச் சிதைப்பாய்

ஆகாயப்பறவைகள்
ஏமாற்றத்தின் கவிதைகளை
வெண் மேகங்களில்
எழுதிவிட்டுச் செல்வார்கள்

மேகங்கள் நெடுங்காலம்
அழுதுகொண்டிருக்கும் ....

அதனால் உனக்கானதாய்
கொஞ்சமாவது
மிச்சப்படுத்திக்கொள்....

ஆகாயப்பறவைகள்
மீண்டும் வருவார்கள் ..


கலாசுரன்
நன்றி கீற்று ..
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10322:2010-08-10-00-32-50&catid=2:poems&Itemid=265

Monday, August 9, 2010

விலா எலும்பு ...

கீரியும் பாம்பும்
நெடிய காலமாய்
காதல் கொண்டிருந்தனர்

காலத்தின் வனங்களில் அவர்கள்
நற்கனிகள் தேடினார்கள்

காடு ... அவர்களை
வெறும் வயிறுமாய்
புறக்கணித்தது

இருந்தும்
அவர்களை அத்தேடல் தொடர்ந்துசென்றது

முடிவாக
வனத்தின் எல்லையில்
ஏவாள் கடித்து விட்டுச்சென்ற

விலக்கப்பட்ட கனி
சிரித்துக்கொண்டு
படுத்திருந்தது....

இருவரும் அதை பகிர்ந்து கொண்டனர்

பிறகு ஒருவர் இன்னொருவரை
வால்பகுதியிலிருந்து
கடித்துத் தின்ன ஆரம்பித்தனர்

அங்கு ஆதாம்
தனது விலா எலும்பை
தேடிக்கொண்டிருந்தான் ....!

கலாசுரன்
நன்றி உயிர்மை, உயிரோசை....
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3266

Sunday, August 8, 2010

இது சாயங்காலம் ....!

உச்சிவெயில் காயட்டும்
சிந்தனைகள் பிளவுண்டு போகும் வரை
ஒளியின்........... சலனங்கள் கூட
அறியாத சாய்தல்
சில விருப்பங்களையும்
சாயச் செயிதுவிடும்...!
இருப்பினும்
இறுதி மூச்சிழுத்துவிட்டு
மூக்கில் பஞ்சு திருகி...
படுத்துக்கொள்கிறான்
தனக்கான சொத்தென
நெற்றிப்பொட்டில்
ஒற்றை ரூபாய் நாணயம் ....!
அதும் தன் உழைப்பில்
உருவாக்கப்படாதது
நிரந்தரமாய் மூடிக்கொண்ட கண்களில்
எவருக்கும் தெரியாமல் மறைந்து போன 

கண்ணீரின் சிந்தனைகள் சிரிக்கின்றன
பார்த்து நிற்கும்
உனக்கும் ஒருநாள் கிடைக்கும்
இன்னொருவரின் உழைப்பில்
ஒரு ஒற்றை ரூபாய் நாணயம் .....
சோகத்தின் கிருமிகள் அண்டாத பஞ்சு
தேடி வைத்துக்கொள்.....!
நெருப்பிலேனும் மண்ணிலேனும்
நிம்மதியாய் இறுதி மூச்சிழுத்து
தூங்கும்படிக்கு....!
இது சாயங்காலம் ....!


கலாசுரன் 

நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008078&format=html

Monday, August 2, 2010

அன்பின் அரவணைப்பில்...

நடந்து செல்கிறார்கள்
சிறுவனின் கை
அன்பின் வழிநடத்துதலுக்காக 
அப்பனின் கையை
பற்றிக்கொள்கிறது...

யார் மேலோ எதன்மேலோ கொண்ட
கோபம் அப்பொழுதே
அக்கைகளை உதறிவிட

கலந்குவதென்னவோ
அச்சிறுவனின் கண்கள் தான்.

உதறப்படுகையில்
கனலுக்கு ஒப்பான
சோகப் படிமங்கள் 
அவன் மனதில் விழுந்து
புகைவதுண்டு...

பயணங்கள் முடியும் வரை
முடியாமல் தொடர்கிறது
அன்பிற்கான அணுகுதலும்
கோபத்திலான 
உதறப்படுதலும் ...

அங்கு குளிர்விக்கும் விதமாக
அவனை அணைத்துக்கொண்டது
அன்னையின் கரங்கள்..

நிகழ்ந்தவை அனைத்தும்
மறந்து சிரிக்கிறான் சிறுவன்
அன்பின் அரவணைப்பில்...

கலாசுரன் 

சாவிக் கொத்து.

இறுமாப்புகளின் சிறையிலிருந்து
 மனதை மீட்டுவருவதாய்
 ஒரு கற்பனை ...!

 என் கற்பனைகளின்
 உருவப் படிமங்களை
 பார்ப்பதற்கான ஒளி
 ஒரு ஆந்தையின் கண்களிலோ
 ஒரு மின்மினியின் அடிவயிற்றிலோ
 பத்திரமாக்கப்பட்டிருக்கும்...

 அதன் வீச்சு
 சிலநேரம்
 கண்களின் காட்சியை
 முற்றிலும் பறித்துவிடக்கூடும் ...

சிந்திப்பதற்கோ
பகிர்வதற்கோ
திறவாத கதவுகளின் சாவிக் கொத்து

மௌனத்திலேயே 
தொலைந்துவிட்டதாய் ... 
அக்கதவுகள் மீண்டும்
திறவாமலேயே இருக்கும்

பேச்சிலும் சிந்தனைகளிலும்
செயல்பாட்டிலும்
நிரந்தரமாய் தங்கிவிட்ட
முரண்பாட்டை மறைக்க
இன்னும் அந்த மௌனித்த
முகமூடிகளுக்கு முடியாமல்ப் போய்விடும்

கற்பனைகள்
கற்பனைகளாகவே இருக்கட்டும் ....!
இறுமாப்புகளின்
புதுச் சாவிக் கொத்திற்கான வளையம்
உருவாக்கப்பட்டுவிட்டது

இனி
ஒருபோதும் திறவாத
சில கதவுகளின் சாவிகளை
அதில்
த் தொங்கவிடவேண்டும்....!

கலாசுரன்.நன்றி உயிர்மெய், உயிரோசை.
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3240


Sunday, August 1, 2010

மடித்து வைக்கப்படும் விருப்பங்கள் ....!

சட்டைப் பையில்
வைத்துக் கொள்கிறாய்
உனக்கானதென
எதோ ஒன்றை

உன் விரல்கள்
அடிக்கடி
உள்சென்று வெளிவருவதுண்டு
வேறு ஒருவருக்காக எனப்
பாவித்தபடி ....

அங்கிருந்து எடுக்கப்பட்ட
மற்றொன்று
யாருக்கேனும் அளிக்கப்படலாம்

எதிர்கொள்ளும்
யாரோ ஒருவரிலிருந்து
எதோ ஒன்றை
எதிர்பார்த்தபடி ....

பிறகு
மீண்டும் அங்கேயே
மடித்து வைக்கப்படும்
உன்னுடையது மட்டுமான
விருப்பங்களென....!

கலாசுரன் நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008013&format=html