Thursday, July 29, 2010

அன்பின் ஈரங்கள்


தென்றலொன்று
சுடுகாட்டில் அங்கும் இங்கும்
மௌனமாய் அலைகிறது

எரிக்கப்பட்ட
முடிவுற்ற ஒரு வாழ்க்கையின்
புகை மட்டும் சுவாசித்தபடி...

அது 
மின்னல் வெளிச்சத்தில் 
அன்பின் ஈரங்களை தேடுகிறது
யாரேனும் எரித்தலோடு
விட்டுச் சென்றிருக்கக்கூடும் என்பதால் ....

கலாசுரன் ..நன்றி கீற்று ....
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10087:2010-07-22-05-00-13&catid=2:poems&Itemid=265

Tuesday, July 27, 2010

அது கவனிக்கப்படலாம் ...!

அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை
நானாகின்ற என்னை
சிலநேரம்
அது...... கவனிக்கப்படலாம்
நானல்லாத பொழுதுகளில்

அதற்க்கு காரணமும்
நான்தான் என்று
சொல்லப்படுகையில்
சில முழுமையற்ற
விசாரிப்புகளுக்கு
எந்தக் காரணமுமின்றி
திடீரென
பைத்தியம் பிடித்துவிடுகிறது

அது ஒருவேளை
மீண்டும் கவனிக்கப்படலாம்
ஒரு பைத்தியத்தின் மேலான
அவர்களது பரிதாபமென ....!

கலாசுரன்

நன்றி உயிர்மெய், உயிரோசை...
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3209

Monday, July 19, 2010

யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் ...!


ஜன்னல் கண்ணாடிகளில்
ஒரு நிழல் ஆடி மறைந்தது... அங்கு
எவரும் இல்லாமல்கூட இருக்கலாம்

குளிர்காய்கிறது நிலவு....
எதோ ஒரு சலசலப்பின் ஓசைகள்
ஓய்வில்லாது ஒலிக்கிறது

சிந்தனைகளில் துளிர்விடும்
குளிர்நிலவின் கிளைகளில் மலர்கின்ற பனி .....
தன் பூவிதழ்த் துளிகளை தூவுவதாகலாம்

விழிகளில் வாழ்கின்ற காதலெனும்
பறவைகளின் இறக்கைகள் சோம்பலால்
படபடப்பதுமாகலாம்  ....

அலையும் 
இந்த தென்றலும்
தன் விரல்களால் மெல்லமாய்
என் கற்பனை வீணையை இசைக்கின்றதுமாகலாம்

இதையத்தின்
ஓசைகள் சுவர்களில் மோதி
பிளவுண்டு காதுகளில் விழுகின்றதுமாகலாம் ....

கரைகளை வருடும்
நதி நீரின் அலைகள்
ரகசியமாய் காற்றிடம் பேசுவதுமாகலாம்....

பனித்துளி மோதிச்
சிலிர்த்ததோர் புல்வெளி
இரவிடம் செல்லமாய்க் கொஞ்சுவதுமாகலாம்.....

மனதோரம் செல்லமாய்
தூங்குமென் கனவுகள்
ஒருகணம் திரும்பிப் படுத்துக்கொண்டதுமாகலாம் ....

அவ்வோசை இவை ஒன்றுமல்லாது
எவரும் விரும்பும் ஒருவர்
நம் வீட்டிற்கு படிதாண்டி வருவதுமாகலாம் .....

சப்தங்களரியாது சலனங்களரியாது
பூனைபோல் எழும்பி...... திறக்கும்படிக்கு
கதவண்டை நிற்கிறேன்.....!


கலாசுரன்

நன்றி திண்ணை..
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310071810&format=html

Friday, July 16, 2010

என்ன சொல்ல...?

புனைவெனச்
சில
ஆட்டங்கள்
புரிந்துவிட்டு ...
புரியாததொரு
மொழிவடிவைக்
கையாண்ட பின் ....
தனித்து நின்று
பகிர்தல்களை
சாதூர்யமாக அலசி...
குறும்பின்
நகைப்பை
அணிந்தவாறு ...
பல
மலர்ச்சிகளைப்
புரிவதுமுண்டு ...
தற்காலத்தின்
ஒருவித விளையாட்டென
புதுக்கவிதை....!

கலாசுரன்

குற்றசாட்டு....

நீ தவறு செய்திருக்கிறாய்...
உன் வாழ்க்கைப் பாதை சரியில்லை...
உனக்கு பேசத் தெரியவில்லை..
நீ இங்கு எதற்கு வந்தாய் ?
உனக்கு இதயமே இல்லையா?
உன் நடவடிக்கைகள் சரியில்லை...
நீ இன்னும் தொலைவில் போய்விடு...

என்றெல்லாம்
மனிதர் தீட்டிய சட்டதிட்டங்களின் படி

அவனை 
புறக்கணித்தவர்களும்
வெறுத்தவர்களும்
சபித்தவர்களும்
போதித்தவர்களும்
ஏராளம்.....

அவர்களுக்கும் அவனுக்கும்  ஒரு வித்யாசம் தான்
அவர்கள் சொல்கிறார்கள்
அவன் கேட்கிறான் .


கலாசுரன்...

சாபத்தின் தீச்சுவரும், வார்த்தைகளின் சாம்பலும் ...!

நான் எழுதத்
துநிந்தபோதும்
ஒரு தீச்சுவர்
காகிதங்களை மறைத்துவிடுகிறது.

அது
முன்காலத்துக்
கவிஞர்களின் சாபம்
என்பதாகவும் ...

எனது
இதயத்தில் மிகவும்
வலிஎழுப்பும் காயம்
ஒன்றாகவும் ....

தொடர்கிறது......

இருந்தும்
அதைப் பிளந்து
புதுமைகள்
எழுதிட...

மின்னல் கீற்றொன்றை
எழுதுகோலாக
தேடுகிறேன்...

நெடுங்காலத்து
அத்தேடல்
நிறைவடையும்
தருணத்தில்...

சேமித்த வார்த்தைகளும்
சாம்பலாகி விடுகின்றன...

சேர்ந்தே
என் கனவுகளும்....

இப்பொழுது
கற்பனைகளின்
உயிர்மூச்சு ....

எரித்தல் என்பதின்
முன் பகுதிஎன
பெரும் துக்கத்தை ....

சாம்பலில்
படுக்கவைத்துவிட்டு
அகாலத்தில்
மாண்டு போகிறது....!!!

கலாசுரன்

அன்புடன் ஒரு அழைப்பு

அன்புடன் ஒரு அழைப்பை
அணைத்து நிற்கும்
மௌனம் ....
ஒன்றும் பேசுவதற்கில்லை
அன்பின் மணியோசை தொடர்கிறது ....

சற்று திரும்பிப் பார்த்தவாறு
சொல்கிறார்கள்
"நாங்கள் அன்பின்
தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளோம்"

அல்லது ......."சற்று நேரத்திற்குப்
பிறகு தொடர்பு கொள்ளவும்..."

"தொடர்பு
துண்டிக்கப்பட்டுவிட்டது.....!"கலாசுரன் 

கரையற்ற நதிகள்...!


சில்லறை சிதறல் போல்
சிரித்துக் கொண்டிருந்தவள்
அதை மீண்டும் சேர்க்க
முடியாததால் தானோ?

பிரிதலில் சொட்டும் விழிநீர்
அவள் கன்னங்களில்
வற்றாது வழியச் செய்கிறாள்
கரையற்ற நதிகளாய் ....!

கலாசுரன்

மணல் சாரா பாலை...!

விழிமழை நனைத்த
கன்னம் வருடி
கோடையில்
புகுந்த பின்
கரை சாராது
ரேகை நதிகளில் நெடுக
ஈரக் கொடு கிழித்து
நின்றபோதும்
நதி சார்ந்த பகுதிகளில்
ஏதும் துளிர்விடாது
மணல் சாராத
பாலை என
மழலையின் கை....!


கலாசுரன்

Monday, July 12, 2010

நேற்றைய இரவின் வியர்வை ...!

ஜன்னல் கம்பிகளில்
படிந்திருந்தது
நேற்றைய இரவின் வியர்வை

அத்துளிகள்
கடந்த சில நிகழ்வுகளை
கண்முனையில் திறந்தது

அவள் பார்த்து பின்
கை நழுவிச்
சிதறிய கண்ணாடித்துண்டுகள்

அவைகளை சென்று பார்த்தபோது
அனைத்தும் நெடிய ஒரு பிரிதலை
துகள்களாக உடைத்துக்காட்டின

இன்னொரு நாள்
ஒரு மழைத் துளியில்
பிரதிபலித்த நிலவின் முகம்

தொடர்பற்று கிழிந்த
காற்றினூடே
தரை சேர்ந்து சிதறியது

நேற்றிரவு கனவுகளில்
தோன்றிய கவிதையின்
வடிவற்ற படிமன்ட்கள்

விடியலின் கூரான
கதிர்களால்
உடைக்கப் பட்டுவிட்டன...

நினைத்ததுபோலவே அதோ
அக்கம்பிகளின் கீழே
தொங்கி நின்ற நிறமற்ற துளி ஒன்றில்

அவள் விழிநீரும் சேர
தொடர்பைத் துண்டித்து 
விடை சொல்லாது விழுந்து மடிந்தது ...

மடிதலுக்காக இன்னும்
சிலவற்றை அக்கம்பிகளில்
இணையற்று தொங்குகின்றன...

அவள் விழிகளை
ஏக்கத்துடன்
பார்த்தபடி......

கலாசுரன்.

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9914:2010-07-12-14-29-12&catid=2:poems&Itemid=265

ஒரு தூரிகை சலனமற்று நின்றது....!

அகோர நிகழ்வுகள் அவ்வப்போது
ஆகாயத்திலிருந்து
எரிந்து தொடுவானில் விழுகின்றன....

மேகங்கள் எங்கு தொலைந்தனவோ ?

ஒவ்வொன்றின் வேகமும்
இதயத்துடிப்பின் வேகத்தை
அதிகரிக்கச் செய்கிறது...

பறவை நாகங்கள்
நட்சத்திரங்களை விழுங்குகின்றன...

அசுரன் ஒருத்தன்
மௌனத்தின் எல்லையில்
நிதானமாக உட்கார்ந்தபடி
கவிதை எழுதுகிறான்...

அவனுக்குத் துணையாக
ஒரு சாத்தான் 
கனல்ப்  படுக்கையில் 
எதோ பேசிக்கொண்டிருக்கிறான்...

கண்முன் எஞ்சியவை
அழுகின்றன....

 வீசிவந்த தென்றல்
சலனமற்று நின்றுவிட்டது....

சூரியன் அந்தப் பெண்ணின்
கூந்தலில் சிக்கியிருக்கக்கூடும் ....

நிலவை ஒரு ஓநாய் தின்று
வாந்திஎடுக்கிறது...

சாக்கடையில் புறா ஓன்று
ஆழ்ந்து தூங்குகிறது....

அரக்கமரத்துக்  கிளையில் உட்கார்து
ஒரு 
கொம்புடைய அணில் வெங்காயம் தின்கிறது....

அந்த அசுரனின் தூரிகை
சலனமற்று நின்றது....

புறா பள்ளத்தாக்கிற்கு
 பயணித்தது .....!

கனவுகள் மீண்டும் வரட்டும்
அவன் தூரிகை
மீண்டும் சலனங்களின் கன்னத்தில் 
தொடர்ந்து முத்தமிடுவதர்க்காக  .....!

நரகங்கள் ரசனைகள்  நிறைந்தவை.....!

கலாசுரன் 

நன்றி உயிர்மை, உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3146

Sunday, July 11, 2010

இரவில் உதயமாகும் சூரியன்கள்...

நிதானம் நிதானம்
என்ற அதட்டலிலேயே
அவசரம் பழகி
பொறுமையின் கடிதங்கள்
கைமாற்றப்படுகின்றது

எதற்க்காக இது
என்பதறியாமல்
எழுதப்படும்
ஒவ்வொரு எழுத்தின்
வளைவுகளிலும்

புது வார்த்தைகள்
உதயமாகி
முன் நிற்கும் மற்றொன்றை
கருணை இல்லாது
கொன்றழித்து

சிரித்தபடி சிறந்ததென
கர்வம் வருட
இன்னொரு வளைவின்
உடைக்கப்பட்ட
விரிசலில் மறைந்து

தொடரும் புது உதயங்கள்
எல்லை அறியாது
அகாலத்தின் தூக்கத்திலான
இருளின் துளிர் கிள்ளி
கனவுகளை மலரச் செய்கிறது...

கலாசுரன்நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31007112&format=html

Thursday, July 8, 2010

நெடிய கொடும், பிளக்கப்பட்ட கொள்கைகளும்

நெடுக ஒரு
நெடிய கொடும்
பிளக்கப்பட்ட
இரு வேறு
கொள்கைகளும்

இதற்க்கான
விவாதங்களும்
யுத்தங்களும்
தர்க்கங்களும்
ஓயாமல்

இடைப்பட்ட
புரியாமையின்
மனதும்
வறுமையின்
காய்ந்த வயிறும்

இதற்க்கான
சோகங்களும்
சிக்கல்களும்
முடிச்சிட்டு நிற்கும்
ஒரு புரட்சிக்கான தாகம்...!

மனதும் உடலும்
சோர்ந்தவர்களை
தேற்றுவது ....!
அதைவிட இங்கே

பேசுவதற்கும்
விவாதிப்பதற்குமான
கோடுகளுக்கும்
பல்வேறு கொள்கைகளுக்கும்
பஞ்சமில்லை ...

வறுமை சிலருக்கு
நிரந்தரமாகவே
இருக்கட்டும்

அவர் முதுகில் தான்
எங்கள் சுமைகள் இருக்கும்

அதை பரிதாபத்துடன்
பார்த்துக்கொண்டே
நாங்கள் உள்ளார்ந்து சிரிப்போம்...!

ஏனனில் எங்களுக்கு
அவர்கள் வலி தெரியாது
தெரிந்ததோ
சில நெடிய கோடுகளும்
பிளக்கப்பட்ட கொள்கைகளும்..!!!

கலாசுரன்