Saturday, June 26, 2010

கடைசி மத்தாப்பு........!.
கண நேரத்தில் உயிரிழக்கும்
பல்லாயிரம் விண்மீன்களையும்
சில வால் நட்சத்திரங்களையும்
கண்ணருகில் படைக்கும் பிரம்மமாய்
சிரிப்பை அணிந்து நிற்கும்
சிறுமியின் கையிலேயே ஒளிவட்டமாய்
சுழல்கிறது மத்தாப்பு........!
.
அதன் ஆயுள் ரேகையை
உண்டபடி மெல்ல நகர்கிறது நெருப்பு
நுனியிலிருந்து தன்னை சுழற்றும்
கையின் இரு விரல் பிடிப்பின் இடுக்கைக்
குறிவைத்தபடி........!
.
இலக்கு தொலைவில் இல்லை எனினும்
சென்றடையும் முன் தன் ஆயுளை
கம்பிப் பாதையில் எங்கேயோ
தொலைத்துவிட்டு
மடிகிறது பிரம்மமும், நெருப்பும்
சேர்ந்தே சிறுமியின் சிரிப்பும்....!


கலாசுரன்
.

நன்றி உயிர்மெய், உயிரோசை....


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3046

Friday, June 18, 2010

கொம்பு சீவி நொறுங்கும் கொழுக்கு .....

விரல்களின் காதலால்
அணைத்துக்கொள்ளப்பட்ட
கொழுக்கு ஓன்று ...

அதனுள்த் தூங்கும்
தேநீரின் வெப்பத்தைக்
கொம்புசீவி....

தன்னை
முத்தமிட்ட இதழ்களை
நோகடித்ததால்....

மடிதல் என்பதாக....
கைநழுவி தரையை ம்த்தமிட்டு
நொறுங்கியது.....!


கலாசுரன்

அசுரப்புன்னகை ..!

வாசிப்புகளின்
முற்றுப்புள்ளியை விழுங்கியபடி
யதார்த்தமாக மலர்கிறது
படைத்துவிட்டோம் என்கின்ற
ஒரு அசுரப் புன்னகை ...!

அது உடைபடும்
விமர்சனத் தருணங்களின்
கூரான படிமங்கள்
சிதறும் வகையில்
செதுக்கப்படுகிறது
அடுத்த புனைவு மற்றும்
இன்னுமொரு அசுரப்புன்னகை ..!

கலாசுரன்

நிதர்சனங்கள் தனிமையில் மட்டும் ...!

நள்ளிரவு....

காரணமற்று சிரித்தாள்
தாய் தந்தையர்
திடுக்கிட்டு சென்று
விசாரிக்க .....

"கனவு" என்றாள்  ......!!!

தனிமை சூழ்ந்ததும்
அவள் புன்னகை சொன்னது....

காதல்...!!!


கலாசுரன் 

Monday, June 14, 2010

அலைதலின் முற்றுகை ....!


கண்களின் தூக்கத்தைப்
பறித்தது கூரிருள்....
சிந்தனைகள் அங்கும் இங்குமாக
பறந்தோடுகின்றது

இருளின் அடர்த்திக் கூர்மை
கருவிழிகளின் வழியாக
உள்புகுந்து கண்களை நிரப்புகிறது

கூரையில் ஆங்காங்கே
மழைத் துளிகளுக்கான
வாசல்கள் திறந்திருக்கக்கூடும்

அது கரையான்களுக்கும்
உணவளிக்கும்
தாய்மை மறவாத கூரை

சுவர்களின் கீழிருந்து மேல்நோக்கி..
மறையா மின்னலென
விழுந்த விரிசல்கள்

அச்சுவர்கள் அடுத்த மின்னலுக்கு
அல்லது இடியோசைக்கு
விழுந்து விடக்கூடும்

ஒரு கால் ஒடிந்த
நாற்காலியின்
மற்று மூன்று கால்களுக்கும்

அதை தாங்கி நிற்கும்
தரைக்கும் இடையிலான
மெல்லிய இடைவெளியில்

எதோ ஒரு மிருகத்தின்
அலறல் சப்தம்
ஒளிந்திருக்கக்கூடும்


ஒரு பல்லி
ஒலி எழுப்பியவாறு
எங்கேயோ பசியோடு நடமாடுகிறது

இருளை அழைப்பதர்க்கெனவே
ஞாபகத்தின் ஒளிரும்
விளக்கில் எண்ணை  இல்லாமல் போயிற்று....

வத்திப் பெட்டிகள்
யாரோ ஒருவரின்
கண்ணீரில் நனைந்திருக்கின்றன

வரவிருக்கும்
விடிதலின் ஊசிக்கதிர்களில் ஒன்று
நினைவுகளில் மோதி உடைந்தது

இன்னும் காலங்கள்
காத்திருப்புகளை
சோதிக்கக்கூடும்...

வெளியே யாரோ ஒருவரின்
கால்கள்......... விழுந்து மக்கிய
இலைகளுடன்

ரெகசியமாய் எதோ
பேசுவது போலவும்
கவிதைகள் சொல்வது  போலவும்

"யார் அது ?"


கலாசுரன்


நன்றி உயிர்மை, உயிரோசை....
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3033

Friday, June 11, 2010

வானபபறவை கூவி... சொன்னவை ..!!!

தன் காலங்களின்
வரையறைகளுக்கேற்ப
இயல்பாகவே அப்பறவை
நம் நாட்டை நோக்கி வருகிறது

உயரங்களில் இருந்து
பார்க்கையில் 
நிலப்பரப்புகளின் தன்மையில்
சாதாரணமற்ற தோற்றம்

கீழ்நோக்கி நெருங்க
கண்களுக்குள் வலியுற செருகியது காட்சிகள்

வயல் வெளிகளை
விழுகி நிற்கும்
கட்டிடங்கள்

காடுகளின் பசுமைமிகு
ஆடைகளைக் கிழிக்கின்ற
சுற்றுலா தளங்கள்

புல்வெளிகளின்
அழகுத் தோற்றம் மறைத்து
மக்காத பொருட்களின் ஆக்கிரமிப்பு

நீரோட்டம் தவிர்த்து
மரணித்த நதிகளின்
சலனமற்ற சடலத் தோற்றம்

ஆங்காங்கே மிச்சமாகி
நிற்கும் உயிரிழந்த
மரங்களின் எலும்புக்கூடுகள்

அவற்றில் ஒன்றின்
இறுதி இலையும் நிலம் சேர
அப்பறவியின் ஒற்றை விழிநீர்த்துளி
அதன்மேல் விழுந்து சிதறியது ....

மனம் கதற
திரும்புகையில் 
அப்பறவை ஒலியதிரக் கூவியது

மிச்சம் இருக்கும் பசுமையையும்
அழித்துவிடாதீர்
இந்நாட்டின் சொந்தப் பறவைகள்
இங்கு ஏராளம் இருக்கிறார்கள்

அவர்களுக்கு கண்டம் தாண்டத் தெரியாது....!

கலாசுரன்...

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9514:2010-06-11-19-44-48&catid=2:poems&Itemid=265

Thursday, June 10, 2010

வானவில்லாள் மற்றும் நான்...!

நெடிய ஒரு
நலன் விசாரிப்பின்
முடிவறியா எல்லையை
இருவரும் நெருங்க...

ஓசைகள் உடைபட்டு
மௌனங்கள்
துளிர்விடுகின்றன...!

சுடும் மூச்சு
அவள் காதுமடலை
வருடியதுதான் பிழை

அன்று
என் தலையணை முத்தங்களில்
நெளிந்தவள்...

இன்று
என் கை படைத்த
செவ்வக அறைக்குள்ளே
என்னை அணைத்துக்கொள்கிறாள்....

லீலைகள் பலவுண்டென
என் விரல்கள் வருடிப்
பயணித்த வளைவுகளோ ஏராளம்..

ஆசைகளின் அடர்காட்டில்
இன்பத்தின் இருள் குகைக்குள்
நழுவி நுழைந்த சுகமும்
பயமும்...

இறுதிவரை எட்டாமல்
திரும்பநேர்ந்து
தொடர்கிறது...

சற்றும் தேயாத அவ்வானவில்லாள்
என் வியர்வை மழையில் தான்
முழுதும் நனைகிறாள்.....

அவளுடைய
இன்னும் சில
வண்ணங்களில்
நெருக்கம் அதிகரிக்கிறது...

அவ்வப்போது வெட்கம் பழகி
எங்கள் முத்தங்களும்
சிணுங்குகின்றன...

பெருமூச்சுடன்
விலை உயர்ந்த ஒன்றை
பரிசளித்து
அவளை எனதாக்கிக் கொள்கிறேன்....

உலகம் ரசிக்கப்போகும்
ஒரு புதுக்கவிதையின்
பிறப்பை எதிர்பார்த்தபடி...

கலாசுரன்

Monday, June 7, 2010

மனது தொலைகின்ற சூதாட்டங்கள் ...!

துக்கத்தின் ரீங்காரம் தழுவுகின்ற மனம்
ஏதேதோ சிந்தனைகளில்
உருவின்றித்  தொலைகின்றது

தொலையும் இடங்களில் இருந்து புறப்படும்
சில முரட்டுக்கனவுகளும்
அழுது தீர்க்கப்படாத சோகங்களும்
சூதாடுகின்றன ....
விருப்பங்களை விசாரிக்காமல்
ஆட்டத்தில் வைக்கப்பட்டது
சீர்குலையாத மனதின் ஒருபகுதி ....!
வெற்றி யார் பக்கமாயினும்
மனதின் நிரந்தர சீர்குலைவு 
நிச்சயமாக்கப்பட்டுவிட்டது ....
மீளுதலுக்கான விதிமுறைகள் ஏதேனும் 
இந்த ஆட்டத்தில் இருக்கக்கூடுமா?

பகடைகள் உருட்டப்படுகின்றன

கலாசுரன் நன்றி உயிர்மை, உயிரோசை http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3004