Monday, May 31, 2010

சுருள் ...!

என் நண்பனின் மனைவியாய்
நீ வருகிறாய்
கோபக் கூர்மை கொண்ட மனம்
முன்னொரு காலத்தின் கதவுடைத்து
தன்போக்கில் பாய்ந்தது

அதன் தொடக்கம்
உனக்கும் எனக்குமான
முதல் பார்வை பரிமாற்றம்

ஏனோ நான் ரசிப்பவளாய்
நீ இல்லை என்பதை விட
நான் மிகவும் வெறுப்பவளாய் நீ

தொடர்ந்த நாட்களில்
என் துன்புறுத்தல்கள்
உனக்காக முனை தீட்டி நின்றது

உன் புத்தகங்களை
மறைப்பதும் சிதைப்பதும்
பழக்கமாக்கிக்கொண்டேன்

உன் பேனாக்கள் கூட
என் கைவரிசையில்
சிக்காமல்ப் போனதில்லை

பலமுறை என் கவராயத்து உண்டிவில்
எய்த காகித கற்கள்
உன் கருகுழல்க் கொடியில்
மலர்களாய் தான் மலர்ந்தது

எனக்கு பிடிக்கும் என்பதாக
திருப்பி நகைத்தாய்..

அதற்காக
ஆசிரியர் தந்த ஒவ்வொரு அடியும்
இன்பமுற பெற்றுக் கொண்டேன்

இருந்தும் எனக்கான உன்
கண் கலங்கல்
பரிதாபத்தின் சாட்டை அடிகாளாக
என்னை இன்னும் வலியுறத்
தண்டித்துக்கொண்டுதான் இருக்கிறது...

மழைநாளில் நான் நனைய
குடைக்குள் இருந்தும்
உன் விழிகள் நனைந்தன ..

உன் பரிதாபத்திற்கு
ஆளானதால் என் விழிகள் பெய்த
ஒவ்வொரு துளிகளையும்
வான் மழைத் துளிகளோடு
சேர்த்தே எவருக்கும் தெரியாமல்
வழியனுப்பினேன் ...!

அதுவரைக்கும்
உன்னை அழவைக்கப்
பயணித்த பாதைகள் அனைத்தும்
தோல்விகளில் தான்
சென்று சேர்ந்திருந்தது...

பள்ளி வாழ்கை முடியும் நாள்
உன் கண்கள் கலங்கின ...

வெறுமனே கிடைத்த
மாபெரும் வெற்றியென
மகிழ்ந்தேன் ....

ஆனால் அங்கு எல்லோரும் தான்
அழுதுகொண்டிருந்தார்கள்
பிரிதலின் வாள்முனையில்
அறுபட்ட மான்களாய்

என் நகைப்பைப் பார்த்து
"உனக்கு இதயமே இல்லையா?"
என்றவனிடம்

"பிரிவதற்கே சேர்ந்தோம்" என
தத்துவம் சொல்லி
புன்னகை வீசி சென்றேன்...!

காட்சிகளை மொத்தமாய் மறைத்தது
தொளில் நண்பனின் கை....!

திடுக்கிட்டு விழித்ததுபோல்
"இவளையா மணந்து கொண்டாய் ?"
என தொடங்கும் முன்னே

"இவர் பள்ளியில் என் வகுப்பு மாணவன்
மிகவும் அன்பானவன்"
என்று சான்றளித்து
புன்னகை தூவினாள்...!

மறுபடியும் அவள் முன்
தோற்று நிற்கிறேன்
கண்கள் கலங்கின....!

"என்னடா கண் கலங்குற?
திருமணத்திற்கு யாரெயும் தெரிவிக்க முடியல அதான்...
மன்னிச்சுக்கடா......" என்றான்

என் வார்த்தைகள் எங்கு மறைந்தனவோ ?
அவர்களை பிரியும் வரை
என் முனகல் மட்டும் நீடித்தது...

அவள் மறைகையில்
அழுதபடியே வீட்டுக்குள்
நுழைந்ததும் சொன்னேன்
நீதான் என்னுயிர்த் தோழி....!!!


கலாசுரன்
நன்றி கீற்று....
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9160:2010-05-30-17-51-47&catid=2:poems&Itemid=265

ஒற்றை தென்றல் ...!

இலைகளின் காதலில்
பனிமேகங்களின் குழந்தைகள்
இருள்கடலின் முத்தெனவோ ?
ஒளி தன் சொத்தெனவோ?
மிளிர்கின்றன

அவைகளை மேகமற்ற
குளிர் மழையென
பெய்யச் செய்து
அதில் நனைந்தவாறு
பயணிக்கின்ற ஒற்றை தென்றல்...

அவள் இரவு மலர்களின்
வாசமும், பனிமேகங்களின்
குளிர்ச்சியும் கொண்டு நொடி நேரத்தில்
ஒருவித சுகம் படைத்து துணை தவிர்த்து
விடை பற்று செல்கிறாள் ...

தனிமையை வருடி
நிலவு காயும்
கனவுகளின் கண்களில்
கவிதை பூசிச் செல்கிறது

மேகம் தூவிச் சென்ற இருள்...!

கலாசுரன்...
நன்றி உயிர்மை, உயிரோசை....
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2976

Saturday, May 29, 2010

ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து !

ஒரு மனமுடைதலின்
தாக்கத்திலிருந்து
சொல்லத் தொடங்குகிறான்


தொடத் தகாத
நிழல்களோடும்
இனம் புரியாத
கவலைகளோடும்


உள்புகும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
உருமாற்றங்கள் விரும்பாது
அடிமனதில் நெளிகின்றன


தோல்விகளுக்காக அல்ல
விற்றிகளின் சோகங்களை
சந்தித்தமைக்காக ...


பலதரப்பு வெற்றிகள்
வாழ்க்கை எனும்
மாபெரும் தோல்வியை
பரிசளித்ததர்க்காக ...


ஒவ்வொரு வெற்றியிலும்
தோல்விகளில்
ஆழமானதொன்றும் இல்லை என்றான்


சந்தித்த தோல்வியின்
ஆழங்களை இன்னும்
அவன் அளந்து முடியவில்லை


வெற்றிகளின் உயரங்களைத் தான்
இதுவரை ஆழங்கள் என்றிருந்தான் ...!


உயிர் சதுப்பில் சிக்கிக்கொண்டபின்
வாழ்கை என்ன வாழ்வதென்ன ?


அனைத்திலும் புறக்கணிப்புகள் தான்
மிஞ்சுகின்றன....


எதுவும் சரியாக இல்லை என்றான்
பிறகு
சரியாக ஒன்றும் கையாளப்படவில்லை என்றான்


அலட்சியத்தின் வாயிலாக
சிதறடிக்கப்பட்டது
வாழ்கையின் படிமங்கள்


ஓன்று தொட்டிலாகவும்
இன்னொன்று ஊஞ்சலாகவும்


ஒவ்வொரு துன்பத்தின்
அழுத்தங்களும்
ஓய்வில்லாமல் ஆடவைக்கின்றது


தொங்குதலுக்கான கயிற்றின்
நுனி தேய்ந்து
அறுபடும்வரை....!


கலாசுரன்....
நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005302&format=html

நன்றி யூத்புல் விகடன் 
http://youthful.vikatan.com/youth/Nyouth/kalasuranpoem290510.asp

Thursday, May 27, 2010

சாய்தல்

புயல் ஓன்று
மின்னலால் தாக்கப்பட்ட
மரத்துடன் மண்ணில்
சாய்த்து சிதறியது....

கலாசுரன்

கலை இரவு...!

முத்துக்குவளையில்
ஒற்றைத்திரி சுடர்
வெட்கம் பழகிடும்
உந்தன் நிழல்நடை
அந்தித் தென்டலும்
சிக்கித் தவித்திட
சிற்று கலையுடை
பட்டுத் தழுவிடும்
சந்திப்பென்ற்றொரு
ஒற்றை கடைவிழி
குத்திசென்றதில்
உள்ளம் பிளந்தது
பட்டுப்புடவையை
மிஞ்சும் சிற்றிடை
பட்டுப் பொன்னுடை
மொத்தம் நீக்கிட
சிற்பத்தொருகலை
கண்ணைக் கிள்ளிட
மொட்டுப்புன்னகை
முட்டிச் சிலிர்த்தது
உச்சிக்கருகுழல்
மொத்தம் கலைந்துடன்
சித்தம் கலங்கிடும்
சொக்கிச் சுளிந்திடும்
ரெட்டை வரிதனில்
ஒற்றைக் குறளென
மச்சப் புருவவும்
அந்தக் கணமவள்
முல்லைக் கைகளால்
தென்றல் படைத்ததும்
அந்தச் சுடரொளி
மொத்தம் மறைந்தது
மிச்சம் உள்ளவை
மற்மக் கலையென
இருட்டில் மறந்தது....

கலாசுரன்