Tuesday, March 16, 2010

அடுத்த பயணத்தின் காற்றைக் கிழிக்க அலகு தீட்டும் வேனல்ப் பறவை...


ஒரு ஓவியம் தீட்டப்படுகிறது...

உயரமிகு நீலக்கடலில் 
பாய்மரங்கலாய் பயணம் 
செல்லும் வெண் மேகங்கள் .... 
அவை சிலநேரம் 
உருமாறிக்கொண்டே அலைந்தபடி...... 
தொடுவானத்தில் பத்திரமாய் 
கரை சேரக்கூடும் என்றிருக்க .... 
அந்தி வானில் பல வண்ணங்கள் 
தூவிச் சென்ற நிறைகுடம் ஒன்று.... 
மெல்லமாய் ஆழமிகு நீரின்
எல்கையில் விழுந்து கரைந்து போகிறது.... 


கலாசுரன்

கும்பகோணமும் வெகுதூரக் கடற்கரைகளும்

பூக்கள் மலருமெனத் தானே...
நட்டார்கள்... 
அப்பூக்கள் மலரும் முன்னே .... 
அலட்சியங்களின் அனல்
எழுந்து கருகச் செய்துவிட்டதே ... 
சிறு மலர்களின் கருகிய
நினைவுகள் ததும்பும் கும்பகோணம்.... 
சுமித்ரா சீறி வெகு தூரக் கடற்கரைகள் 
மக்களை வேண்டாமென்றே கைகழுகி விட்டது .. 
இங்கே அனலுக்குப் பதிலாக அலை ... 
கருகுதலுக்குப் பதிலாக சிதைவு.....!! 
இரண்டிற்கும் ஒற்றுமை ஒன்றுதான் 
அனல் பறக்கும் கண்ணீர் அலைகள் ...! 

கலாசுரன். 

நன்றி கீற்று http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5755:2010-04-15-05-10-00&catid=2:poems&Itemid=265

கேள்வி பதில்களின் இடை புகும் கண நேரத்தில்...!


மீண்டும் எழும்
கேள்விகளுக்கான
படிமங்களை...
உடைத்தெறியும்
பதில்களின்
கூரான பட்டயங்கள்...
முன்னமே
முனை தீட்டி
நின்றவாறு
இப்பொழுது
இதயங்களைக்
கிழித்துவிட்டன...
ஒரு எழுர்ச்சிக்கான
வினாக்கள் கூட
ஆழமிகு இதயத்தின் வடுக்களால்...
ஓசை எழும்பாது
குரல்வளையிலேயே
மடிந்துவிடுகிறது...
இதழோரத்து
நகைப்பு ஓன்று தான்
மீதமாய் நிற்கிறது...
ஏதோ ஒரு
லட்சியம் இன்னும்
இருக்கிறது என்பதாக...
அதையும்
முன்னிருக்கும்
முகங்களோடு சேர்த்தே...
சிறை அடைத்து
வலியுற
தண்டித்துவிட்டு...
இடை புகும்
கணநேரத்து
பெருமூச்சின் பதட்டம்...
மரணம் பழகி
மீண்டும்
பிறக்கின்றது...
ஒரு தர்க்கத்தின்
விதிமுறைத்
தத்துவம் என்பதாக..!

கலாசுரன்

நன்றி uthful Vikadan... http://youthful.vikatan.com/youth/Nyouth/kalasuranpoem120410.asp

Wednesday, March 10, 2010

கனல் .....!!

எரிச்சலைப்
படைக்கும்
புகை எழுப்பி ...

கண்களை
சோகமின்றி
அழவைத்தவாறு ....

குப்பைத்தொட்டியின்
கருவறையில்
குழந்தையாய்

காற்றின் தீண்டலில்
சிரித்தபடித்
தூங்கும்
கனல் .....!!

கலாசுரன்

Tuesday, March 9, 2010

எச்சரிக்கை......!

வெள்ளை அணிந்து தான் வந்தார்கள்....!! 
விடிவைப் பரிசளிப்போம் என்பதாக..... 
ஆதரவுகளை கைப் பற்றியபின் ... 
பல நிறங்களை 
மாற்றிக்கொண்டார்கள் 
சந்தர்ப்ப வாதிகளாக .... 
மீண்டும் வருவார்கள் 
முதல் நிறம் வெண்மையாக...! 
எச்சரிக்கை......! 

கலாசுரன்.....! 

நன்றி திண்ணை

Monday, March 8, 2010

அனாதையாகத் தொலையும் தண்ணீர்....!

 கவனமின்றித் திறந்து வைக்கப்பட்ட 
அரசுத் தண்ணீர்க்குழாய் ஒன்றில் ... 
உடல் குளிர 
நனைத்துக்கொள்ளும் ஒரு நுணல்.... 
அது தன் உள்ளத்தில் தேக்கிவைத்த.... 
வேனலின் வெப்பத்தை 
நீருக்குப் பரிசளித்து ரசிக்கிறது.... 

கிடைத்ததனைத்தும் 
சுமந்துகொண்டு அடுத்த தெருவின்.... 
சாக்கடையில் அனாதையாக 
விழுந்து தொலையும் தண்ணீர்....!!!

 கலாசுரன்... 

நன்றி கீற்று, உயிரோசை

யார் அந்த பைத்தியம் ?

* மின்கம்பத்து விளக்கு பகல் முழுதும் அகாரணமாக நகைக்கிறது..... பைத்தியம்.....! * கலாசுரன்

மண்ணில் விழுந்த பூ ....

பூ ஓன்று அவசரமாக மடிந்துவிட்டது தன் சுதந்திரம் பறிக்கப்படும் முன்.........! கலாசுரன்

Sunday, March 7, 2010

இரவுகள் பனித்துளிகளை விழிநீராய்க் கொட்டுகிறது...!!

முகம் தெரியா இம்சைகளை
மூழ்கடித்த வார்த்தைகளும்
தற்பொழுது முக்காட்டுக்குள் 
மறைந்து கொள்கின்றன...... 

துயிலெழத் தூண்டுவது 
புனைவு எனினும்
விழிக்க மறுக்கிறது 
இறையாண்மையின் 
கூரான கருக்குகள்.... 
அவை
மென்மை கொணர்ந்த 
இளைப்பாறுதலின்
தூக்கத்தைச் சிதைக்கின்றன ..... 
பனித்துளிகளை 
முத்துக்களாய் ரசித்த 
இரவுகள்
இப்பொழுது அதயே....
விழிநீராய்க் கொட்டுகிறது.....! 

கலாசுரன் 

நன்றி திண்ணை

குளிர்காயும் நினைவின் நெருப்பில் விழுந்து மடியும் கவிதை....!

நேரடித் துவக்கங்கள் 
இல்லாத கவிதை ஓன்று... 
கட்டமைப்புகளை 
சூறையாடி மடிகிறது.... 
குளிர்காயும் நினைவின் 
நெருப்பில் விழுந்து புகை எழுப்பியவாறு.....! 

கலாசுரன்...

அவள் விழிகள் நனைந்திருந்தன .....!!!

ஒருவித நெடிய இசையுடன் 
நீர்ப்பரப்பின் மேல் 
நின்றாடும் வண்டு ....! 
அதை வேட்டையாடும் விதமாக 
வாதுமை மரத்தின் சாய்ந்த 
கிளை ஒன்றிலிருந்து .... 
குப்புறக் குதித்த 
சிறுவனின் சப்தத்தை நீர்..... விழுங்கி 
சிற்றலை வளையங்கள் 
சிணுங்கிக் குலுங்க சிரித்தது.....! 
ஆனந்தத்தின் இலகுவான விரிவடைதல் 
கரைகளில் மோதி நொறுங்கியது..... 
அதன் எதிரொலிகள் 
துளிர்விடும் முன்னே 
கரைமோதும் நீரைத் திருடிப் பருகுகல்யில் ... 
காதுகளை கவர்தவாறு 
ஓசை எழுப்பிச் சிரித்ததொரு குடம்... 
தொடர்ந்து 
ஒரு செல்லக் குழந்தையாய் 
அவள் இடை நெளிவுகளில் உட்கார்ந்தபடி......
வீடுவரை ..... 
அணைத்த கையைகளை நனைத்தவாறு 
ஒரு கூத்தாடிப்பயணம் சென்றங்கே..... 
குடம் தரை இறங்குகையில் 
ஒற்றைக் கடைவிழி மெல்ல எழுந்து 
என் பார்வையை ... ஈர்த்தபடி 
மௌனமாய் நீர்ப்பரப்பில் நின்றாடும் வண்டு...........!! 


கலாசுரன்..

Saturday, March 6, 2010

கிரகணம் இன்னும் முடியவில்லை......!

கூரையின் சிறு துளை ஓன்று .... 
அது வழியாக எட்டிப்பார்த்த சூரியன்.... 
தரை மத்தியில் 
சிறு நாணயமென விழுந்து.... 
சோகம் என்பதுபோல் 
மெல்லத் தேய்ந்து முழுதும் கரைந்த பின்..... 
சிறு நகைப்புடன் 
மீண்டும் உதயமாகிறது ..... 
என் அறை மிகவும் 
பிடித்துவிட்டது என்பதாக....! 
கிரகணம் இன்னும் முடியவில்லை......! 

கலாசுரன்

திரும்பிப் பார்க்கிறேன் ..!

உனது வீட்டு வாசல் தாண்டிச் செல்லும் பாதை...
அதன் வளைவுகளை
சாயச் செய்யும் 
இரு சக்கரத்தின் மேலான
ஒற்றைப் பயணம்...

அப்பயணம் சில கனவுகளையும் 
என் நகைப்பின் நெளிவுகளில் 
தொலையச் செய்துவிடுகிறது ....

மீண்டும் பார்க்கவேண்டுமே என 
அடிக்கடித் தூண்டியபடி உதயம் கொள்ளும் ...
உன் வெட்கம் மறவாது 
வீட்டைத் தாண்டி தொலைவில்
சென்றபின் திரும்பிப் பார்க்கிறேன்....! 

கலாசுரன்

நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது...!!

சோகத்தின் நீரோடைகள்
உறைந்து போகின்ற
ஆனந்தத்தின்
பனிக்காலம் ஒன்றில்.....

வேறு நினைப்புகள் புகாது
மனம் மகிழ்ந்து
ரசிக்கையில் ....

முடிவிழந்த சில
பெருமூச்சுகளின்
சோர்பு....

தன் மதிப்பை
இழந்து தொடர்கிறதோ ?
என மனம் வினவத்
தொடங்க .....

மகிழ்ச்சியின் சுடும்
முத்தங்கள்
அதை ஒருமுறைகூட
புண்படுத்தி ரசிக்கிறது ....

அதன் பின் மனதின்
ஓரங்களில் ஒதுங்கும்
காயங்களைத்
துளைத்து ....

வலிக்கச் செய்யும்
வார்த்தைகளைத்
தொகுத்துவிட்டு ....

அவைகளை
உடைத்தெறியும்
கணநேரத்து நகைப்பின்..

ஒற்றைத் தீக்கீற்று
மௌனத்தில் உருகி
வழிகிறது.....!

அதன் தொடர்ச்சியாக
மேகப்போர்வையைக்
கிழித்து உள்வரும் வெயில் ...

இன்னுமொரு
வேனலைத்
துவக்கிவிட்டு...

பரிசளிப்பதென்னவோ ?
குளிரும்
பனித்துளிக்குப் பதிலாக
விழிகளின் சுடும்
வியர்வை.....!


கலாசுரன்

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112812&format=html