Thursday, February 25, 2010

பகிர்தலின் ஓர் அவஸ்தை.........!


*
வார்த்தைப் பகிர்தலின்
புயலில் சிக்கி சிறு துளிகளாய்ச் 
சிதறியது 
சற்று கலகலப்புடன் என் கனவுகள்.......! 


என்னை மௌனமாய் உரசிச்
சென்ற சில வார்த்தைகளின் 
கூர் நுனிகள் கிழித்த கனவொன்றின் 
உள் சிதைவுகளை வருடும் 
சில ஞாபகங்கள் பிளவுண்டு
சிதைவுகளை மீண்டும் சிதைக்கிறது.......! 


மூலையோரத்து தூசிகளாய் 
இடம் பெயர மறுக்கிறது 
மனதில் நின்று ஒரு சில வினாக்கள்.....! 


நெடிய காலமாய் 
பதில் தேடும் கனவுகளின் கன்னத்தில்
தாகம் பருகும் ஓர் கோப்பையின்
அன்பு முத்தங்கள்......! 


என்னை கருணையுடன் 
தண்டிக்காது சகஜமாய் மன்னித்துவிடுமோ 
என் கனவுகளென 
நினைவுகளின் ஆழங்களில்
ஒரு மடந்தையின் தயக்கமும் உண்டு. 


என் வினாக்களின் பதில்கள் கூட 
கேள்விக்குறிகளாய் எழுந்து
என் முகம் பார்த்து நகைக்கிறது செல்லமாய்....! 
ஏமாளி எனவோ.? கோமாளி எனவோ....? 


என் புனைநுனிகள் கூட 
சில வார்த்தை நுனிகளுக்கு அஞ்சி
காகித மடிப்புகளுக்குள் மறைந்து 
சலனமின்றித் தூங்கிக்கொள்கிறது..


காகிதப் பாதைகள் சீராய் 
செப்பனிட்ட பின் 
பயணங்கள் துடரலாம் 
என்ற முன்விதி நினைப்போடு.......! 
*
***
கலாசுரன் .

No comments:

Post a Comment