Sunday, February 28, 2010

பிரிமணை முடையும் கறுப்புச் சூரியன் ......!

முடிந்துவிடும் என்பதாகத்
தொடரும் எழுத்தொன்றின்... 
கூரிய வால் நுனி 
மேல் நோக்கி வளர்ந்து 
விண்ணைக் கிழித்துச் செல்கிறது ... 
அதில் அழகுப் பூக்கள் 
மலரக்கூடும் என்பதால்.... 
அண்ணாந்து பார்க்கிறேன்... 
நிர்பந்தமான
அந்த எதிபார்ப்பின் வலி ... 
முதுகெலும்பின் கீழ் முனையில் இருந்து 
கழுத்துவரை தீர்க்கமாய் பரவிய பின்...
 நிதானமாக உட்காரும் படிக்கு... 
பொறுமையை நெளித்து 
பிரிமணை முடைகிறான் பின்னிரவில்.. 
ஒரு கறுப்புச் சூரியன்....! 

கலாசுரன்

வானவில் உடைகிறது ...

காற்றில் எங்கோ தொங்கும் 
ஒரு துளி ஏந்திய 
அரூபக் கவராயம் ஓன்று..... 


தான் படைத்த அரைவட்ட 
ஏழடுக்கு வில்லோன்றை... 
தொடுவானத்து நேர்கோட்டால் 
நாணேற்றி 
முறுக்கித் தொடுக்க 
ஒரு அம்பில்லாததால் ... 
அவ்வில்லை 
உடைத்தெறிகிறது வெயில்....! 


கலாசுரன்

மீண்டுமொரு ஊதாரியாக.....

அலட்சியமாய் நோகடித்த
புனைவுகளை ஆரத் தழுவி 
நெளிகிறது மனதொரத்து
கூரிய வினாக்கள் ..
அவை முனை உடைந்த 
பேனா ஒன்றை மை நிரப்பி ....
எழுதத் தூண்டியபடி
காகிதத்தைப் பறித்துச் செல்கிறது ..
ஏமாற்றம் என்பதாகத்தான்
மீண்டுமொரு படைப்பின் உதயம் 
மாண்டு போகிறது ...
கஞ்சனாகும் ஒரு ஊதாரியாக..... 

கலாசுரன்

Thursday, February 25, 2010

துக்கத்தை வெடிக்கச் செய்யும் பனிக்காற்று..!துக்கத்தின் பெருமூச்சுகள் 
உலர்த்திய உதடுகள்..
அவைகளை வருடி 
வெடிக்கச் செய்யும் பனிக்காற்று.. 
சில நேரம் இதயங்களையும்..! 


கலாசுரன்

முடிவின்றி முடிந்தது நாடகம் ........!


கண் மூழ்கி குருடாகும் இருளில்
அரங்கேறியது ஒரு இருள் நாடகம்........! 
கண் திறக்க மறுத்தவாறு ரசித்தேன்
அதற்க்கு கனவு என்றொரு பெயரிட்டு
திரை இறக்கி காட்சியமைப்புகளும்
காட்சி மாற்றங்களும் 
வெகுவாக நிகழ்ந்தன ரசனையின் மகிழ்வோடு........!
சட்டென முடிவின்றி முடிந்தது நாடகம்.....! 
இளம் சிவப்பு திரை போர்த்தி
கண்காணா தூரத்திற்கு மறைந்துவிட்டன
அனைத்து காட்சிகளும்
சேர்ந்தே கதாபாத்திரங்களும் 
ரசிகன் என்னைத் தவிர......! 
கண் விழித்துப் பார்க்கையில் 
மின் கம்பத்து விளக்கு எரிந்துகொண்டிருந்தது.......! 


கலாசுரன்

சூட்சுமங்கள் தேடி.........!!


சாத்திரங்களும் சூத்திரங்களும் கற்று அதன்
சூட்சுமங்களும் அறிந்த பின்
மனம் ஆத்திரத்தில் இதையெல்லாம்
வெளிநிலத்தில் வீசிவிட்டு
வெறும் பாத்திரத்தை ஏந்திச்
செல்கிறது மாத்திரைகள்
இயக்காத வாழ்க்கையின்
பாசறைச் சூட்சுமங்கள் தேடி.........!!

 கலாசுரன்

சாதனைச் சிரிப்பு........!
மடம் போர்த்தி நின்ற
வானம் அதன் தனித்
திறமை என்பதுபோல்
பதிலளிக்காமல் மௌனம்
தொடர்வதுண்டு, உயர்ந்த சாதனைகளாய் .........!

காலத்தின் கதவிடுக்குகள்
தேநீர் நிறத்தில் புகை பருகி
நகைக்கிறது வேதனைகளைத் திறந்தபடி....!

சாதனைகள் அழுகின்றன........!

நீடிய இரவுகளின் எழுதுகோல்
புனைந்த சாகசங்களை
வெண் மேகப் படுக்கையில்
அலட்சியமாய் சிந்தச் செய்ததால்....!

இருந்தும் காலைக் குளியல் முடித்து
மிச்சமிருந்த மேகத்து கோலத் தூளெடுத்து
கோலமிட்டு ரசித்த, பொன் வெயில் சிரிப்பு.......!

வானத்து கோலங்களின் அழகை
காற்றின் கோபங்கள் அழித்து
அலங்கோலமாய் வானிலேயே
விட்டுச் செல்கிறது.........!

அதன் சோகத்தை
மழையாய் அழுது முடித்த பிறகு
இன்னுமொரு இரவின் துவக்கத்தில்
மூன்றாம் பிறை, சாதனைச் சிரிப்பு........!

கலாசுரன்

வரும் இன்னொரு பிறப்பைத் துவக்கிவிட்டு........!


பயணித்த பாதை எங்கும் சிந்திய
வியர்வையும்
விழிநீரும் இரத்தத்தின் நினைவுகளும்
நிறைந்த ஆழங்களுக்கு திரும்ப நேருகையில்
நீந்துதல் அல்லது மூழ்குதல்
நிகழக்கூடும் என்பதால்
புன்னகைப் படகேறி
கூர் சொற்களின் முனை தீட்டி
புறப்படுகிறேன் ஒரு 
நெடிய வரலாற்றின் 
மயானப் புன்னகையை சிதைக்க.......!
மௌனத்தின் அகோர நெளிதல்கள்
இப்போது அடங்கிவிட்டன
வற்றி தேடியல்ல சில லட்சியங்கள் தேடி....
சில பதில்கள் தேடி.......
நீயும் மறைவாய் நானும் மடிவேன் 
வரும் இன்னொரு பிறப்பைத் துவக்கிவிட்டு........! 

கலாசுரன்

சற்று தொலைவில் நானும்...!


உன்னைக் கடந்த காற்று
பின்தொடர்ந்து சிறு புயலென உருமாறி 
தன் விரல் நுனிகளில்
உன் கூந்தலை சுருட்டி பிடித்தபடி
பிரிய மறுத்து, அடம்பிடித்தவாறே
மழலையாய் நடக்கிறது.....!
அதே சிணுங்கலுடன் 
சற்று தொலைவில் நானும்...! 


கலாசுரன்

முழுதும் நனைந்தபடி....!
~~~~~~~~~~~~~~~~~
இலை நரம்புகளின் கிழிந்த
பாதை எங்கும்
தேக்கிவைத்த வானத்து
விழிநீர்த்துளிகளை
சோகம் மறந்து
மொத்தமாக அழுது
கொட்டித் தீர்த்தது
மரம்,
தன் கிளைக் கைகளில்
ஏறி விளையாடும்
சிறுவர்களின் மகிழ்ச்சிமிகு
நகைப்பில்.......!
மழை படைத்த
அவர்கள், தன் சிரிப்பை
உதடிடுக்கில் செருகி
கிளை அணைத்து
நின்றார்கள்........!
முழுதும் நனைந்தபடி....!
~~~~~~~~~~~~~~~~~

கலாசுரன்

முதல் மழைத் துளி......


வானவில்க் கோப்பைக்
குப்புற கவிழ்ந்து 
ஆகாய நகைப்பின் 
சிறு பகுதி ஓன்று கலகலவென
தூள் பறக்க
மண்ணில் மோதி நொறுங்கியது.......! 

கலாசுரன்

இதோ இன்னுமொரு கவிதையாக...........!


சாலையின் 
இருபுறங்களிலும் நின்றபடி 
ஏதோ ஒரு ஆழமிகு ஊடலால் 
கிளை விரல் கைகோர்த்தவாறு
பின் நோக்கி செல்கின்ற மரங்கள்....! 
ஏன் என்றால் 
நான் முன் நோக்கி செல்கிறேனாம்..........
அவைகளையும் தொலைத்து தூரத்து மலைகள்
என்னை முந்துவதர்க்கெனவே
என் கூடவே வேகமாக.....! 
அச்சந்தேகம் தவறு......... 
என் வேகம் குறைகையில்
வேகத்தை குறைத்து என் 
கூடவே வர விரும்பும்
என்னுயிர் தூரத்து நண்பர்கள்........!
இவர்களின் பயணத்தைக் கவனித்தவாறு
என் பயணத்தின் இலக்கு 
வந்த பாதையிலேயே தொலைந்து விட்டது..........! 
பயணச் சீட்டும் உயிரிழந்து
என்னைப் புறக்கணிக்க
நடத்துனர் அதட்டி
"அவனும் அவனது கனவும்......" என
வெளியே தள்ளிட
கதவும் நகையாடியது
நானும் என் கனவுகளும் நிலம் புரள
நொறுங்கிச் சிதறியது
கனவுகள் மட்டும், தனிமையில் நான்.........!
பிரிதலின் சோகம் மௌனமாய்
சிந்திய விழிநீர் முத்துக்கள் பிளவுண்டு
முளைத்தது கனவொன்று 
இதோ இன்னுமொரு கவிதையாக...........! 


கலாசுரன்

உள் வெடிப்புகளின் கீழ் முனையில்.........


உயர்ந்த சிகரங்களை மட்டும் மிதித்துச் சென்றவன்
ஏனோ இப்பொழுது....
ஒரு உடைந்த அணுவின் 
சிதைந்த உட்கருவில் வேர்விட்டுச் செல்லும்
உள் வெடிப்புகளின் கீழ் முனையில்
ங்கேயோ வெகுநேரம்
கற்பனைகளோடு வாசம் செய்கிறான்......
அதன் ஆழங்களில்
விழிவிரல்களால் எதையோ தேடியவாறே .........!
தனிமையின் மௌனத் தூண்டில்
ஓன்று 
நான் உனக்கு துணை இருக்கிறேன் என்பதாக
அவன் இதழ்களை வருடி
முத்தமிட்டபடி முன்னிருந்து நகைக்கிறது.......!
அவ்விடங்களில் எங்கும்
நுணுக்கமாய் விழுந்து சிதறிய
கவிதைகளின் நொறுங்கிய துண்டுகளை
ஒரு குவியலாக ஒன்றுதிரட்டி
சிறு குன்றென படைத்துவிட்டு,
திரும்புகையில் அதையும்
வேண்டா வெறுப்போடு மிதித்துச் செல்கிறான்.........! 

கலாசுரன்

எச்சரிக்கையாக


உன் முன்னிருக்கும் பகலைக் கவனித்தபடியே.....
நீ என் முன்னிரு.
உன் பின்னிருக்கும் இரவை
நான் கவனித்துக்கொள்கிறேன்.......
தரை முந்தானையை பலமாய் செருகிக்கொள்...
மீண்டும் இயற்கையின்
நீலப் புடவை கிழிபட்டு கருநிழல்
இருள் பரப்பி அவள் அம்மணமாக நிற்கக் கூடும்........! 


கலாசுரன்

ஒரு முற்றுப்புள்ளி தேடுகிறேன்.......!

. வெள்ளமென நிலா நனைகையில் அன்னமென உன் உலா வருகை.....! . சந்தமென கொலுசுகள் மெட்டிட்டு செல்கையில் உன் முன்னழகை அணைத்து முத்தமிட்டு மெய் சிலிர்க்கும் புத்தகங்களும் சில பாடங்களை கறக்கிறது புதிதாய்......! . இடை அசைவுகளின் தாளத்திற்கு நடனமாடும் சேலை மடிப்புகளும் சோர்ந்திட பின்னழகை செல்லமாய் தாளம் இணங்க தட்டிக்கொடுக்கும் ஓர் நீடிய இரவாய் உன் கருகுழல் பின்னலிழை தொங்கல்....! . அந்த பின்னல்களின் கருநிழலிடுக்குகளில் ஓராயிரம் மடமுடன் ஒதுங்கிக்கொள்ளும் என் மனதோர வினாக்கள் தற்பொழுது புரிதலை இழந்து நிற்கின்றது முரண் கொண்ட தனிமையின் முத்திரைகளாய்.......! . அவைகளில் ஒன்றாய் நானும் நின்றவாறே இறுதிக் சொத்தாகும் கேள்விக்குறிகளையும் கூந்தலிடுக்கில் எங்கேயோ தொலைத்திருக்கக் கூடும் என்பதால் ஒரு முற்றுப்புள்ளி தேடுகிறேன் என்னையே தொலைத்தபடி...........! கலாசுரன் .

சிதறிய என் கவிதை நட்சத்திரங்கள்.....!

. பேனாவின் உள்ளிருந்து வெளிவர மறுக்கும் கவிதைகளை கட்டாயப்படுத்தியவாறு சற்று கோபத்துடன் உதறிட சத்தமின்றிச் சிதறியது அறை எங்கும் தறை வானமாய்த் தாங்கும் கறுப்பு நிற நட்சத்திரங்களாய்......! கலாசுரன்

உன்னை சிரித்தபடியே படைத்துவிட்டான்........!

சற்று நேரம் தூக்கத்தைப் போர்த்திய பின் மெதுவாக சாமத்தின் கதவிடுக்குகள் வழியாக அப்போர்வையை சற்று விலக்கிப் பார்த்தேன்.......! . கண்ணாடிச் சிவர்களையும் துளைத்துக்கொண்டு என்மேல் விழுகிறது உன் போட்டுக்கண் பார்வை ....! . கண்னசைக்காமல் என்னதான் அப்படிப் பார்க்கிறாய்....? என் தனிமையை சிதைத்து எறிந்தவாறு .........! . வெகு நேரம் பொறுத்துக்கொண்டேன் தூக்கம் கண்ணை அசத்துகையில் இப்பார்வையின் இம்சை தீரக்கூடும் என்பதாலே.........! . இனிப் பொறுமை இல்லை கண்ணாடிச் சுவர் விலக்கி அவளைத் தூக்கி ஜன்னல் கதவுகளையும் தாண்டி வீசினேன்.......! . விழும் சத்தம் என் காதுகளை சிரிக்க வைத்தது இனி என் தனிமை தனியாய் அடைபட்டுப் போகட்டுமேனவே கண்களைக் கொட்டிச் சாய்த்தேன்.......! . காதோரம் வெகு நாளாய் பயிற்சி கைவிட்ட ஓர் இசைக் கலைஞ்சன் ஆர்வமே இல்லை என்பதுபோல் தன்போக்கில் வாசிக்கிறான்..........! . பொறுமை நிலைதவறி சில ஊசிமுனைகளில் மோதி நொறுங்கியது ஒரு வித வெறுப்போடு......! . மீண்டும் விழித்தேன் ஒரு இசைக் கலைஞ்ஞன் அல்ல இங்கே ஓர் இசைகுழுவாய் என்னைச் சுற்றி சுற்றி இசை அமைக்கும் கொசுக்கள்.........! . எழுந்து இல்லத்திலிருந்து நிலவொளிக்குள் புகுந்து இருளின் திரி அணைத்தேன், உடைந்த இசையின் ஓர் பகுதியை நிலவொளியில் தொலைத்துச் சென்றேன்.......! . காற்றோடு சேர்ந்தே நானும் உலா வருகையில் சட்டெனப் பார்வையில் பட்டது தூக்கி வீசப்பட்டவள் அதோ..... முகம் குப்பரக் கிடக்கிறாள்.......! . பருவநிலா அவள் அழகில் நனைந்து நிற்ப்பதையும் பார்த்தேன்... குப்பரக் கிடக்கிறவள் அழுகிறாளோ....? மெல்ல சிரம் சாய்த்துப் பார்த்தேன்....! . என்மேல் கோபமே இல்லாததுபோல் சிரித்தபடியே அவள்.....! கதறி அழுததோ நான்...........! ஏனனில் உன்னை சிரித்தபடியே படைத்துவிட்டான்........! . மீண்டும் கண்ணாடிச் சுவருக்குள் சிரித்தபடி என்னைப் பார்க்காமல் பாவையாய் நீ............! தூக்கப் போர்வைக்குள் உன்னை மட்டும் நினைத்தபடி இன்னொரு பாவையாய் நான்..........! கலாசுரன் .

ஒரு காகிதம் கவிஞன் ஆகிறான் ...........!*
 நீ ரசித்தபடி
சில முனைகளால் 
என்னை துன்புறுத்தி மகிழ்வதுண்டு..........!


அத்துன்புறுத்துதல்
ரசனைக்குரியதாக இல்லை என்றும்
சுவாரச்யமாகவில்லை என்றும்
சொல்லிக்கொண்டு 
என்னை கசக்கி எறிவதுமுண்டு.......! .


 இது எப்படி என்று
அனைவருக்கும் எனக்களித்த
தண்டனைகளின் நிழல் வடுக்களைக் காட்டி
அதட்டியவாறு நீ கர்வம் கொள்வதுமுண்டு........! .


சில நேரங்களில்
ஆசை முத்தம் அளிக்கிறாய்..!
எனக்கல்ல உன் பேனாக்களின்
கால் தடங்களுக்கு மட்டும்.........! 


இத்தருணங்களில் எல்லாம்
சலனமின்றி தாங்கிக் கொள்கிறேன்
உன்னை வெறுக்கவும்
உன் கற்பனைகளை சபிக்கவும் முடியாமல்...........! .


ஏனனில் நான் காகிதம்...........!
நீ கவிஞன்..........! 
***
கலாசுரன்

கண் திறந்தபடியே தூங்கப் பழகுகிறேன்.........!

அமைதியாய் தூங்கு இல்லையேல் கற்பனைத் தென்றல் உன்னை செல்லமாய் தூக்கிச்செல்லக்கூடும்.....! என மனம் தனக்குத் தானே மௌனமாய் அதட்டிட புனைக்குள் இருந்து சிறு கற்பனை ஓன்று கேளிக்கையாய் எட்டிப்பார்த்தது .......! சட்டென விழிகளை மூடிக்கொண்டேன் நான் பார்க்கவில்லை என்றதுபோல் இருந்தும் கடைவிழி மயிரிழைத் துளைவழி கள்வனென்று உள் புகுந்து சிறு கரடாய் உறுத்த பெருகிடும் விழிநீரில் ஒரு அதிவேக எதிர் நீச்சல்........! கருவிழ்யின் சலனங்களைத் தாளமிட்டு சீரமைக்கும் ஓர் இசையமைப்பும் அரங்கேறியது முடிவிலியாய்.......! இனி தூக்கம் சற்று கலையட்டுமெனவும் எழுதித் தொலையட்டுமெனவும் என் கை அறியாது புனை ஏந்திட ஏமாற்றம் ஓன்று என்னை செல்லமாய் நலம் விசாரித்துச் சென்றது.......! சற்றும் இரக்கமின்றி கண் பார்வை தொலைவுக்கும் அப்பால் மறைந்தாய் புனைதொடுத்த தொடுவானத்து மின்னலாய்.........! புனைக்குள் இருந்து அவ்வப்போது கேளிக்கை பார்வை தொடர்கிறாய் வெளிவர மருத்தவாறு.........! வேறு வழியின்றி கண் திறந்தபடியே தூங்கப் பழகுகிறேன்.........! கலாசுரன்

வரிசை..............!


*
விழியோரமாய் 
சற்றும் சேதமின்றி தொடர்வதுண்டு 
சில சோகங்களின் அணிவகுப்பு.. 


இதழோரங்களில் 
சிறிது புன்னகை அணிந்து செல்கிறேன் 
பிறர் பரிதாபத்திலிருந்து தப்பிச் சென்றவாறு.. 


இருந்தும் இன்னொரு நான் 
வழியோரமாய் நின்றபடி வீசும் 
பரிதாபத்தின் சற்று நீளமான சாட்டைக் கண் வீச்சு..


அதன் முத்தங்கள் 
பரிசளித்துச் சென்ற காயங்களை 
என் அழகுக் கனவுகள் 
முதுகுப் பகுதியை காண்பித்தபடி 
திரும்பி நின்று அழுகின்றன.. 


உதிரும் என் விழிநீரைப் 
பறித்துக்கொண்டு 
ஆனந்தத்தில் என்பதுபோல் 
வேகமாகச் செல்கிறது காற்று.. 


கண் துடைத்து 
திரும்பிப் பார்க்கையில் 
என் முதுகைப் பார்த்தவாறு 
அழுதபடி நீ..! 
*
***
கலாசுரன் 


நன்றி திண்ணை 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004251&format=html

பாடம்............!

கோதை இவள் கண்ணசைக்க பாதை எங்கும் சீரமைத்து மாதை அவள் ஈன்ற்றதன்று வாழ்தல்....! . வேடம் ஓன்று போட்டுவிட்டோம் ஓடும் எந்தன் கால்களுக்கு லாடம் ஓன்று தானமைக்க வாடும் இந்த பாதை என்று மோதல்.........! . போதை அதன் மயக்கம் போல் காதை ஒன்றாய் கெடுத்துவிட்டு வாதை என்று அடித்துசென்ற காதல்......! . காடும் என்னை அணைத்துவிட்டு பாடும் எந்தன் பண்கள் என்று பாடம் ஓன்று தீட்டிவிட்டு போடும் அன்று புள்ளி ஓன்று, சாதல்.........! கலாசுரன்

உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........!*
எப்பொழுதும் இல்லை எனினும் 
உள் சென்று வெளிவர அவைகளில் ஒன்றாய் 
உருமாறிச் செல்கிறேன் 
சில மௌனங்களுடன்..


ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்..!


சுவரின் கீழ் மூலையோரத்து 
வெடிப்புகளில் மழலைகளாய் 
தூங்கிக்கொண்டிருக்கும் தூசிகள்..!


அவ்வப்போது 
என் காலணிகள் 
சுவருக்கு பரிசளித்த 
மதிப்பற்ற ஓவியங்களாகும் 
சில அழுக்குக் கறைகள்..!


கூரையில் ஆங்காங்கே 
ஊசலாட்டும் காற்றுக்கு 
இசையமைத்தபடி 
நடனமாடும் ஒட்டடைத் தொங்கல்கள்..! 


அதோ..... 
தண்ணீர்ப் பானைமேல் 
நான் பருகி முத்தமிட்டு வைத்தபின் 
அடுத்த முத்தத்திற்கு 
தலை கீழாய் தவம் புரியும் 
வெள்ளிநிற கோப்பை..! 


தூசிகளை செல்லமாய் 
வருடிய கழைப்புடன் 
இன்னொரு மூலையில் 
நின்றபடி தூங்குகிறான் துடைப்பான்..!


ஒருவித வெட்கத்துடன் 
முகம் மறைத்தபடி 
குப்புற கிடக்கும் 
என்னருமைப் பேனாக்கள்..!


தோரணங்களாய் தொங்கியபடி 
ஒரு செவ்வகப் பந்தலிடும் 
சற்றும் தூசி தட்டாத நினைவுகளுடன் 
என் மேஜை விரிப்பு..! 


என் கவிதைகளை 
மௌனமாய் வாங்கிவிட்டு 
அறை எங்கும் சிதறிச் சென்று 
என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல் 
நடித்துக்கொள்ளும் தூசிப் போர்வை அணிந்த 
சில காகிதங்கள்..! 


இவை அனைத்தும் சரளமாய் நாம் காண 
இவைகளின் நிழல்கள் ஏன் நடுங்குகின்றன..? 


பீடத்தின் மேலிருக்கும் 
ஒற்றைத்திரி விளக்கின் சுடர் 
காற்றில் உலைகிறது 
அனைத்தின் நிழல்களையும் நடுக்கியவாறு..! 


இருள் சூழக்கூடும்...!

தடுத்திட ஆவேசமாய் ஓடிச்சென்றேன்.. 
என் ஓட்டம் முழுமையடையும் முன் 
எங்கும் இருள், ஒருவித புகை மணம்.. 


காண்பிக்க ஏராளம் இருக்கிறது 
எங்கேயும் போய் முட்டிக்கொள்ளாது 
விளக்கு விழிக்கும் வரை அங்கேயே இருங்கள்..


 இப்போது 
வத்திப்பெட்டி தேடிக்கொண்டிருக்கிறேன்..! 
*
***
 கலாசுரன் 
 நன்றி திண்ணை 


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005162&format=html . .

சில தேன் துளிகள் மிச்சமாகின்றன...........!

இரவொரு பூவாய் மணம் வீசியபடியே இருள் தேன் சிந்தி எங்கும் படர்கிறது........! அதை தனியாய் முகர்ந்துண்டு தீரச் செய்யும் முழுநிலவு.........! இருந்தும் சில தேன் துளிகள் மிச்சமாகின்றன...........! சில மறைவுகளின் மறைவில் மறைந்தபடி........! அதையும் உண்பதர்கெனவே மறைவுகளை தாண்டி சலனங்கள் அறியாது மெல்ல எட்டிப் பார்க்கிறது நிலவு..........! அதே நேர் கோட்டில் மறைகிறது உயிர்கொண்ட தேன் துளிகள்..............! மறைவுகளை பிரிய மறுத்து ஒருபுற அணைப்பில் முத்தமிட்டபடி அவை சாயும் தளங்களின் வளைவு நெளிவுகளில் சற்று நீண்டவாறு........! விடாது தன் பார்வைக் கோணங்களை தொடர, வழுக்கி தொடுவானத்து இடுக்கில் விழுந்து தொலைகிறது நிலவு அடுத்த பகலின் வேட்டைக்கான துவக்கமாய்...........! கலாசுரன்